பாகிஸ்தான் எல்லையை விட்டு நிலம், நீர், காற்று ஆகிய எந்த வழிகளில் கடந்து செல்கிறவர்களும் போலியோ தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதற்கான அரசு சான்றுடன்தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது அரசு. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தானியர்களுக்கு நெருக்கடி. பாகிஸ்தானின் சுகாதார அமைப்புகளுக்குக் கூடுதல் வேலை. வெளிநாடுகளுக்கோ பாகிஸ்தான் என்றாலே அச்சம். இப்படியொரு கட்டுப்பாடு தேவை என்று போலியோ ஒழிப்புக்கான சுதந்திரக் கண்காணிப்பு வாரியம் 2011-லேயே யோசனையாகத் தெரிவித்தது.
அன்றாடம் ஆயிரக் கணக்கில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலையில் விமான நிலையங்களிலும் சாலை மார்க்கங்களிலும் போலியோ தடுப்பூசி மையங்கள் எத்தனை நிறுவப்பட்டுள்ளன? பஞ்சாப், பலூசிஸ்தான், பக்டூன்காவா பகுதிகளில் அப்படி ஏதேனும் இருக்கின்றனவா? நமக்கு அப்படியொன்றும் தகவல் இல்லை. எங்கெல்லாம் தடுப்பூசி போட்டு இந்தச் சான்றிதழைத் தருகிறார்கள் என்று சில மருத்துவமனைகள், மருத்துவ மையங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அரசு வெளியிட்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பல மையங்களில் தருவதற்குச் சான்றிதழ்கள் இல்லை என்று முதலிலேயே கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். தலைநகர் இஸ்லாமாபாதில் மட்டுமே தடுப்பூசியும் சான்றிதழும் கிடைக்கின்றன.
பாகிஸ்தான் அரசு மக்கள் அனைவரும் அறியும்படி இது தொடர்பாக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள எங்கே செல்ல வேண்டும், சான்றிதழ்களை யாரிடம் பெற வேண்டும் என்று கூற வேண்டும். இதில் தீவிரம் காட்டவில்லையென்றால் மேலும் பல துயரங்களுக்கு ஆட்பட நேரும்!