பல்லாவரத்திலிருந்து நுங்கம்பாக்கம் வரை வாடகை காரில் பயணம் செய்தேன். அந்தப் பயணத்தின்போது ஓட்டுநரோடு பேசிக்கொண்டே வந்தேன். “ஒரு நாளைக்கு கார் ஓட்டினால் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்? உங்களுக்கு அதில் இருக்கும் சவால்கள் என்னென்ன?” என்று கேட்டபோது, அவர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்றேன் சார்.
நிறைய சம்பாதிப்பதுபோலத் தெரியுது. ஆனா, பெரிய அளவுக்கு கைல எதுவும் நிக்க மாட்டேங்குது. கஷ்டப்பட்டு வேலை செய்யுற எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் எல்லாம் ஓலா, ஊபர், ராபிடோ கம்பெனிகளுக்குத்தான் போகுது” என்று வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார். அவர் பகிர்ந்துகொண்ட பல விஷயங்கள் என் மனதைக் கனக்க வைத்தன. குளிரூட்டப்பட்ட கார் என்றாலும் எனக்கு வியர்த்தது. ஏனென்றால், உழைப்பாளர்கள் பல்வேறு நிலைகளில், பெருநிறுவனங்களால் நூதனமாகச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
கைபேசிச் செயலி மூலம் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருக்கும் பெரிய கம்பெனிகள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. ஆனால், எத்தனை ஆண்டுகள் ஓ(ட்)டி ஓ(ட்)டி உழைத்தாலும் அதே நிலையில்தான் கார் ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்று யோசித்தேன். உழைப்பாளர்களுக்காகச் சிந்தித்த மாமேதை கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்துக்கென்று இதைக் குறித்து எழுதுவது பொருத்தமாக இருக்கும்தானே!
துரிதமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எல்லோருமே நகரத்தில் மேற்கொள்ளப்படும் குறுகிய பயணத்துக்கு ஏதாவது ஒரு வாடகை காரையோ ஆட்டோவையோ பயன்படுத்துகிறோம். அது நம்முடைய கைபேசிச் செயலிகள் மூலமாகச் சாத்தியப்பட்டுவிட்டது. ஆனால், நம்மைப் பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் கார் ஓட்டுநர்கள் எத்தகைய வாழ்க்கைச் சூழலில் இருக்கிறார்கள், அவர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள், கண்ணுக்குத் தெரியாத இடத்தில் அமர்ந்துகொண்டு இணையதளத்தின் மூலமாகச் செயல்படும் பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கு நாமும் எப்படித் துணைபோகிறோம் என்பதையெல்லாம் நாம் ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
செயலிகள் மூலம் போக்குவரத்துச் சேவை வழங்கும் மூன்று தனியார் நிறுவனங்களைப் பார்க்க முடிகிறது. சான் பிரான்சிஸ்கோவில் மைய அலுவலகத்தைக் கொண்டிருக்கும் ஊபர் கார் சர்வீஸ் 2009-ல் தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 72 நாடுகளில் 10,500 நகரங்களில் இதன் சேவை இருக்கிறது. இதனுடைய ஆண்டு வருமானம் 17.46 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1,33,510,50,90,000).
இரண்டாவது, இந்தியாவில் தொடங்கப்பட்ட ஓலா கார் சேவை. பவிஷ் அகர்வால் இந்த ஓலா நிறுவனத்தை 2010-ல் தொடங்கினார். தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் 250 நகரங்களில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. இதனுடைய ஆண்டு வருமானம் ரூ.983 கோடி. 2015-ல் ஆரம்பிக்கப்பட்டு சமீபத்தில் பிரபலமாகியிருக்கும் ராபிடோ என்ற செயலி இந்தியாவின் 100 நகரங்களில் பைக் சேவை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.89 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த மூன்று நிறுவனங்களும்தான் இந்தியாவில் லட்சக்கணக்கான கார், ஆட்டோ, பைக் உரிமையாளர்களையும் ஓட்டுநர்களையும் தங்கள் கைவசம் வைத்திருக்கின்றன. இந்தியாவில் கார் ஓட்டுநர்களாக இருப்பவர்களில் சுமார் 10 சதவீதத்தினர்தான் சொந்த கார் வைத்து ஓட்டுகிறார்கள். மீதமுள்ள எல்லோருமே வாடகை கார்தான் ஓட்டுகிறார்கள். அவர்களின் தினசரி ஊதியம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். எடுத்துக்காட்டாக, ஓலா, ஊபர் செயலி மூலமாக கார் ஓட்டும்போது ரூ.200-க்கு ஒருவர் சவாரி செல்கிறார் என்றால், அதில் ஓட்டுநருக்கு ரூ.140-தான் கிடைக்கும். 30% ஓலா நிறுவனத்துக்குத் தர வேண்டும்.
இதில் ஓலா நிறுவனத்துக்கு 20% கமிஷன், 10% கஸ்டமருக்குத் தர வேண்டிய காப்பீடு, ஜிஎஸ்டி என்று கணக்கிடுகிறார்கள். ஆனால், போக்குவரத்து அதிகமாக உள்ள நேரத்தில் (Peak Hour) பயணியிடம் கூடுதலாக வாங்கும் பணத்தில் ஓட்டுநருக்கு நியாயமான பங்கு தருவதில்லை. எனவே, ஒரு நாளைக்கு 12-லிருந்து 16 மணி நேரம் வரை கார் ஓட்டினால்தான், ஓட்டுநர்கள் அதிகபட்சமாக ரூ.5,000 சம்பாதிக்க முடியும். இதில் பெட்ரோல், டீசலுக்கு ரூ.1,500 செலவாகும். கார் முதலாளிக்கு ரூ.1,000 தர வேண்டும். ஓலா நிறுவனத்துக்கு ரூ.1,500 கொடுக்க வேண்டும். மீதமுள்ள ரூ.1,000-ஐதான் கார் ஓட்டுநர் வீட்டிற்கு எடுத்துச்செல்ல முடியும்.
எல்லா நாட்களும் ரூ.5,000 சம்பாதிக்க முடியாது. ஒருசில நாட்களில் குறைவான சவாரி கிடைக்கும்போது, மொத்த செலவு போக, கார் முதலாளிக்குக் கொடுப்பதற்கான பணம் மட்டுமே கையில் மிஞ்சும். அந்த நாளில் அந்த ஓட்டுநர் வீட்டுக்குப் பணமே கொண்டுசெல்ல முடியாது. அப்போது அவர் பண நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்.
அது மட்டுமல்லாமல், ஓட்டுநர்கள் உடலளவிலும், உணர்வளவிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். வீட்டுக்கு அருகில் பயணியை இறக்கிவிடும் தருணத்தில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று வீட்டுக்கு வந்தால், அந்தச் சமயத்தில்தான் அதிகமாகப் பணம் கிடைக்கும் சவாரியை அவருக்குக் கொடுப்பார்கள். உடனே, அந்த சவாரிக்காக ஓட வேண்டியிருக்கும். அடுத்தடுத்த சவாரிகள் என்று தொடர்ந்து வண்டி ஓட்டுவதால், உடலும் மனமும் களைப்படைந்த சூழலில்தான் வீட்டுக்கு வந்துசேர்கிறார்கள். இரவில் 5 மணி நேரம் அல்லது 6 மணி நேரம் உறங்கிவிட்டு, மீண்டும் காலையில் 6 மணிக்கு உடல் வலியோடு ஓலா செயலியில் உள்நுழைந்த பிறகு, வண்டி ஓட்டுவதற்கு ஓட வேண்டும்.
இந்த ஓட்டுநர்கள் மனைவியோடும் பிள்ளைகளோடும் நேரம் செலவழிக்க முடியாமல் தவிக்கிறார்கள். மொத்தத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை. மேலும், இரவு 11 மணிக்கு மேல் சற்றுத் தொலைவில் பயணிகளை இறக்கிவிட நேர்ந்தால், அங்கேயே தங்கி நேரத்தைக் கழிக்க வேண்டியிருக்கும். வெறும் வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குச் சென்றால் அந்த டீசல் செலவை யார் ஏற்பது? எனவே, காரிலேயே தூங்கிவிட்டு, காலையில் அங்கிருந்து ஒரு சவாரி கிடைக்கும்போது அடுத்த நாள் பயணத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப் பல நாட்கள் வீட்டுக்குச் செல்ல முடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.
வாடகை காரில் பயணிக்கும் எல்லாப் பயணிகளும் ஓட்டுநர்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஓட்டுநர்கள் என்றால் கிள்ளுக்கீரை என்றுதான் பலரும் நினைக்கிறோம். செயலியில் பதிவுசெய்தவுடனே கார் வந்துவிட வேண்டும். இல்லையென்றால் கோவப்படுகிறோம். ஆனால், கூட்ட நெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் நிறைந்த நகரத்தில் திடீரென்று நிகழும் பேரணி, இறுதி ஊர்வலம் போன்றவற்றால் பயணம் தாமதமாகிறது. இதனால் ஓட்டுநர்கள் தங்கள் சவாரியை ரத்துசெய்துவிடுகிறார்கள். இதனால், நஷ்டம் அவர்களுக்குத்தான்.
வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டுமென்றால், ஒரு கிலோமீட்டருக்கு எவ்வளவு கட்டணம் என்று அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் கார் சேவை வழங்கும் நிறுவனங்களும் அந்த நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஓட்டுநர்களுக்குக் கொடுப்பார்கள். ஏற்கெனவே, மஹாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஒரு கிலோமீட்டருக்கு எவ்வளவு தொகை என்று அந்தந்த மாநிலங்களின் அரசுகள் தீர்மானித்திருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆகவே, ஓட்டுநருக்கு வந்துசேர வேண்டிய ஊதியத்தைச் சரியாகப் பெறுவதற்கு அரசு உதவ வேண்டும். அப்போதுதான் ஓட்டுநர்களின் வாழ்வு மேம்படும்.
- அ.இருதயராஜ், காட்சித் தகவலியல் பேராசிரியர். தொடர்புக்கு: iruraj2020@gmail.com