இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கும் சூழலில், பாகிஸ்தானுடன் போர் புரிவதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வு தரும் என்பதுபோல் பல வீராவேசக் கருத்துகள் வெளியிடப்படுவதைப் பார்க்கிறோம். இந்தத் தருணத்தில், ஏன் இரு நாடுகளும் சண்டையிட்டுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியுடன் பலரது மனசாட்சியை உலுக்கியிருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் அலிசே ஜாஃபர்.
‘பிரச்சினையை நீதான் தொடங்கினாய்’ என்று ஒரு தரப்பும், ‘இல்லை… நீதான் இதற்குக் காரணம்’ என்று மற்றொரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்வதால் என்ன பயன் என்று துணிச்சலாகக் கேட்கிறார் இஸ்லாமாபாதில் வசிக்கும் அலிசே. “நான் பத்திரிகையாளர் அல்ல. அரசியல், அரசு நிர்வாக முடிவுகள் தொடர்பாகக் கருத்து சொல்லும் அளவுக்குத் தகுதி கொண்டவளும் அல்ல. நான் என் சிந்தனையில் தோன்றியதை - என் மனது சொல்வதைத்தான் பதிவுசெய்கிறேன்” என்று எளிமையாகப் பேசுகிறார். தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் எழுதியிருக்கும் வாசகங்கள் இரு நாட்டு மக்களையும் நெகிழச் செய்திருக்கின்றன. குறிப்பாக, இந்தியர்களிடையே அத்தனை வரவேற்பு!
“உலகத்தைப் பொறுத்தவரை இந்தியாவும் பாகிஸ்தானும், தொடர்ந்து மோதிக்கொள்ளும் சகோதரர்கள். அப்பா பொம்மை வாங்கித் தருவார்; காரில் வெளியில் கூட்டிச் செல்வார்; செலவுக்குப் பணம் தருவார் என்று அவரிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்யும் சகோதரர்கள் நாம். பல சமயங்களில், நாம் விவாகரத்து பெற்ற ஒரு தம்பதியைப் போல் இருக்கிறோம். இடத்தைப் பகிர்ந்துகொண்டதில் யாருக்கு இழப்பு அதிகம் என்ற சச்சரவில் ஈடுபட்டிருக்கின்ற நாம், ஒன்றாக இல்லை எனும் உண்மையை இன்னமும் ஏற்றுக்கொள்ளாத தம்பதியாக இருக்கிறோம்” என்று உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறார்.
பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த அலிசே, வெளிநாடுகளில் கல்வி பயின்றவர். பாகிஸ்தானின் கொள்கை முடிவுகள் தனக்கு உவப்பில்லாததாகத் தோன்றினால் சமூக வலைதளங்களில் அதைப் பற்றி விமர்சிக்கத் தயங்காதவர். அவரது சமீபத்திய பதிவை 12,000 பேர் லைக் செய்திருக்கிறார்கள். 5,000-க்கும் மேற்பட்டோர் பகிர்ந்திருக்கிறார் கள். அலிசேயைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக்கூட இந்தியர் ஒருவர் எழுதி இருக்கிறார். இந்தியர்களும் பாகிஸ்தானியர் களும் எப்போதும் சண்டையிட்டுக்கொள்பவர்கள் என்ற தோற்றத்தைத் தகர்த்து நட்புக் கரம் நீட்டியிருக்கிறார் இந்த பாகிஸ்தான் சகோதரி. சரி, இந்தப் பக்கம் பதில் தூது விடப்போவது யார்?
- சந்தனார்