ஞாபகம் இருக்கிறதா? பாலை? இந்த உலகத்தில் பிறக்கும் எல்லா ஆக்டோபஸ்களையும் போலத்தான் பாலும் பிறந்தது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கடல்வாழ் மையத்தில் உள்ள தொட்டியில் பிறந்த அந்த ஆக்டோபஸ், 2010 உலகக் கோப்பைப் போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை துல்லியமாகக் கணித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றது.
முதலில் ஈரோ 2008 கால்பந்து போட்டிகளில்தான் வெற்றியைக் கணிக்க பாலைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பால் என்ற பெயருள்ள அந்த ஆக்டோபஸின் தொட்டியில் இரண்டு உணவு டப்பாக்களை வைப்பார்கள். இரண்டு டப்பாக்களிலும் அடுத்து மோதும் இரண்டு அணிகளின் கொடிகள் வரையப்பட்டிருக்கும். பால் எந்த உணவு டப்பாவை நோக்கிச் செல்கிறதோ அந்த அணி வெற்றியைக் குவிக்கும் என்பது நம்பிக்கை. 2010 உலகக் கோப்பைக்காக ஆடப்பட்ட 13 ஆட்டங்களில் 11-ஐச் சரியாகக் கணித்து பால் பெரும்பெயர் ஈட்டியது. இறுதிப் போட்டியிலும் ஸ்பெயின் கொடி
தாங்கிய உணவு டப்பாவில் உட்கார்ந்து வெற்றிச் செய்தியை முன்பே சொல்லிவிட்டது. ஸ்பெயினின் வெற்றிச் செய்தியைச் சொன்னதால் கடுப்பான ஜெர்மானியர்கள் சிலர், ஆக்டோபஸைக் கொல் வதற்கு மிரட்டல்களையும் விடுத்தனர். இந்த மிரட்டல் களுக்கெல்லாம் அஞ்சாமல் தன் ‘கடமை’யை ஒழுங்காகச் செய்தது பால்.
வேடிக்கையும் விவாதங்களும்
வேடிக்கையாகத் தொடங்கிய இந்தக் கணிப்பு விளையாட்டு, ஒருகட்டத்தில் பெரிய விவாதங்களையும் ஆராய்ச்சிகளையும் உருவாக்கத் தொடங்கிவிட்டது. பாலின் கணிப்பை விஞ்ஞானரீதியாகப் புரிந்துகொள்ளப் பலரும் முயன்றனர். தற்செயல் என்பதில் தொடங்கி, உணவு டப்பாவின் நிறம், மணம் வரை பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட்டன.
இத்தனை கணிப்புகளைச் செய்து குறுகிய காலத்தில் ஊடக வெளிச்சத்தை அதீதமாக அனுபவித்த பால், அக்டோபர் 2010-ல் காலமானது. தனக்கு வெளியே இன்னொரு உலகத்தில் நடக்கும் கால்பந்தாட்டத்தின் போக்குகளைத் தன் கைகளால் நிர்ணயிக்க முயன்ற அந்த ஆக்டோபஸ், கால்பந்தாட்டம் இருக்கும்வரை நினைவுகூரப்பட்டால் ஆச்சரியம் ஏதுமில்லை!