புதுச்சேரியில் ஒரு தாத்தா 80 வயதைத் தாண்டிய தனது மனைவியைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். வீட்டு வேலைகள் செய்யவில்லை, சாப்பாடு போடவில்லை என்பதால் கொன்றுவிட்டார் என்கிறார்கள். ஒருவேளை, உடனடிக் காரணம் இதுவாகவே இருந்தாலும், தீராத மன அழுத்தங்களின் வெளிப்பாடாகவே இத்தகைய மரணங்கள் நிகழ்கின்றன. இவற்றைத் தனிப்பட்ட சம்பவங்கள் என்று ஒதுக்கிவிட முடியாது.
உலகில் பொதுவாகப் பிறப்புகள் குறைகின்றன. இறப்புகளும் குறைகின்றன. அதுதான் இன்றைய உலகின் பொதுவான போக்கு. மனிதர்களின் ஆயுட்காலம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது. இன்றைய உலகில் பத்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர். 2050-ல் இதுவே ஐந்தில் ஒருவராக மாறும் என்கிறார்கள். அப்படி என்றால் சுமார் 210 கோடிப் பேர்!
வயதான இந்தியா
இந்திய மக்களில் இளைஞர்கள் அதிகம் என்பதும் உண்மைதான். அதேநேரத்தில், உலகில் உள்ள வயதானோர் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், உலகில் அதிகமான வயதானோர் வாழும் இரண்டாவது நாடாகவும் இந்தியா உள்ளது. காலம் செல்லச் செல்ல இது மேலும் அதிகரிக்கும். இந்தியாவில் இன்னமும் 72% முதியோர் தங்களின் பிள்ளைகளின் குடும்பத்தோடுதான் வாழ்கின்றனர் என்பது சந்தோஷமான செய்திதான். எனினும், ‘குளோபல் ஏஜ் வாட்ச்’ எனும் அமைப்பின் ஆய்வின்படி, முதியோர் நலம் பேணுகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி வரிசையில் உள்ளது. இந்தியாவின் முதியோரில் 80% கிராமவாசிகள். 40% வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள். 73% பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். 90% பேருக்கு அரசின் எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் போய்ச் சேரவில்லை. வெந்ததைத் தின்போம்; விதி வந்தால் சாவோம் என்ற மனப்போக்கில்தான் இந்திய முதியோர்கள் பொதுவாக வாழ்ந்துவருகின்றனர்.
கண்ணியத்தின் அடையாளம்
வேகமாக மாறும் உலகில் வயதானவர்கள் தேவையற்றவர்கள் என்ற மனப்போக்கும் இருக்கிறது. பாகுபாடாகவும் அவமதிப்பாகவும் அவர்களை யாரும் எளிதாக நடத்திவிட முடிகிறது. ஆனாலும், பெற்றோர்களைப் பிள்ளைகள் கைவிடுவது என்பது பழைய காலம்போலத் தனிப்பட்ட விவகாரம் கிடையாது. அது ஒரு சட்டப் பிரச்சினை. இந்தியா முதியோர் நலனுக்காக ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்ட’த்தை 2007-ல் நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தை அமலாக்குவதற்கான விதிகளைத் தமிழகமும் உருவாக்கியுள்ளது. உறவினர்களால் ஒதுக்கப்பட்ட முதியோர்களுக்குச் சொத்துகள் இருந்தால், அவற்றை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பது வரை இச்சட்டம் பேசுகிறது.
தனிப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைதான் முதியோர்கள் பராமரிப்பு என்று அரசும் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட முடியாது. வசதி படைத்தவர்கள் முதுமைக் காலத்தைக் கழிக்க ஓய்வில்லங்கள் உதவுகின்றன. எனினும், எளிய மனிதர்கள் அவற்றுக்குப் பக்கத்தில்கூடச் செல்ல முடிவதில்லை. எளியவர்களுக்கும் இத்தகைய வசதிகள் கட்டணமில்லாமல் கிடைக்க வேண்டும். குறிப்பாக, தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். மூத்த குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கை, ஒரு சமூகத்தின் கண்ணியத்துக்கான அடையாளங்களில் ஒன்று!
- த.நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in