சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | விளையாட்டு: சுதந்திரத்துக்குப் பின் முதல் ஒலிம்பிக் பதக்கம்

மிது

சுதந்திர இந்தியாவில் விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப் பதக்கம் மிகப் பெரிய திருப்புமுனை.

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி நிகழ்த்திய சாதனையைப் போல வேறு எந்த அணியும் செய்ததில்லை. 8 தங்கப் பதக்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை இந்திய ஹாக்கி அணி வென்றுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1928ஆம் ஆண்டு முதலே ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி விளையாடி வருகிறது. 1928, 1932, 1936 எனத் தொடர்ச்சியாகத் தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது. ஆனால், இந்தச் சாதனை நிகழ்ந்ததெல்லாம் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில்.

1948இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தியா ஒரு சுதந்திர நாடாக முதன்முறையாகப் பங்கேற்றது. காலனி நாடாக எந்த நாட்டிடம் இருந்ததோ அந்த நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இருந்துதான் இந்தியாவின் ஒலிம்பிக் பயணம் தொடங்கியது.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரே ஒரு பதக்கத்தை வென்றது. அது, இந்திய ஹாக்கி அணி மூலம் கிடைத்த பதக்கம். இறுதிப் போட்டியில் நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்தை எதிர்த்துதான் இந்தியா விளையாடியது. அதில், 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

அந்த வகையில் சுதந்திரம் அடைந்த பிறகு 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப் பதக்கம், சுதந்திர இந்தியாவின் ஒலிம்பிக் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

- மிது

SCROLL FOR NEXT