தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்ந்து தமிழக அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது? இனி செய்ய வேண்டியவை என்னென்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
விளையாட்டுத் துறையில் ஈடுபாடு கொண்டவரும், அரசியல் விமர்சகருமான சுமந்த்.சி.ராமன் கூறும்போது, "விளையாட்டுத் துறையில் சில விஷயங்களில் திமுக அரசு கவனம் செலுத்தியுள்ளது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறுகிறது. அதற்கு அரசு முழு ஆதரவு வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது தமிழகத்தின் பல இடங்களில் விளையாட்டு அரங்கங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். அது எல்லா தொகுதிகளுக்கும் வேண்டுமா என்பது ஒரு கேள்வியாக உள்ளது. மேலும், அதற்கு கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல சென்னை புறநகர் பகுதியில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இதை வைத்து பார்க்கும்போது அரசு நிச்சயம் விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்தி வருகிறது என்று நம்பலாம்.
ஆனால், எல்லா திட்டங்களும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால், குறிப்பாக அனைத்து தொகுதிகளிலும் அவர்கள் அமைக்க உள்ளது விளையாட்டு அரங்கமா (ஸ்டேடியம்) அல்லது மைதானமா (கிரவுண்ட்) என்பது புரியவில்லை. மைதானம் அமைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் விளையாட்டு அரங்கம் தேவையில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்தத் துறையில் அரசு சிறப்பான கவனத்தை செலுத்தியுள்ளது.
அதேபோல இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், Khelo இந்தியா என விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் அமைப்புகளுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படுவதும் அவசியம். ஏனெனில், தனியாக சில விஷயங்களில் கவனம் செலுத்தும்போது அதற்கான செலவுகள் அதிகம் இருக்கும்” என்றார் சுமந்த்.சி.ராமன்.
"சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஏனெனில், இது பின்தங்கிய மற்றும் கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறனை வெளிக்கொண்டு வர உதவும். அரசு விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் முத்திரைப் பதிக்கும் வீரர்கள் உருவாவார்கள்" என்று திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகவேந்தன் தெரிவித்துள்ளார்.
அரசின் முக்கிய அறிவிப்புகள் என்ன?
> தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் (Mega Sports City) அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள் என 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
> தமிழகத்தின் 4 மண்டங்களில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் (Olympic Academies) அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
> அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குகென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.
> தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய சிலம்ப விளையாட்டினை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார். மேலும், சிலம்ப வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
> தமிழ்நாட்டில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பது.
> புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் ரூ.7.70 கோடி செலவில் செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைப்பது.
> கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.5.50 கோடி செலவில் சர்வதேச தரத்திலான பல்நேக்கு உள் விளையாட்டரங்கம் அமைப்பது.
> தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சர்வதேச பயிற்சியாளர்களை கொண்டு ரூ.6 கோடி செலவில் பயிற்சி அளிப்பது.
> மாநில விளையாட்டு சங்கங்களுக்கான நிதி உதவியை உயர்த்துவது.
> சென்னையில் மேலும் ஒரு குத்துச்சண்டை அகாடமி அமைப்பது.
> விளையாட்டு வீரர்களுக்கான விடுதி வசதி, மிதிவண்டிப் போட்டிக்கான நிதி, நலிவுற்ற விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான சிற்றுண்டி படித்தொகை போன்றவற்றை உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.
> ராமநாதபுரம், விருதுநகர், தருமபுரி மாவட்டங்களில் உள்ள திறனாளர்களை அடையாளம் காணும் வகையில் போட்டிகள் நடத்துவது. கிருஷ்ணகிரியில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த தினசரி பயிற்சித் திட்டம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.