வழக்கமாகத் தேர்தல் காலம் என்பது திருவிழாக் காலமாகத்தான் நடைமுறையில் இதுவரை இருந்துவந் திருக்கிறது. இம்முறை கும்பமேளாவாக என் கண்களுக்குத் தென்படுகிறது. ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் பந்தயத்தில் எப்போதும்போல் இம்முறை ‘களமாட’ முடியாமல், மூன்றாவதாக ஓர் அணி முட்டுக்கட்டை போட்டிருப்பது, அவர்களுக்குள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே தோன்றுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க எல்லாவித முறைகேடுகளிலும் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இலவசம், சலுகை எனும் பெயரில் பெண்களின் வாக்குகள் குறிவைக்கப்படுகின்றன.
ஜனநாயகம் என்பது மாறி பணநாயகம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ரூ. 100 கோடி வரை கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் சொல்கின்றன. பிடிபடாமல் போனவை, பொருட்களாகக் கைமாற்றப்பட்டவை இன்னும் எத்தனை கோடிகள்? இந்தப் பணம்கூட கையில் இருந்தபோது உரிய ஆதாரம் காண்பிக்கப்படாததால் பிடிக்கப்பட்டு, உரிய ஆதாரங்களும் வழிகளும் காட்டப்படும்போது அல்லது ‘உருவாக்க’ப்படும்போது திருப்பித் தரப்படுபவை. இதுதொடர்பான முழு விவரங்கள் வெளியிடப்படுவதில்லை என்பது வேறு கதை. சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன? இதற்கான சீர்திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் கொண்டுவருமா? இவ்வளவு வினாக்களுக்கும் வெளிப்படையான விடை கிடைக்குமா?
பெண்களுக்கு வாய்ப்பில்லை
110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவற்றில் முக்கியமான ஒரு வாக்குறுதி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்துகள் ஏதுமில்லை. ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இன்னமும் நாம் 33% ஒதுக்கப்பட வேண்டும் என்று கூக்குரல் இட்டுக்கொண்டிருக்கும் நிலை மாறவில்லையே? அறிவிக்கப்பட்டிருக்கும் 3,794 வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை 320தான்.
பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றனவா? அல்லது அவர்கள் வர மறுக்கிறார்களா? வாய்ப்புகள் வழங்குவது என்பது அரசியலிலும் அதிகாரத்திலும் உள்ள பாலினப் பாகுபாடுகளை அகற்றுவது. பெண்கள் அரசியலுக்கு வர மறுப்பதற்கான காரணங்கள் எவை? ஒன்று, அரசியல் குறித்த பயம் அவர்களுக்குள் ஊடாட்டம் கொண்டிருக்கிறது. மற்றையது அனைவரையும் போல் ‘அரசியல் ஒரு சாக்கடை’ என்ற மேலோட்டமான பார்வை. இதில் பெண்களை மட்டும் குறை சொல்வதற்கு ஏதுமில்லை. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ வேண்டுமானால் 50% இடஒதுக்கீடு என்பது பயன்படலாம்.
பெண் வாக்காளர்களின் நிலை
பொதுவாகவே, இரண்டாம் படிநிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் பெண்கள், மதிப்பு மிக்கவர்களாகப் பார்க்கப்படுவது தேர்தல் காலங்களில் மட்டும்தான். இம்முறை ஆண் வாக்காளர்களைவிடப் பெண் வாக்காளர்கள் விகிதம் அதிகம் என்பதும் மறுக்க முடியாத ஒரு காரணம். அதற்குக் காரணம், அவர்கள் கையில் வைத்திருக்கும் வாக்குரிமை என்னும் ஆயுதம். ஆனால், அதைத் தங்கள் விருப்பம்போல் பயன்படுத்த முடியாத நிலையில்தான் இன்றும் அவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெண்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் விலை மதிப்பற்ற வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்தினால், தங்கள் வருங்காலச் சந்ததிகளும் நல்ல எதிர்காலத்தைப் பெற முடியும் என்ற சிந்தனையை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். நீண்ட நெடிய போராட்டங்களால் பெற்ற அந்த உரிமையை, அதன் மதிப்பை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். தங்கள் சுய லாபங்களுக்காகச் சில அரசியல் கட்சிகள் அளிக்கும் மூக்குத்திகள், காமாட்சி விளக்குகள், கொலுசுகள், குடங்கள் இத்யாதிகள் பெண்களை எளிதாக ஈர்க்கக் கூடியவையாக இருக்கின்றன. இந்த அற்பங்களுக்காகப் பெண்கள் தங்கள் வாக்குகளை இழந்துவிடாமல் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் அரசியல் என்பது வியாபாரம் அல்ல. அது பொருள் ஈட்டுவதற்கான களமும் அல்ல என்பதை அரசியல்வாதிகள் எப்போது உணர்வார்களோ தெரியாது. ஆனால், வாக்கு என்பது விற்பனைப் பண்டமல்ல என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும். அதிலும் பெண் வாக்காளர்கள் முழுமையாக உணர வேண்டும்.
மாற்றம் வரட்டும்
தாராளமயமாக்கலுக்குப் பிறகான வாழ்க்கை மக்களைத் தலைகீழாக மாற்றிப் போட்டிருக்கிறது. இந்நிலையில்தான், மக்கள் பணத்தின் பின்னாலும், கட்டுப்பாடற்ற நுகர்வின் பின்னாலும் இலவசங்களின் பின்னாலும் பைத்தியமாக அலைகிறார்கள். இலவசங்களின் உதவியால் மட்டுமே வாழ்க்கை ஓடிவிடுமெனக் கூறுவதும், நினைப்பதும் மணலில் தலையைப் புதைத்துக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சொல்வதைப் போலத்தான் இருக்கும்.
அதிகாரம் செலுத்துவது மட்டுமல்ல ஆட்சியின் பணி; மக்களுக்கான கொள்கைகளை வகுப்பதும்தான். அதிலும் ஜனநாயகபூர்வமாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். அதனால், நமக்குப் பணமும் இலவசமும் வேண்டாம். குறைந்தபட்சம் ‘பணம் கொடுத்து வாங்கப்பட்ட அரசு’ என்ற அவப்பெயரை அடுத்து அமைய உள்ள அரசுக்கு நாம் ஏற்படுத்தித் தர வேண்டாம். அரசு, பண பலத்தால் உருவாக்கப்பட்டதல்ல என்ற நிலையை உருவாக்க வேண்டும். பெண் வாக்காளர்களுக்குத்தான் அதில் பெரும் பங்கு இருக்கிறது!
- பா.ஜீவசுந்தரி, எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com