பழ.அதியமான் தமிழின் முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவர். ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’, ‘அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்’ ஆகிய ஆய்வு நூல்களை எழுதியிருக்கும் இவரிடம், தமிழின் முக்கியமான வரலாற்று, ஆய்வு நூல்களைப் பற்றிக் கேட்டோம்.
ஆழ்பாதாளத்தில் வாழ்ந்துவந்த தமிழ் ஆய்வுலகத்தை வெளிஉலகத்தோடு உறவாடச் செய்தவர் க.கைலாசபதி. அவரைத் தொடர்ந்து, அந்த நம்பிக்கையை உயிர்ப்புடன் பல காலம் கட்டிவளர்த்தவர் கா.சிவத்தம்பி. நா.வானமாமலை உள்ளிட்டவர்களால் உந்துதல் பெற்ற சென்ற தலைமுறை அறிவாளர் பலர் புத்தாயிரத்தில் ஆய்வுப்பரப்பை விரித்தனர். ஆழமானதா என்ற சந்தேகம் இருப்பினும் பரப்பு பெரிதாகியுள்ளது.
துறை ஆய்வாக இருந்த தமிழாய்வு சமூகம், பண்பாடு, மானிடவியல், வருங்காலவியல், வரலாறு என இணைந்து பல்துறை ஆய்வாக இன்று மலர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது. பழமை மாறி நவீனமாகியுள்ளது. சுவாரசியமும் ஆழமும் ஆய்வுகளில் சேர்ந்துள்ளன.
இவ்வகையில் ஆ.சிவசுப்பிரமணியன், அ.மார்க்ஸ், ஆ.இரா.வேங்கடாசலபதி, பொ.வேல்சாமி, எஸ்.வி.இராசதுரை-வ.கீதா, க.திருநாவுக்கரசு போன்ற கல்விப்புலம் சார்ந்த மற்றும் சாராதவர்கள் குறிப்பிடத் தகுந்த முன்னெடுப்புகளைச் செய்துள்ளனர். ராஜ்கௌதமன், க.பஞ்சாங்கம், வீ.அரசு, தொ.பரமசிவன், அ.ராமசாமி போன்றோர் தமிழ் இலக்கிய ஆய்வுக்கும் நவீன இலக்கிய உலகத்துக்கும் பாலமாகச் செயல்பட்டனர்/செயல்படுகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை ஆய்வாளர் பட்டாளத்தினர், ப.சரவணன் போன்றோர் சிறிதுக்கும் பெரிதுக்கும் சென்னைச் சான்றுகள். மாற்றுவெளி, காலச்சுவடு, கவிதாசரண், மேலும் போன்ற இதழ்கள் இவ்வகை ஆய்வுகளுக்கு உற்சாகம் தரும் இலக்கிய இதழ்கள்.
ஆ.இரா.வேங்கடாசலபதியின் முன்னோடி ஆய்வு முயற்சிகளின் விளைபயனாய்ப் பதிப்புகள் ஆழமும் செம்மையும் பெற்றன.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வளர்ந்துவருகிறது. புதுக்கோட்டை ஞானாலயா புதுக் கட்டிடத்தில் பொலிகிறது. மறைமலை அடிகள் சேகரிப்புகள் இதற்கு விதிவிலக்கு. சாமிநாதையர் நூலகம் இலக்கமயமாகிறது (டிஜிட்டல் மயம்). 20-ம் நூற்றாண்டு ஆய்வுகளுக்கு அடிப்படையான இதழ்களும் ஓரளவுக்குத் தொகுதிகளாகிவிட்டன. மா.ரா.அரசு, இ.சுந்தர மூர்த்தி முயற்சியில் இந்த இதழியல் விவரங்கள் பத்துக்கும் மேற்பட்ட நூல்களாகிவிட்டன. கலைஞன், சந்தியா போன்றோர் ஏற்பாட்டால் 20-க்கும் மேற்பட்ட இதழ்கள் தொகுப்புகளாகியிருக்கின்றன.
புத்தாயிரத்தில் வந்த சில முக்கிய நூல்கள்
1. பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
- ஆ.இரா.வேங்கடாசலபதி, (காலச்சுவடு பதிப்பகம்). பாரதி பாடல்கள் நாட்டுடைமையானதன் முழுப் பின்னணி. இதுவரை வெளிவராத ஆதாரங்களுடன் கூடிய நூல்.
2. மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
- ய.மணிகண்டன், (காலச்சுவடு பதிப்பகம்). 2014. மணிக்கொடியும் பாரதிதாசனும் இணைய முடியாத இருவேறு துருவங்கள் எனக் கருதப்பட்டு வந்த மாயையை ஆதாரத்துடன் விலக்கிய நூல்.
3. திருமூலர்: காலத்தின் குரல்
- கரு.ஆறுமுகத் தமிழன், (தமிழினி பதிப்பகம்) திருமூலரின் வரையறுக்க முடியாத காலத்தை அவரது குரலிலிருந்து கண்டுணர்த்திய, அழகு தமிழில் எழுதப்பட்ட நூல்.
4. சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு
- க.பஞ்சாங்கம், (அன்னம் பதிப்பகம்) காலந்தோறும் சிலப்பதிகாரப் பனுவல் பார்க்கப்பட்டுவந்த பார்வையை நவீன தன்மையுடன், தரவுகளின் அடிப்படையில் சுவையாகச் சொல்லும் நூல்.
5. எம்.சி.ராசா வாழ்க்கை வரலாறு - எழுத்தும் பேச்சும்
- வாலாசா வல்லவன் (அருள் பாரதி பதிப்பகம்) பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட 20-ம் நூற்றாண்டுத் தலைவர்களின் வரலாறுகள் மீட்டெடுக்கப்பட்டு, புத்தாயிரத்தில் நூல்களாகியுள்ளன. அவற்றுள் ஒன்று இந்நூல்.
6. காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
- ப.திருமாவேலன், (தென்திசைப் பதிப்பகம்) திராவிட இயக்கத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய நூல்.
7. தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும்
- அ.பெரியார், (முரண்களரி பதிப்பகம்) மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்னர் எழுந்த பிரச்சினைகளை அலசும் நூல்.
8. ஏ.ஜி.கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்
- பசு.கவுதமன், (ரிவோல்ட் பதிப்பகம்). இடதுசாரித் தலைவர்கள் பற்றிய முக்கிய நூல்களில் ஒன்று.
9. குடி அரசு 1925-1938 பெரியாரின் எழுத்தும் பேச்சும்
- கொளத்தூர் தா.செ.மணி, (பெரியார் திராவிடக் கழகப் பதிப்பகம்) இவை இணையத்திலும் கிடைக்கின்றன.
10. கவரி, கருமை, காளமேகம்
- க.கதிரவன், (இராஜகுணா பதிப்பகம்) தமிழாய்வுக் கட்டுரைகளை ஆழமாகவும் சுவையாகவும் எழுத முடியும் என்பதற்கு இந்நூல் சான்று.