தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை
இதை எனக்குச் சொன்னது எனது நண்பர் எழுத்தாளர் ஜெயமோகன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் ஈ.கே.நாயனார். கேரளத்தின் முதல்வராக இருந்தார். அவர் தொலைக்காட்சியில் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரடி ஒலிபரப்புத் தொடர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம் தொலைபேசியில் ஒருவர் மிகுந்த கோபத்துடன் அவரை வசை பாடினார். ‘‘உங்களதைப் போன்ற மோசமான அரசை இதுவரை கண்டதில்லை. ஊழலின் உச்சத்தை எட்டிய அரசு உங்களுடையது’’ என்றார். அவர் சொன்னதையெல்லாம் நாயனார் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அடுத்து வந்தவர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அவர் அரசை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளினார். சொர்க்கமே கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகளால் இறக்கி வைக்கப்பட்டது என்பதுபோலப் பேசினார். அவர் பேசி முடித்ததும் நாயனார் ‘‘இது நம்ம சைடு லூசு!’’ என்றார்.
இது தமிழகத்தில் நடந்திருந்தால் ‘மன்னிப்புக் கேள்’ போராட்டம் நடந்திருக்கும். நமக்கு நம் மீது தேவைக்கு அதிகமான மதிப்பு. தலைவர்களும் தங்களை ‘வானத்து அமரர்கள்’ என நினைக்கிறார்கள். ஆங்கிலத்தில் irreverence என்பார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன் நமது கணியன் பூங்குன்றனார் அதையே ‘வியத்தல் இலமே’ என்கிறார். தமிழன் தனது ‘வியத்தல் இலமே’யை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மாறாகத் தன்னை வியந்து தருக்குறுவதைக் கண்டு அவன் அருவருப்பு அடைவதில்லை. கேரளத்தில் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகக் குறைவு. எனவேதான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஆகாயத்தில் உட்கார்ந்துகொள்ள அங்குள்ள தலைவர்களால் முடியாது. இந்த ஜனநாயகத் தன்மையே கேரளத்தின் தேர்தல்களை விறுவிறுப்பாக்குகிறது.
கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவந்தது, விழிஞ்சம் துறைமுகத்தை விரிவுபடுத்தியது, கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் கொண்டுவந்தது, இணையத்தை எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லும் அக்ஷயா திட்டம், ஏழைகளுக்கு 25 கிலோ அரிசி ஒரு ரூபாய் ஆகியவை நிச்சயம் சாதனைகளே!
எனக்குப் பிடித்தது அவருடைய மக்கள் தொடர்புத் திட்டம். அவரே நேரில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களிடம் மனுக்களை வாங்குகிறார். முடிந்தால் பிரச்சினையை உடனே தீர்க்கிறார். மற்றொன்று, முதல்கட்ட மதுவிலக்காக 700 மது குடிப்பகங்களை மூடினார். இதனால் அவர் முதலாளிகளின் பகையை ஈட்டிக்கொண்டாலும் மக்களின் நன்மைக்காக இந்த நடவடிக்கையை எடுத்தார். இடதுசாரிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கே அவர்களது கொள்கை என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், சாண்டி திரும்பவும் பதவிக்கு வர சோலார் பேனல் ஊழல் வழக்கு பெரும் தடை. சரிதா நாயர் என்ற பெண், சோலார் பேனல் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்று பலரை ஏமாற்றியதற்காக 2013-ல் கைது செய்யப்பட்டார். ஆறு கோடியிலிருந்து பன்னிரண்டு கோடி வரை கைமாறியிருக்கலாம் என்கிறார்கள்.
சரிதா நாயர், வக்கீல் வண்டு முருகன் நிலைமைக்கு உம்மன் சாண்டியைக் கொண்டுவந்துவிட்டார். பணம் வாங்கச் சொன்னதே உம்மன் சாண்டிதான் என்று சத்தியம் செய்கிறார் அவர். “ஐயோ! இல்லவே இல்லை” என்று சாண்டி சொல்வதை எதிர்க்கட்சியினர் நம்ப மறுக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு, இந்தக் குற்றச்சாட்டு காணாமல் போய்விடும் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆனாலும், இன்று இந்தியாவிலேயே மிக மோசமான ஊழலாட்சி சாண்டியின் ஆட்சி என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்ட இது உதவுகிறது.
கேரளத்தில் லஞ்சம் மற்றைய மாநிலங்களைவிடக் குறைவு. கேரளத்தின் முன்னேற்றத்தில் அரசின் பங்கு நிச்சயம் இருக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்திய மாநிலங்களில் கேரளம் வருமானத்தில் ஐந்தாவது. ஆனால், கல்வி அறிவில் முதலிடம். தமிழகம் (சிறிய மாநிலங்களை விட்டுவிட்டால்) மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மனித வள மேம்பாட்டில் கேரளமே முதன்மை. இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம், வெளிநாட்டில் பணிசெய்யும் மலையாளிகள் அனுப்பும் பணம். ஆனாலும் விரிகுடாவில் வேலைதேடும் இந்த யாத்திரை 1972-ல் தொடங்குவதற்கு முன்பே நிலச் சீர்திருத்தம் போன்ற அரசு நடவடிக்கைகளால் கேரளம் தனது வறுமையை ஓரளவுக்குக் குறைத்துள்ளது. ஆனால், இன்று 35 லட்சத்துக்கும் மேலான கேரளத்தவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் இது மாநில மக்கள்தொகையில் ஏறத்தாழ 10%. 2013-ல் மட்டும் அவர்கள் ரூ.60,000 கோடியை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். 2016-17-ல் கேரள நிதி நிலை அறிக்கை மாநில அரசின் மொத்த வருமானமே ரூ.84,000 கோடிதான் என்கிறது.
இந்த உண்மை மக்கள் தங்களின் முன்னேற்றத்துக்காக அரசை மட்டும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.
-பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com