சிறப்புக் கட்டுரைகள்

சாணிக் காயிதம்: வன்முறைக்கு ஏது அழகு?

ச.கோபாலகிருஷ்ணன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் முதல் படமான ‘ராக்கி’ கடந்த டிசம்பரில் திரையரங்கில் வெளியானது. கொடூரமான கொலைகளும் ரத்தம் சிதறும் காட்சிகளும் நிரம்பியிருந்த அந்தப் படத்தை ‘வன்முறையின் அழகிய’லைக் காண்பித்த அரிதான தமிழ்ப் படம் என்று விமர்சகர்கள் பலர் கொண்டாடினார்கள். அருண் மாதேஸ்வரனின் தனித்துவம் மிக்க காட்சிமொழி, கதைகூறல் முறை ஆகியவற்றுக்காகவும் அந்தப் படம் பாராட்டப்பட்டது.

அவர் எழுதி, இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘சாணிக் காயிதம்’, மே 6 அன்று அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியானது. பிரத்யேகமான காட்சிமொழி, புதுமையான கதைகூறல் ஆகியவற்றுடன் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் வன்முறையை எந்தத் தயக்கமுமின்றிக் காட்சிப்படுத்தியிருக்கிறது ‘சாணிக் காயிதம்’. ஆதிக்க சாதி வெறியர்களின் அட்டூழியத்தால் தம் வாழ்க்கைத் துணையையும் குழந்தையையும் இழந்த பொன்னியும் (கீர்த்தி சுரேஷ்) அவளுடைய அண்ணன் சங்கையாவும் (செல்வராகவன்) தமக்குத் தீங்கிழைத்தவர்களைப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை.

சரமாரியாக வெட்டுவது, கத்தியால் குத்துவது, துப்பாக்கியால் சுடுவது, கயிற்றால் கட்டிப்போட்டு அமிலத்தை நிதானமாக ஊற்றுவது, தீயிட்டுக் கொளுத்துவது, எதிரில் ஆயுதமேந்தித் தாக்க வரும் பெரும் கூட்டத்தின்மீது வேனை ஏற்றிப் பலரைக் கொல்வது என வன்முறையின் கொடூர வடிவங்கள் பலவற்றை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். இவற்றில் பலவும் அப்பட்டமாக கேமராவின் வழியாக நம் பார்வைக்கும் கடத்தப்படுகின்றன. வன்முறை, குறிப்பால் உணர்த்தப்படும் காட்சிகளிலும்கூட அந்தச் செயலின் உள்ளார்ந்த கொடூரம் முகத்தில் அறைகிறது. கதைப்படி இவர்களின் வன்முறைச் செயல்களுக்கு அடிப்படையாக விளங்கும் கோபம் நியாயமானது என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இவ்வளவு விரிவாகக் காட்சிப்படுத்தப்படும் வன்முறைக்குக் கதை அளவில் ஒரு நியாயத்தை வழங்கியிருப்பது, ‘சாணிக் காயிதம்’ படத்தைப் பிற வன்முறைப் படங்களைவிட ஆபத்தானதாக்குகிறது.

ஒருவர் நமக்கு எத்தகைய கொடுமையை இழைத்தாரோ அதையே அவருக்குத் திரும்பத் தருவது சரியானது என்னும் பொருள்தரும் வசனத்தைப் பேசுகிறார் பொன்னி. பழிவாங்குவதற்காக உணர்ச்சி வேகத்தில் ஒரு குற்றச் செயலைச் செய்வதும், அதற்கு இப்படி ஒரு விளக்கத்தை யோசித்து எழுதுவதும் ஒன்றல்ல. ‘கண்ணுக்குக் கண் என்ற கணக்கில் அனைவரும் பழிவாங்கப் புறப்பட்டால் இந்த உலகமே குருடாகிவிடும்’ என்னும் காந்தியின் பொன்மொழி என்றைக்கும் பொருத்தமானது.

நிஜவாழ்வில் எத்தகைய கொடுமைக்குள்ளானவர்களும் அதற்குப் பழிதீர்ப்பதற்காகக் கொலைகளையோ பிற வன்முறைத் தாக்குதல்களையோ நிகழ்த்திவிட்டால், அவர்களின் கோபத்தில் இருக்கும் நியாயம் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவித்துவிடப்போவதில்லை. தண்டனையின் அளவு வேண்டுமானால் குறைக்கப்படலாம். நிஜத்தில் ஒருவர் உணர்ச்சிவயப்பட்ட நிலையில், நிதானமிழந்து வன்முறையை நாடுவதை நியாயப்படுத்த முடியாவிட்டாலும் புரிந்துகொள்ளலாம். ஆனால், பழிவாங்கலுக்கு நியாயம் கற்பிக்கும் சிந்தனைகள் பொறுப்புமிக்க படைப்பாளிகளுக்கு எழாது.

‘சாணிக் காயிதம்’ என்னும் ஒற்றைப் படத்துடனோ அருண் மாதேஸ்வரன் என்னும் ஒற்றை இயக்குநருடனோ இந்தப் பிரச்சினை முடிவடைந்துவிடவில்லை. கறுப்பு - வெள்ளைத் திரைப்படங்களின் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றாலும் 1990-களிலிருந்து அவற்றில் இடம்பெறும் வன்முறை பல மடங்கு அதிகரித்தது. குறிப்பாக, நட்சத்திர நடிகர்களின் பல படங்களில் மிகைநாயகத்தன்மையை வழங்குவதற்கு சண்டைக் காட்சிகளில் வன்முறை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. விதவிதமாக, புதிதுபுதிதாக ஒருவரை ஆயுதங்களைக் கொண்டோ வெறும் கைகளாலோ தாக்குவது எப்படி என்று யோசித்து, அவற்றைச் செயல்படுத்துவதே சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்களின் முக்கியப் பணியானது. ஸ்டண்ட் காட்சிகளின்போது உயிரிழந்த, படுகாயமடைந்து முடங்கிய ஸ்டண்ட் நடிகர்கள் பலர்.

மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் குழந்தைகள் உட்பட அனைவரும் பார்த்தே ஆக வேண்டும் என்பதுபோல் விளம்பரப்படுத்தப்படும் நட்சத்திர நடிகர்களின் படங்களிலும் மிகக் கொடூரமான வன்முறைக் காட்சிகள் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றன. ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’, ‘ஐ’ திரைப்படங்களில் கொதிக்கும் எண்ணெயில் தூக்கி வீசுவது, லட்சக்கணக்கான பூச்சிகளை ஏவிக் கடிக்க விடுவது உள்ளிட்ட மிகக் கொடிய வழிமுறைகளில் தீயவர்களை நாயகன் தண்டிப்பார். சிறுவர்களுக்குப் பிடித்த நட்சத்திர நடிகராகக் கருதப்படும் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகன், பயங்கரவாதி ஒருவனின் தலையை வெட்ட, அந்தத் தலை கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்ப்பதற்குத் தங்கள் குழந்தைகளை அழைத்துச்சென்றவர்கள் ஏராளம். அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில் ‘கொல்லும் அதிகாரம் நமக்கு இல்லை’ என்று நம்பும் காவல்துறை அதிகாரி என்றாலும் குற்றவாளிகளின் கை, கால் எலும்புகளை உடைக்கிறார். இவ்வளவு வன்முறையைக் கொண்ட திரைப்படங்கள் அனைத்து வயதினரும் பார்க்கத்தக்க ‘யு’ தணிக்கைச் சான்றிதழுடனோ பெற்றோரின் துணையுடன் சிறார்களும் பார்க்கத்தக்கது என்பதற்கான ‘யு/ஏ’ சான்றிதழுடனோ வெளியாவது திரைப்படத் தணிக்கை முறையில் நிலவும் ஆழமான பிரச்சினைகளை அடிக்கோடிடுகின்றது.

மறுபுறம் யதார்த்தப் படம் எடுக்கிறேன் என்று கிளம்பிய இயக்குநர்களின் திரைப்படங்களில் இன்னும் அப்பட்டமான, கொடூரமான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றன. இயக்குநர் பாலாவின் திரைப்படங்களில் கயவர்களை அழித்தொழிப்பவர்கள் கதாநாயகர்களும் நாயகிகளுமே. ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’, ‘தாரை தப்பட்டை’ என அவருடைய பெரும்பாலான படங்களின் இறுதியில் நாயகன் ஒற்றை ஆளாக மிகக் கொடூரமான முறையில் யாரையேனும் கொல்வார். வேறு பல இயக்குநர்களின் திரைப்படங்களிலும் யதார்த்தம் என்னும் பெயரில் இதுபோன்ற வன்முறைக் காட்சிகள் திணிக்கப்படுகின்றன. மிஷ்கின், வெற்றிமாறன் போன்ற சமகாலத்தின் முக்கியமான இயக்குநர்களின் சில திரைப்படங்களிலும் வன்முறைக்குப் பஞ்சமிருப்பதில்லை. பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் சில திரைப்படங்கள் சாதிக் கொடுமைக்கு எதிராக வன்முறைக் குணம் கொண்ட நாயகர்களை முன்வைப்பதாக விமர்சனங்களை எதிர்கொண்டன.

வன்முறையின் அழகியல் என்னும் அடைமொழியுடன் ‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ போன்ற திரைப்படங்களைத் தமிழில் பலர் கொண்டாடுகிறார்கள். க்வெண்டின் டாரண்டினோ, கிம் கி டுக் உள்ளிட்ட இயக்குநர்களெல்லாம் இப்படி எடுக்கவில்லையா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. நாளுக்கு நாள் வன்முறைகள் பெருகிக்கொண்டிருக்கும் யுகத்தில், இளம் தலைமுறையினர் அதனால் ஈர்க்கப்படும் வழிகள் அதிகமாகியிருக்கும் காலத்தில், வன்முறையை யார் கொண்டாடினாலும் அது தவறே. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு மதம்போல் தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது. திரையில் தோன்றும் நாயகர்களைப் பார்த்து புகைப்பழக்கத்தையும் மதுப்பழக்கத்தையும் பின்தொடர்பவர்கள் அதிகம். வன்முறைக்கும் இதே போன்ற தீய விளைவுகள் உள்ளன. இதுபோன்ற திரைப்படங்கள் எத்தகைய வன்முறையையும் இயல்பானதாக ஏற்றுக்கொள்ள நம் மனங்களைப் பழக்குகின்றன.

அன்றாடம் பலவகையான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தில் உருவாகும் படைப்புகளில் முற்றிலும் வன்முறையைத் தவிர்க்க முடியாது. ஆனால், வன்முறையைக் கதையின் உள்ளடக்கமாகவும் காட்சிகளாகவும் உருவாக்கும்போது, அவை சமூகத்தில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்பதையும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதே படைப்பாளிகளுக்கு நாம் முன்வைக்கும் வேண்டுகோள்.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

SCROLL FOR NEXT