நல்ல பத்திரிகையாளர், நல்ல எழுத்தாளரும்கூட. நல்ல எழுத்தாளர் எதை எழுதினாலும் இனிக்கத்தானே செய்யும். நாட்டின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேகர் குப்தா, சமீபத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, தனது முன்னாள் சகாக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலிருந்து சில பகுதிகள் இங்கே…
விடைபெற்றுக்கொள்கிறேன் என்று எழுதப்படும் கடிதங்கள் ஒன்று மனதுக்கு இதமாக இருக்கலாம் அல்லது மனம் உடையும்படி இருக்கலாம். அரிதான சந்தர்ப்பங்களில் அது இரண்டாகவும் இருக்கும். இப்போது அப்படித்தான்.
நான் இப்போது மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன். காரணம், நம் நாட்டிலேயே படித்துப் பயிற்சி பெற்ற, துடிப்பு மிக்க பத்திரிகையாளர்களிடம் பத்திரிகையை விட்டுச் செல்வதால். ஒரு பத்திரிகையின் மதிப்பும் சக்தியும் அதன் ஆழம், நம்பகத்தன்மை, சமூகத்தில் அதற்கிருக்கும் மரியாதை ஆகியவற்றைப் பொருத்தது. பத்திரிகையின் தரத்தை நிர்ணயிக்க வேறு அளவுகோல்கள் இல்லை.
தலைமைப் பதவி என்பதே ஆசிரியராக இருந்து கற்றுக்கொள்வதுதான். அதுதான் மிகச் சிறந்ததும்கூட. என் தலைமைக்குக் கட்டுப்பட்ட மிகச் சிறந்த புத்திசாலிகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்குத் தலைமைப் பதவி நல்ல வாய்ப்பு. நல்ல தலைமைக்கு நான் கூறிய மூன்று விதிகள் உங்களுக்கு அலுப்புதட்டியிருக் கலாம். ஆனால், அவைதான் தலைவனாக இருந்து நான் கற்ற பாடங்கள்.
முதலாவதாக, உங்களுக்குப் பரந்த மனது வேண்டும். நீங்கள் மிகச் சிறந்த நிர்வாகியாக இருக்கலாம், அதிகாரம்மிக்க எஜமானனாக இருக்கலாம், பணக்கார முதலாளியாகக்கூட இருக்கலாம். ஆனால், பரந்த மனதில்லாத தலைவனாக ஒருபோதும் இருக்காதீர்கள். ஏனென்றால், அதுதான் தலைமைப் பண்புக்கான தார்மிகத்தன்மை.
இரண்டாவதாக, யாருக்குத் தலைமை தாங்குகிறீர்களோ அவர்களுடைய உலகோடு தொடர்பில் இருங்கள். அரசியல், அரசு நிர்வாகம், பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம், திரைப்படம், விளையாட்டு என்று பல துறைகளில் நாம் நம் குழுக்களோடு பயணப்படுகிறோம். நமது விற்பனை, விளம்பரப் பிரிவோடும் நமது ரொட்டி, சப்ஜியோடும், நமது மாதாந்திரக் கடன் தவணைகளோடும்கூட நாம் பயணப்படுகிறோம். அது மிகமிக அவசியம்.
மூன்றாவதாக, மிகச் சிறந்த திறமை உள்ளவர்களை உங்களுடைய உள்ளுணர்வால் தேர்ந்தெடுத்து நல்ல பதவிகளில் அமர்த்துங்கள். அதன் பிறகு அவர்கள்மீது முழு நம்பிக்கை வையுங்கள். இது வழக்கமாக உங்களுக்குத் தரப்படும் ஆலோசனைகளிலிருந்து நிச்சயம் மாறுபட்டதாக இருக்கும்.
இத்துடன் என்னுடைய பிரிவுபசார பிரசங்கம் முடிகிறது.
வாழ்க்கை எந்தச் சலனமுமின்றி தொடர்ந்தால் அதை நீங்கள் சற்றே கலைக்க வேண்டும். தேக்க நிலை என்பது முதுமையின் ஆரம்பம். வளரிளம் பருவத்தில் இருந்தால்கூட நீங்கள் தேக்க நிலை கண்டுவிட்டால் நல்லதில்லை. ‘உங்களுடைய சௌகரியமான போக்கின் முடிவில்தான் உங்களுடைய வாழ்க்கை தொடங்குகிறது என்கிறார்' நீல் டொனால்ட் வால்ஷ்.
நான் யாராலும் திருத்த முடியாத நிருபர், ஏதாவது சாகசங்களை நோக்கியே பயணிப்பேன். போன பிறகும் நம்மை விட்டானா பார் என்று சிலர் சபித்தாலும், தேவைப்படும் பட்சத்தில் உங்களுக்கு நான் எழுதுவேன்.
தமிழில்: சாரி