காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்; சிறை சென்றார் வினோபா பாவே. 1940ஆம் ஆண்டு ‘முதல்' சத்தியாகிரகராக காந்தியால்மக்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டார்.
விடுதலைக்குப் பிறகு, சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார். தெலங்கானா பகுதியில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஏழை மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிக்கொண்டிருந்தது. அந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது.
மத்திய, மாநில அரசுகள் இந்தப் போராட்டத்தை ஒடுக்க முனைந்தன. ‘நிலம் இல்லாததால்தான் ஏழைகள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குச் சென்றிருக் கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் நிலம் வழங்கப் போவதில்லை’ என்பதை உணர்ந்த வினோபா, இதற்காக ஒரு திட்டத்தை ஆரம்பித்தார். அதுதான் ‘பூமி தான இயக்கம்.’
நிலம் அதிகம் இருக்கும் செல்வந்தர்களிடம், நிலத்தைத் தானமாகப் பெற்று, அதை ஏழை மக்களுக்குக் கொடுக்கும் திட்டம். பலரும் இந்தத் திட்டத்துக்கு நிலங்களைத் தானமாகக் கொடுக்க முன்வந்தனர். இதனால் இந்தத் திட்டத்தை ஒரு பெரிய இயக்கமாக மாற்றினார் வினோபா.
இதற்காக இந்தியா முழுவதும் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொண்டார். 13 ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்றார். பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு நிலம் கிடைத்தது. பூமி தான இயக்கத்தை, சர்வோதய சங்கம் ஒருங்கிணைத்தது.
வினோபா தன் வாழ்நாளில் சுமார் ஒன்றரை லட்சம் கிராமங்களிலிருந்து சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்றுக்கொடுத்தார். இவரின் மறைவுக்குப் பிறகு, இவரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக 1983ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- ஸ்நேகா