கடந்த நூற்றாண்டின் மகத்தான அறிவியல் சாதனைகளில் முக்கியமானது ’சோதனைக் குழாய் குழந்தை’. கருப்பைக்கு வெளியே ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கருமுட்டையையும் இணைத்து கருவைச் செயற்கையாக உருவாக்கும் முறை அது.
இந்தியாவில் 1978, அக்டோபர் 3 அன்று அது சாத்தியமானது. அதை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியவர் டாக்டர் சுபாஷ் முகர்ஜி. அந்த வகையில் பிறந்த முதல் குழந்தை துர்கா. உலக அளவில் ‘சோதனைக் குழாய்’ முறையில் பிறந்த இரண்டாவது குழந்தை துர்கா.
துர்கா எனும் கனவைச் செயற்கை முறையில் நனவாக்கி, மாபெரும் சாதனையைப் படைத்த அந்த மருத்துவருக்கு அப்போது பாராட்டுகளோ புகழோ கிடைக்கவில்லை. மாறாக, கண்டனங்களும் அவமரியாதைகளுமே பரிசாகக் கிடைத்தன. அவரது அறிவியல் விளக்கங்களைக் கேட்கவும் எவரும் தயாராக இல்லை.
நடைமுறையில் சாத்தியமற்றது என அவருடைய அரிய சாதனை புறந்தள்ளப்பட்டது. அது மருத்துவ மோசடி என்று அரசு அறிவித்தது. அவரைத் தற்கொலைக்கு இட்டுச்சென்ற துன்புறுத்தல்கள் அவை.
1986இல் டாக்டர் டி.சி.அனந்தகுமார் இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கிய பின்னரே, சுபாஷ் முகர்ஜியின் சாதனை ஏற்றுக்கொள்ளப்பட்டது; அவரின் மகத்துவத்தை உலகம் அறிந்தது. வாழும்போது கிடைக்காத அங்கீகாரமும் மரியாதையும் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னரே முகர்ஜிக்குக் கிடைத்தன.
2002இல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் முகர்ஜியின் சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அவரால் இந்தப் புவிக்கு வந்த துர்கா எனும் கனுப்பிரியா அகர்வால், தனது 25ஆம் பிறந்த நாள் அன்று தனது பிறப்பு குறித்தும் முகர்ஜி குறித்தும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கிறது. அந்தப் பேட்டி டாக்டர் சுபாஷ் முகர்ஜியின் சாதனையை வரலாற்றில் நிலைநிறுத்தி உள்ளது.
- ஹுசைன்