சிறப்புக் கட்டுரைகள்

எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் ட்விட்டர்: ஜனநாயகத்துக்கு நன்மையா?

ச.கோபாலகிருஷ்ணன்

பிற சமூக வலைதளங்களைவிடக் குறைவான பயனர்களைக் கொண்டிருந்தாலும் சமூகத்தில் அதிக செல்வாக்கு செலுத்தும் ட்விட்டர் தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வசம் சென்றுவிட்டது. 44 பில்லியன் டாலர் தொகைக்கு ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் மஸ்க் வாங்கிக்கொள்ள ட்விட்டர் இயக்குநர்கள் குழு (Board of Directors) ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராகிவிடுவார்.

செல்வாக்கு மிக்க சமூக ஊடகம்

அரசுகளின் தலைவர்கள், ஆட்சியாளர்கள், உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள், அரசியலர்கள், சினிமா நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ட்விட்டரையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சொற்களைக் கொண்டு, செய்திகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் ஹாஷ்டாக் (#) மூலம் எந்த ஒரு செய்தியையும் அதிவிரைவாகப் பரப்பி, உலக அளவில் ட்ரெண்ட் செய்யவும் மிகவும் தோதான ஊடகமாக இருந்ததால் ட்விட்டர் மிக எளிதில் பிரபலமடைந்தது. 2006-ல் தொடங்கப்பட்ட ட்விட்டர் 2010-12-ல் லிபியா, எகிப்து, துனீசியா உள்ளிட்ட நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகள் அகற்றப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்த ‘அரபு வசந்த’த்துக்கு முக்கியப் பங்காற்றியது. உலகின் செய்தி ஊடகங்கள் அனைத்தும் உடனுக்குடன் செய்திகளைத் தமது ட்விட்டர் பக்கங்களில் வலையேற்றுவது அத்தியாவசியமானது.

வியப்புக்குரிய ஆளுமை

விண்வெளி ஆராய்ச்சிக்கான மலிவு விலை ராக்கெட்களைத் தயாரிக்கும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியவர் எலான் மஸ்க். அதோடு, கனரக மின்வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தையும் அவர் விலைக்கு வாங்கினார். இவ்விரு நிறுவனங்களிலும் அவர் பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டுகிறவர் மட்டுமல்ல. ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்களின் தலைமை வடிவமைப்பாளரும் அவர்தான். டெஸ்லாவிலும் பல்வேறு மேம்பட்ட வசதிகளை உள்ளடக்கிய புதிய மாடல் கார்களின் வடிவமைப்பில் சி.இ.ஓ. மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளரான அவருக்கு முக்கியப் பங்குள்ளது.

இப்படிப் பல நிறுவனங்களைத் தொடங்கியும் விலைக்கு வாங்கியும் விண்வெளி ஆராய்ச்சி, வாகன உற்பத்தி, சூரியசக்தி மின்கலன் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு, சுரங்க வடிவமைப்பு, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து, உலகின் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்திருக்கிறார் எலான் மஸ்க். மனித குலத்தை அனைத்துத் துறைகளிலும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நகர்த்திச் செல்லும் வேட்கை, தடாலடி முடிவுகளை எடுக்கும் துணிச்சல், பலரால் நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்களை முடித்துக் காட்டும் திறமை ஆகியவற்றால், உலகின் செல்வாக்கு மிக்க தொழிலதிபராகவும் மிகப் புகழ்பெற்ற ஆளுமையாகவும் உயர்ந்திருக்கிறார் எலான் மஸ்க்.

மஸ்க் முன்வைக்கும் மாற்றங்கள்

ட்விட்டரைக் கைப்பற்றிய பிறகு, அதில் பிரதானமாக மூன்று மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாகச் சொல்லிவருகிறார் எலான் மஸ்க். ட்விட்டரில் கருத்துரிமை பேணப்படவில்லை என்பது மஸ்க்கின் முதன்மையான குற்றச்சாட்டு. உண்மைக்குப் புறம்பான தகவல்கள், ஆதாரமற்ற அவதூறுகள், வசைகளை உள்ளடக்கிய ட்வீட்களைப் போலியானவை என்று அம்பலப்படுத்துதல் மற்றும் அவற்றைத் தொடர்ந்து வெளியிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்குதல் உள்ளிட்ட தணிக்கை நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இந்த வகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரிலிருந்து நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டுள்ளார்.

ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக இல்லாத எந்த ஒரு கருத்துக்கும் ட்விட்டரில் இடமளிக்கப்பட வேண்டும் என்கிறார் மஸ்க். கருத்து/பேச்சு சுதந்திரத்தின் முற்றுமுழுதான ஆதரவாளர் என்று தன்னை முன்வைக்கிறார். மேலும், பயனர்களுக்கு எந்தெந்த ட்வீட்களை முன்னிலைப்படுத்திக் காண்பிப்பது என்பதை முடிவுசெய்யும் அல்காரிதங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது, ஃபேஸ்புக் பதிவுகளுக்கு இருப்பதுபோல் ட்வீட்களைத் திருத்துவதற்கான எடிட்டிங் வசதியை அறிமுகப்படுத்துவது, நபர்கள் மூலம் அல்லாமல் மென்பொருள் மூலம் இயக்கப்படும் ட்விட்டர் பாட் (Bot) கணக்குகளை நீக்குவது, பிரபலங்களின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுவந்த நீல டிக் அங்கீகாரத்தைத் தனிநபர்களால் இயக்கப்படும் அனைத்து ட்விட்டர் கணக்குகளுக்கும் அளிப்பது உள்ளிட்ட பல மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.

கருத்துச் சுதந்திரம் X அவதூறுகள்

மஸ்க் முன்வைக்கும் மாற்றங்கள் அனைத்துக்கும் நல்விளைவுகளும் உண்டு, தீய விளைவுகளும் உண்டு. கருத்துச் சுதந்திரத்துக்கு முற்றுமுழுதான ஆதரவு என்னும் பெயரில் ஆதாரமற்ற பொய்யான கருத்துகளையும் வசைகளையும் அனுமதிப்பது சமூகத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதோடு, தனிநபர்கள் மீதான தாக்குதல்களை இயல்பாக்கிவிடும். ஏற்கெனவே ட்விட்டரில் இவை அதிகமாக இருந்ததால்தான் ட்விட்டர் நிர்வாகம் தணிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்திவந்தது. அவற்றிலேயே பல போதாமைகள் இருப்பதாக ஜனநாயகச் சிந்தனையாளர்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் குற்றம்சாட்டிவருகையில், கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் இந்தத் தணிக்கை முறையை நீக்குவதோ மாற்றியமைப்பதோ நன்மையைவிடத் தீமையையே கொண்டுவரும் என்று அஞ்சப்படுகிறது.

அதே நேரம், இந்தத் தணிக்கை முறையை ட்விட்டர் நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதற்கான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. 2020 அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி, அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஜோ பைடன், அவருடைய மகன் ஹண்டர் பைடன் ஆகிய இருவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ‘நியூயார்க் போஸ்ட்’ கட்டுரை ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டதைத் தீவிர வலதுசாரிகளும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். பொதுவாகவே, ட்விட்டர் நிறுவனம் இடது தாராளவாதப் போக்குக்கு ஆதரவாக இருப்பதாக தீவிர வலதுசாரிகள் குற்றம்சாட்டிவருகிறார்கள். ஜனநாயகக் கட்சி மீதான சாய்வும் அதிகமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்தப் பின்னணியில் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியிருப்பது குடியரசுக் கட்சி ஆதரவு முகாமில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஊழியர்களின் எதிர்காலம்

ட்விட்டரின் ஊழியர்கள் நிலை என்னவாகும் என்கிற கேள்விக்கு இப்போதைக்குத் தெளிவான விடை தெரியவில்லை. ஐந்தரை மாதங்களுக்கு முன் ட்விட்டர் சி.இ.ஓ.வாகப் பொறுப்பேற்ற பராக் அகர்வால், ட்விட்டரில் கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட போலித் தகவல் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்த சட்டப் பிரிவுத் தலைவர் விஜயா கட்டே உள்ளிட்ட இந்திய-அமெரிக்கர்கள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டரை மஸ்க் கைப்பற்றிய பிறகு நிகழ்ந்த ஊழியர் கூட்டத்தில் விஜயா கண்ணீர் சிந்தி அழுததாகச் செய்திகள் வெளியாகின. விஜயா கட்டேவை மஸ்க் கடுமையாக விமர்சித்துவருகிறார். நீக்கப்பட்டாலும் இவ்விருவரும் அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். பிற ஊழியர்கள் இந்த ஆண்டின் இறுதிவரை வேலையை விட்டு நீக்கப்பட மாட்டார்கள் என்று ஊழியர்களுக்கிடையிலான கூட்டத்தில் பராக் அகர்வால் உறுதியளித்துள்ளார். ஊழியர்களை நீக்குவது அல்லது தக்கவைத்துக்கொள்வது குறித்து எலான் மஸ்க் இதுவரை எதுவும் பேசவில்லை.

ஆனால், ட்விட்டரைக் கைப்பற்றுவதற்கான தொகையில் கிட்டத்தட்ட பாதியை எலான் மஸ்க் ரொக்கமாகக் கொடுத்தாக வேண்டும். இதற்காகக் கடன் கொடுக்கும் வங்கிகளிடம் அவர் ட்விட்டரின் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைப்பது, ட்வீட்கள் மூலம் வருவாய் ஈட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் ட்விட்டரின் நிதிநிலைமையை மேம்படுத்தப்போவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார் என்னும் செய்திகள் வெளியாகியுள்ளன.

லாப நோக்கத்தை முதன்மைப்படுத்தாத பொதுப் பங்கு நிறுவனமாக இருந்த ட்விட்டர், தனியார் நிறுவனமாக, பெரும்பணக்காரரான ஒற்றை நபரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. தனிநபர்கள் எவ்வளவு ஜனநாயக விழுமியங்களைப் பேணுகிறவர்களாக, நவீன சிந்தனைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் முழுமையாக ஒரு விஷயத்தைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்னும் குரல் முற்றிலும் புறக்கணிக்கத்தக்கதல்ல.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

SCROLL FOR NEXT