தமிழ்நாடு அரசால் அரசிதழில் 2020 பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட சட்டம் ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம்-2020’. காவிரி டெல்டா பகுதியில், விவசாய நிலங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான சட்டம் என்று இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் மிகத் தெளிவாக அதன் முதல் வரியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
காவிரி டெல்டா பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகள் ஓஎன்ஜிசி மூலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதிலும், எந்த விதமான புதிய வகை ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகள் இல்லாதபோதிலும், மாசு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு விஷயங்களில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேலும்மேலும் நடைமுறைப்படுத்தியபடி ஓஎன்ஜிசியின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதிலும் திடீரென்று கடந்த சில வருடங்களாக ஏதோ ஓஎன்ஜிசி இந்தப் பகுதியையே பாலைவனமாக்கிக்கொண்டிருக்கிறது என்று ஒரு சாரார் இந்த நிறுவனத்தையே பேசுபொருளாக்கியிருக்கிறார்கள்.
வருடந்தோறும் டெல்டா பகுதி விளைச்சல் முந்தைய ஆண்டுகளின் சரித்திரத்தை முறியடித்தபடியே அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதும், மத்திய அரசின் விருதுகளைத் தமிழகம் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதும் நாடறிந்த உண்மை.
இந்தப் பின்னணியில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் வந்தபோது, ஏதோ இந்தச் சட்டமே ஓஎன்ஜிசியை மூடி, மாநிலத்தை விட்டு வெளியே அனுப்புவதற்காக வந்த சட்டம் போன்ற ஒரு மாயையைக் கற்றறிந்தவர்களே ஏற்படுத்திவருவது வேதனையான விஷயம்.
சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின், புதிய கிணறு தோண்டும் திட்டம் ஏதும் இல்லை என்பதால், கடந்த ஆண்டிலோ இந்த ஆண்டிலோ ஓஎன்ஜிசி கூடுதல் நிலம் ஏதும் கையகப்படுத்தவில்லை. மாறாக, உற்பத்தி நின்றுபோன, மறு உற்பத்திக்கு வாய்ப்பு இல்லாத சுமார் 40 எண்ணெய்க் கிணறுகள் வளாகப் பகுதிகளான 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பகுதியில் எண்ணெய்க் கிணறுகளின் தளவாடப் பகுதிகளை உருவி எடுத்துவிட்டு, மீண்டும் விளைநிலமாக்கித் திருப்பித் தரும் பணியை இந்த ஆண்டில் மேற்கொண்டிருக்கிறது. இது மாதிரி கடந்த காலங்களில் திரும்ப அளிக்கப்பட்ட நிலப்பகுதிகள் நல்ல விவசாய நிலங்களாக விளைச்சல் தந்துகொண்டிருப்பது கண்கூடு.
இன்றைய தேதியில் ஓஎன்ஜிசி காவேரி அஸட்டின் கையகத்தில் (சொந்தமாகவும், வருட வாடகையிலும்) இருக்கும் டெல்டா பகுதி நிலப்பரப்பு 2,091 ஏக்கர் மட்டுமே. 2021-22-ல் தமிழகத்தில் நெற்பயிர் விளைந்த நிலப்பரப்பாக அரசுக் குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் பரப்பளவு 53.40 லட்சம் ஏக்கர். இதில் 0.04 சதவீதம் மட்டுமே தன் வசம் வைத்திருக்கும் ஓஎன்ஜிசிதான் எண்ணெய் வளத்தின் பெயரால் விவசாயத்தை அழித்துவருவதாகக் குற்றம்சாட்டப்படும் நிறுவனம்.
கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டன; அவ்வாறு மாற்றப்படுவதற்காகவே நீர்ப்பாசன வசதியிருந்தும் குடியிருப்பு வளாகங்கள் கட்டுவதற்காகவே தரிசாகப் போடப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவு என்று அரசியல்வாதிகளோ விவசாயச் சங்கங்களோ பூவுலக நண்பர்களோ சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ தகவல் சேகரித்து எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களா? போராட்டம் நடத்தியிருக்கிறார்களா?
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிய கிணறு கூடாது என்கிறபோது, இருக்கின்ற கிணற்றில் உற்பத்தி நின்றுபோனால் சீர்செய்து அதனை உயிர்ப்பிக்கக் கூடாது என்று சிலர் தங்கள் ஆதரவாளர்களைக் கூட்டி, மறியல் செய்து சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்கள்.
(மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்றால், குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பதுதானே ஒழிய, உயிருடன் இருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு மருத்துவம் செய்து உயிர்ப்பிக்கக் கூடாது; அவர்களை அப்படியே மரணமடையச் செய்ய வேண்டும் என்பதுபோல் இருக்கிறது அவர்களின் வாதம்). போராட்டங்களுக்கு வரும் யாரும் சைக்கிளிலோ நடந்தோ வருவதில்லை; பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களில்தான் வருகிறார்கள். அவர்களின் வீடுகளில் குமுட்டி அடுப்புகள் இல்லை; கேஸ் அடுப்புகளே உபயோகத்தில் உள்ளன.
24 பிரிவுகள் கொண்ட இந்தச் சட்டத்தில் இரண்டு பிரிவுகள் தவிர்த்து, வேறு எந்த இடத்திலும் ஓஎன்ஜிசிதான் என்றில்லை; எந்த ஒரு நிறுவனத்தையும் அழித்தொழிக்கும் விதமான நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. விவசாயத்தை மேம்படுத்த என்னென்ன செய்யலாம் என்பது குறித்த அக்கறை மட்டுமே உள்ளது. ஏதோ உள்நோக்கத்துடன், இந்தச் சட்டத்தையே ஓஎன்ஜிசி ஒழிப்புச் சட்டம்போல் வரித்துக்கொண்டு, ஓஎன்ஜிசியின் நடவடிக்கைகளை முடக்கி, அதன் உற்பத்தித் திறனை இரண்டே ஆண்டுகளுக்குள் 25% குறைத்து, ஓஎன்ஜிசி நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையே (ஏற்கெனவே சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேர்முக மற்றும் மறைமுக வேலைகளை இழந்துவிட்டனர்) கேள்விக்குறியாக்கி வைத்திருப்பதைத் தவிர்த்து இந்தப் போராட்டக்காரர்கள் சாதித்தது என்ன?
இந்தச் சட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசு குறித்த பிரிவுகளே இல்லாமல் இருப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம், விவசாய மேம்பாடுதானே ஒழிய தொழில் வளர்ச்சியை அழித்தொழிப்பது அல்ல என்பதற்கான அத்தாட்சி. சட்டத்தின் 22-வது பிரிவில் பின்னிணைப்புப் பட்டியல் ஒன்றில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட மாவட்டப் பகுதிகளும், பட்டியல் இரண்டில் இருக்கும் தொழிற்சாலைகளும் வல்லுநர் அறிக்கைகளின் அடிப்படையில் சட்டத்தின் வரைமுறைகளில் இருந்து விலக்கு பெறலாம் என்று திறந்த மனத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது.
சட்டம் நடுநிலையோடுதான் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துவோர் நடுநிலையோடு சிந்தித்துச் செயல்பட்டால் நாட்டுக்கு நல்லது.
- பி.என்.மாறன், காவேரி அஸட் ஓஎன்ஜிசி-யில் குழுமப் பொது மேலாளர் மற்றும் எண்ணெய் எரிவாயு உற்பத்திப் பிரிவுத் தலைவர். தொடர்புக்கு: pnmaran23@gmail.com