ஆனைக்கட்டி பகுதியில் இருளர்கள் மேம்பாட்டுக்காக உழைத்துவரும் தாசனூர் நாராயணன், நண்பர் கா.சு.வேலாயுதன் மூலம் அறிமுகமானவர். நாராயணன் ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறார். ஆதீன் என்று அதற்குப் பெயர். இங்கே பொதிகை மலையில் தொடங்கி இமயமலை வரை இந்தியா முழுவதிலும் மலைகளில் வாழும் பழங்குடியின மக்கள் பேசும் பல்வேறு மொழிக் கலப்பின் தொகுப்பு இது. அந்தந்தப் பிராந்தியங்களின் மொழியையும் பெருமளவில் உள்வாங்கியிருக்கிறது. இதற்கென எழுத்து வடிவத்தையும் நாராயணன் உருவாக்கியிருக்கிறார். அதில் ஒரு நாவலையும் எழுதிவிட்டார். இதுவரை 25 பேர் இம்மொழியில் எழுத, படிக்கக் கற்றிருக்கின்றனர். வெறும் 25 பேர் மட்டுமே இன்றளவில் படிக்கத் தெரிந்த அந்த மொழியில், தொடர்ந்து பல சிறுகதைகளையும் நாராயணன் எழுதிக்கொண்டிருக்கிறார். “இந்திய அரசு மும்மொழிக் கொள்கைக்கு இடமளிப்பதையே பெரிய சாதனையாக இங்கு பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பதாலேயே ஒரு இருளரின் தாய்மொழி தமிழ் ஆகிவிடுமா? பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் பேசும் மொழியை இந்த அரசாங்கங்கள் பொருட்படுத்தாமல் பெருமொழிகளை முன்னிறுத்தும்போது, எங்கள் மொழியோடு எங்கள் சுயசிந்தனையை, பண்பாட்டு அறிவை எல்லாவற்றையும் நாங்கள் பறிகொடுக்கிறோம். மொழியைப் பாதுகாத்துக்கொள்ளாமல் எங்கள் இனத்தின் சுயத்தை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியாது. என்னாலான முயற்சி இது” என்கிறார் நாராயணன்.
மனிதர் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலாக இதற்காக உழைத்திருக்கிறார். அவர் எழுதிய கதைப் புத்தகத்தை என் கையில் கொண்டுவந்து கொடுத்தார். ஒரு இனத்தின் கனவு. ஜனநாயகப் போராட்டத்துக்குத்தான் எத்தனை வடிவங்கள்!
மனித குலம் மட்டுமல்ல, இயற்கையில் எந்த உயிரினத்திலும் சமத்துவம் என்பது இல்லை. காட்டில் வேட்டைக்குச் செல்லும் நாய்க் கூட்டத்தில்கூட, தலைவரில் தொடங்கி கடைசிக் குட்டி வரை வரையறுக்கப்பட்ட அதிகாரப் படிநிலை இருக்கிறது. ஆழமாக யோசித்தால், முழுமையான சமத்துவம் என்பது கடைசி வரை அடைய முடியாத ஒரு இலக்கு. என்றாலும், ஏன் நாம் சமத்துவத்துக்காகப் போராடுகிறோம் என்றால், நாமும் நாய்கள் அல்ல என்பதால். பகுத்தறிவு என்று ஒன்று நமக்கு இருப்பதாக நம்புவதால். மனித குலம் தன் இறுதிக் கணம் வரை அதற்காகப் போராடியே தீர வேண்டும்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி வரும். எல்லோருமே சமூக முன்னேற்றத்தின் பெயரால் போராடுகிறார்கள். நாம் யார் பக்கம் நிற்பது? யார் நாராயணன்களுக்கும் சேர்த்து யோசிக்கிறார்களோ அவர்கள் பக்கமே நாம் நிற்க வேண்டும். சமத்துவமே அளவுகோல். நாம் மேலே இருப்பவர்கள் பக்கம் நிற்கிறோமா, கீழே இருப்பவர்கள் பக்கம் நிற்கிறோமா? நாம் மேல் தரப்பைச் சார்ந்தவர்களாகவும்கூட இருக்கலாம்; கீழ்ப்பக்கம் சார்ந்து நிற்பதே தார்மிக அறம்.
மனித குலத்தை என்றும் பொருளாதாரமே ஆளும். பெரும்பான்மைத் தரப்பும் பொருளாதார வளமுமே ஒரு நாட்டின் அரசியலைப் பின்னின்று இயக்கும். அதனுடனான போராட்டமே ஜனநாயக அரசியல். அப்படியென்றால், இரு தரப்புகளும் எதிரிகளா? அப்படி இல்லை. மாற்றுத்தரப்புகள். ஒரு தரப்பை அழித்தொழிப்பதோ, முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதோ இல்லை; உரையாடல்கள், பரஸ்பரப் புரிதல்கள், நெகிழ்வினூடே இரு தரப்புகளும் கைகோத்து ஒன்றுபட சமத்துவ இலக்கை நோக்கிப் பயணப்படும் பாதையே ஜனநாயகம்.
ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. எல்லா இயக்கங்களும் சேர்ந்தே ஜனநாயகம் முழுமை பெறுகிறது. பெரியார் தன்னுடைய இயக்கத்தினுள் ஜனநாயகத்துக்கு இடம் அளிக்காதவர். அதை வெளிப்படையாகவும் அறிவித்தவர். எனினும் சாதிக்கு எதிராக இறுதிவரை அவர் நடத்திய போராட்டங்கள் இந்திய ஜனநாயகத்துக்கு அளிக்கப்பட்ட வேறு எந்தப் பங்களிப்போடும் குறைத்து மதிப்பிட முடியாதது.
ஒரு ஜனநாயகவாதி வெளிப்படையான மனதுடன் எல்லாத் தரப்புகளையும் அங்கீகரிக்க வேண்டும். அப்படியான தரப்புகள் இருந்தால்தான் அவற்றின் அபிலாஷைகளை, அவற்றின் நியாயங்களை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும். அவர்களுடனும் பேச முடியும். சின்ன வயதில், என் தாத்தா சொன்னது நினைவுக்குவருகிறது. “பாஜகன்னு ஒண்ணு இருக்கணும்டோய். அப்படி இல்லேன்னா, காலப்போக்குல காங்கிரஸே பாஜகவாகிடும்” என்பார் அந்தப் பெரியாரியர்.
இந்தியாவில் வலதுசாரிகள் இன்றைக்கு தேசியவாதம், இனவாதம், மதவாதம், சாதியவாதம், முதலாளியம் எனும் ஐந்து பெரும் ஆயுதங்களையும் கைகளில் ஏந்தி நிற்கிறார்கள். எங்கு எது ஜெயிக்குமோ அதைப் பயன்படுத்துகிறார்கள். இடதுசாரிகளோ இவை அத்தனையும் ஒருசேர எதிர்க்க வேண்டிய சூழலில் நிற்கிறார்கள். அரசியலில் தனிநபர்களாக அல்ல; அமைப்பாகத் திரண்டே மாற்றங்களை உண்டாக்க முடியும். வெறியூட்டி மக்களைத் திரட்டுதல் எளிது. ஜனநாயகவாதிகள். இந்த ஐம்பெரும் ஆயுதங்களையும் எதிர்த்து வெகுமக்களைத் திரட்ட வேண்டும் என்றால், மக்களிடையே கூட்டுச் செயல்பாட்டை ஒற்றுமை மூலம் பயிற்றுவிப்பது அவசியமாகிறது.
இந்தியாவில் துரதிர்ஷ்டவசமாக கூட்டுச் செயல்பாடு என்னும் பண்பையே இன்றைக்கு நாம் பெருமளவில் இழந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய குடும்பங்களும், கல்விமுறையும் சுயநலத்தையே கற்பிப்பதால், ஒரு அமைப்புக்குள் பணியாற்றும்போது, பொது இலக்கை முன்வைத்து சகலருடனும் இணைந்து பணியாற்றும் ஒழுங்கு நமக்கு இயல்பில் வருவதில்லை. இதை அரசியல் அமைப்புகளில் மட்டும் அல்ல; நம்முடைய வீடுகளில், கல்விக்கூடங்களில், பணியிடங்களில் எங்கும் எதிர்கொள்கிறோம். பணியிடங்களில் பெரும்பாலானோரின் செயல்பாட்டின் அடிப்படையாக எது இருக்கிறது என்றால், அங்கு கிடைக்கும் பணம், வசதி, அதிகாரம் இவற்றின் மீதான தொடர் வேட்கையே தவிர, அலுவலகம் கொண்டிருக்கும் பொது இலக்கு அல்ல. தான் எனும் எண்ணமும் தன்னுடைய அகங்காரத்துக்கு அமைப்பைக் கருவியாக்கிக்கொள்ளும் கயமையையுமே எங்கும் பார்க்கிறோம். இந்தச் சுயநல வேட்கையின் விளைவுகளையே அரசியலில் சீரழிவுகளாக எதிர்கொள்கிறோம்.
ஒருவர் எல்லா விஷயங்களிலும் 100% எந்த இயக்கத்துடனாவது உடன்பட முடியுமா என்று கேட்டால், முடியாது என்பதே நிதர்சனம். அதேபோல, மாற்றுத் தரப்பு என்பதாலேயே ஏனையோர் முன்மொழியும் நல்ல விஷயங்களையும்கூட வசைபாடுவதும் நல்ல பண்பல்ல. சரியாகச் சொல்வதானால், ஒரு நல்ல குடிமகன் உண்மைக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர, இயக்கங்களுக்கு அல்ல. இயக்கங்களில் இருப்பதாலேயே அவற்றின் எல்லாத் தவறுகளையும் நியாயப்படுத்துவது அயோக்கியத்தனம்.
மனித வாழ்வில் சிரமமான காரியங்களில் ஒன்று, முடிவெடுப்பது. அரசியலில் ஒரு விஷயம் அறிமுகமாகும்போது, அதை எந்த அளவுகோலில் அளவிடுவது, அது நல்லதா, கெட்டதா என்று எப்படி முடிவெடுப்பது என்பது. காந்தி மிக எளிமையான ஒரு அளவுகோலை மந்திரக் காப்பாக நமக்கு அளிக்கிறார்:
“நான் உங்களுக்கு ஒரு மந்திரக் காப்பைத் தருகிறேன். எப்போதெல்லாம் நீங்கள் சந்தேகம் அடைகிறீர்களோ, எப்போதெல்லாம் உங்கள் சுயம் உங்களை அளவுக்கதிகமாக ஆக்கிரமிக்கிறதோ, அப்போதெல்லாம் பின்வரும் சோதனையை மேற்கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை பார்த்திருப்பதிலேயே ஆக ஏழ்மையான, ஆக பலவீனமான ஒரு மனிதரின் முகத்தை நினைவுகூருங்கள். பின்னர், ‘நாம் மேற்கொள்ளவிருக்கும் செயலால் அவருக்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டாகுமா? அவருக்கு அதனால் ஏதேனும் நன்மை உண்டாகுமா? தனது அன்றாட வாழ்வையும் எதிர்காலத்தையும் சீரமைத்துகொள்வதற்கான ஆற்றலை அவர் திரும்பப் பெறுவதற்கு அது எவ்வகையிலேனும் வழிவகுக்குமா? இதையே வேறு விதமாகச் சொல்வதானால், வயிற்றுப் பசியாலும் ஆன்மப் பசியாலும் வாடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் உண்மையான சுயராஜ்ஜியத்துக்கு எனது முடிவு வழிவகுக்குமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் ஐயப்பாடுகளும் உங்கள் சுயநலமும் கரைந்து மறைந்துபோவதை நீங்களே உணருவீர்கள்!”
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in