சிறப்புக் கட்டுரைகள்

அரசியல் பழகு: எது நவயுக புரட்சி?

சமஸ்

வெயில் கொளுத்தும் நண்பகல் வேளை. ஒரு இளைஞர் சந்திக்க வந்திருக்கிறார் என்று தகவல் வருகிறது. அலுவலக வரவேற்பறையில் அமரவைக்கச் சொல்லிவிட்டு, கீழே சென்று பார்க்கிறேன். ஒடிந்துவிடக் கூடிய தேகம், கருத்துப்போன முகம், குடம் நீரைக் கவிழ்த்ததுபோல வடியும் வியர்வை.. கையில் நான்கு புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்தார் அந்த இளைஞர். எல்லாம் ஒரு இயக்கத்தால் பதிப்பிக்கப்பட்டவை. “நீங்கள் இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு இதுபற்றி எழுத வேண்டும்” என்கிறார். புத்தகங்களைப் புரட்டினால், ஒரே புரட்சி புரட்சியாக உதிர்ந்து கொட்டுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்று அந்த இளைஞரின் சொந்த ஊர். சென்னைக்குப் படிக்க வந்தவரை, புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பேச்சு ஈர்த்திருக்கிறது. முதலில் விடுமுறை நாட்களில் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இப்போது இயக்கத்தின் பகுதிநேர ஊழியர். அன்றைக்குக் கல்லூரி வேளை நாள். “இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே, கல்லூரிக்கு இன்று போகவில்லையா?” என்று கேட்டேன். பல நாட்கள் இயக்கச் செயல்பாடுகள் அவருடைய கல்லூரி நாட்களை எடுத்துக்கொண்டிருப்பதை அவருடைய பதில்கள் உணர்த்தின. கல்லூரி மாணவர் எனும் அடையாளத்தோடு வெவ்வேறு கல்லூரிகளில் ஆள் சேர்க்கும் வேலைக்கு இயக்கம் அவரை இப்போது பயன்படுத்திக்கொண்டிருப்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நிறையக் கோபம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. “இந்த நாடு பெருமுதலாளிகளின் நாடு. இந்து பெரும்பான்மைவாதத்தின் நாடு. ஆதிக்கச் சாதிகளின் நாடு. எந்தக் கட்சி இங்கே ஆட்சிக்கு வந்தாலும் அவை பார்ப்பனிய - பனியா, ஏகாதிபத்திய, தரகு முதலாளிய அரசாங்கங்களையே அமைக்கின்றன” என்று வரிசையாகக் குற்றஞ்சாட்டினார். “இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகம். புரட்சிதான் ஒரே தீர்வு” என்றார். புரட்சி என்று அவர் குறிப்பிட்டது, ஆயுதக் கிளர்ச்சியை. அப்புறம் நாங்கள் டீ சாப்பிடச் சென்றோம். அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு, “தயவுசெய்து இந்தப் புரட்சியில் ஈடுபடும் முன், படிப்பை நீங்கள் முழுமையாக முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.

நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது? இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக்கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.

ஒருகாலத்தில், இந்த உலகின் பெரும் பகுதி மன்னர்கள் கையில் இருந்தது. அவர்களுடைய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுக்கு அதிகாரத்தோடு பேச எந்த வழியும் இல்லை. தங்கள் மீது திணிக்கப்படும் எதேச்சாதிகாரத்தையும் அநீதிகளையும் எதிர்த்துப் போரிட அந்நாட்களில் வேறு வழிகள் ஏதும் இல்லை. ஆயுதபாணி எதேச்சாதிகாரத்திடம் பேச ஆயுதபாணி மொழியையே மக்கள் இயக்கங்களும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி இப்படி நாமறிந்த எல்லா கிளர்ச்சிகளும் ஆயுதவழிப் போராட்டங்களாக நடக்க அதுவே காரணமாக இருந்தது. அன்றைக்கு அதற்கான நியாயமும் இருந்தது. இந்த ஜனநாயக யுகத்தில் அரசியல்வழி அறப்போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளுமே மிகப் பெரிய ஆயுதங்கள். சண்டை அல்ல; சமத்துவத்துக்கான உரையாடலே மிகப் பெரிய சவால்.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு, 2001 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல். கடந்த நூற்றாண்டின் இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துப்போன ஆயுதக் கிளர்ச்சி என்னும் போராட்ட வடிவம், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் பேரழிவைச் சந்தித்தது. இன்றைய உலகில், ஆயுதக் கிளர்ச்சி எதிர்கொள்ளும் மிகப் பெரிய எதிரி உலகமயமாக்கப் புவியரசியல். 2001-க்குப் பிறகு, இந்த உலகில் தனித்த ஒரு நாடு என்று ஒன்று எதுவுமே கிடையாது. எல்லா அரசாங்கங்களும் பொருளாதார, ராணுவ, ராஜ்ஜிய வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டவை. உலகின் ஏதோ ஒரு சின்ன தீவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குழு ஆயுதத்தைத் தூக்கினால், அது அந்த அரசாங்கத்தை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த அமைப்பையும் எதிரியாக்கிக்கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நம் கண் முன்னே நடந்த விடுதலைப் புலிகளின் அழிவும், தமிழ் இனப் படுகொலையும்!

பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை விலையாகக் கொடுத்து, எல்லாப் பெரிய எதிரிகளையும் கடந்து ஒரு ஆயுதபாணி இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இறுதியில் அது நிறுவும் ஆட்சி எப்படிப்பட்டதாக அமைகிறது? எந்த ஜனங்களின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அதே ஜனங்களையும் ஜனநாயகத்தையும் கடைசியில் காலில் போட்டு நசுக்குவதே இதுவரை நாம் கண்ட வரலாறு.

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரில், “அங்கே பாருங்கள், இங்கே பாருங்கள்” என்றெல்லாம் இன்றும் உதாரணம் காட்டுபவர்கள் அடிப்படையில் இன்னமும் இந்தியாவில் நிகழ்ந்த பெரும் புரட்சியை உள்வாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். உண்மையில், புதிய நூற்றாண்டுக்கான ஜனநாயகப் புரட்சியை உலகுக்கே அறிமுகப்படுத்தியது இந்த மண். உலகத்தின் பெரும் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, உலகின் மிக வலிய ராணுவத்தை வைத்திருந்த ஒரு பேரரசை எதிர்த்து, சாதிய - நிலவுடைமை ஆதிக்கக் கட்டமைப்பில் குறைந்தது 2,500 வருடங்கள் உழன்ற ஒரு அடிமைக் கூட்டம் - அவர்களில் பெரும்பான்மையோர் ஏழைகள், எழுத்தறிவற்றவர்கள், விவசாயிகள் - நடத்திய அகிம்சை வழியிலான இந்தியச் சுதந்திரப் போராட்டமே உண்மையான ஜனநாயகப் புரட்சி. அது காந்தி இந்த உலகுக்குக் கொடுத்த பெருங்கொடை!

(பழகுவோம்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

SCROLL FOR NEXT