சிறப்புக் கட்டுரைகள்

ஏழைகளின் வாழ்விட உரிமைக்கு அரசுதான் பொறுப்பு!

செய்திப்பிரிவு

சென்னை மாநகரம் தொடங்கி, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களை புல்டோசர்களால் இடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்குத் திட்டமிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அத்தகு பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் உழைக்கும் மக்களின் வாழ்விட உரிமையை உறுதிப்படுத்துவது முதல் கடமையாகும். நடைபெறும் நிகழ்வுகளோ அதற்கு எதிர்திசையில் செல்லத் தொடங்கியுள்ளதாக உணர முடிகிறது.

நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மேய்க்கால், அரசு நிலங்களில் குடியிருக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என வரையறுத்து, ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றுங்கள் எனத் தினந்தோறும் தமிழ்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாடு அரசின் அரசாணை எண்.186, வருவாய் நிலையாணை எண்.24-ன்படி மேய்க்கால், ஆட்சேபணையற்ற அரசு நிலங்களை வகைமாற்றம் செய்து, மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்க வழிவகை உள்ளது. இவ்வாறு வகைமாற்றம் செய்து ஒப்படைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக மக்கள் குடியிருந்துவரும் குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன.

“தமிழ்நாடு அரசு மக்களுக்குச் சாதகமாக இருக்கிறது, நீதிமன்ற உத்தரவை மீறி ஏதும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம்” என்று சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3,000 குடும்பங்கள் வாழ்விட உரிமையை உறுதிசெய்துகொள்வதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடிவருகின்றன. திமுக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தற்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அப்பகுதி மக்களின் வாழ்விட உரிமையை உறுதிசெய்வதற்காக மக்களோடு மக்களாக அனைத்துக் கட்சிகள், அமைப்புகளுடன் போராடிவருகின்றனர்.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், பெத்தேல் நகர் தொடர்பான பொதுநல வழக்கு சார்ந்த விசாரணையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் பெத்தேல் நகர் பகுதி வீடுகளை இடித்துத் தள்ளவும் மின்இணைப்புகளைத் துண்டிக்கவும் உத்தரவிட்டபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்வினை ஆற்றவில்லை. மக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் (85 வயது), நேரடியாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தி, மக்களின் வாழ்விட உரிமைக்கான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தார். இப்படிப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் மக்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்காமல் இருப்பது முரணாக இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவின் அன்றைய தலைவர் மு.அப்பாவு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய நில நிர்வாகம் குறித்த குழு (2008-2009) மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி, விவரங்களை அறிக்கையாகச் சமர்ப்பித்தது. அதில், மேய்க்கால் புறம்போக்கில் குடியிருக்கும் பெத்தேல் நகர் மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்படி, அரசு நடவடிக்கையின் பேரில் பெத்தேல் நகர் பகுதி மக்களுக்குப் பட்டா கொடுப்பதில் உள்ள சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும், பெத்தேல் நகர் போன்று ஏழை எளிய மக்களின் வாழ்விட உரிமையானது, பொதுநல வழக்குகளின் பெயரால் நீதிமன்றத்தில் தடைசெய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

சென்னை ராமாபுரம் திருமலை நகர் பகுதியில், மக்கள் குடியிருந்த இடத்தை தமிழ்நாடு அரசு வகை மாற்றம் செய்து தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் விற்பனைப் பத்திரம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தனியொருவர் தொடுத்த பொதுநல வழக்கில், அப்பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ‘‘ஒருவர் வறுமையில் இருக்கிறார் என்பதற்காக அங்கீகரிக்கப்படாத இடங்களில் குடியிருக்கும் மக்களின் வீடுகளை இடித்து அகற்றும்போது, மாற்றுக் குடியிருப்பு வழங்கக் கூடாது" என்கிற வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 1947-ல் அமைக்கப்பட்ட ‘நகர மேம்பாட்டு அறக்கட்டளை’ (City Improvement Trust) நீர்நிலைப் பகுதிகள், பல்வேறு வகை நிலங்களை வகை மாற்றம் செய்து உயர்தர, நடுத்தர குடியிருப்புகள், தனிநபர் பங்களாக்கள் கட்டுவதற்கு வழிவகை செய்தது. இந்தப் பகுதிகளை இப்போது ஆக்கிரமிப்பு என வரையறுக்க முடியுமா?

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் முகப்பேர், நெற்குன்றம் பகுதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்காகக் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் நீர்நிலைகளின் மீதுதான் கட்டப்பட்டுள்ளன. இது குறித்துப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலர்கள் எழுப்பிய கோரிக்கைகளும் விமர்சனங்களும் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், முதலீடுகளை ஈர்க்கவும், கடன்களை வாங்கவும் மாநில அரசு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த முதலீடுகளும் கடன்களும் ஏழை எளிய மக்களின் வாழ்விடத்தைக் குறிபார்த்துச் சூறையாடுவதற்கு வழிவகுக்கக் கூடாது. அது எந்த வழியில், எந்தத் தளங்களில் வந்தாலும் அவற்றை ‘மக்கள் நல அரசு’ என்கிற திசைவழியிலேயே எதிர்கொள்ள வேண்டும்.

இன்று மனிதவளக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கு அடிப்படையான காரணம், ‘மக்கள் நல அரசு’ (welfare state) என்கிற அடிப்படையில் திமுக, அதிமுக அரசுகள் மேற்கொண்ட மக்கள் நலத் திட்டங்கள்தான். அதில் வாழ்விட உரிமை அடிப்படையானது. இலவச குடிமனைப் பட்டா, வறிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், ஓலைக் குடிசைகளில் வசித்த மக்களுக்கு அந்தப் பகுதியிலேயே தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு, ஆட்சேபணையற்ற - ஆட்சேபணை உள்ள குடியிருப்புகளைப் பிரித்து, ஆட்சேபணையற்ற பகுதிகளுக்கு நில வகை மாற்றம் செய்து பட்டா வழங்கியது, ஆட்சேபணை உள்ள பகுதியில் குடியிருந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கியது எனப் பல முன்னோடித் திட்டங்கள் முக்கியமானவையாக உள்ளன.

இந்த வரலாற்றின் அடிப்படையில், கடந்த கால அரசுகளின் வழிகாட்டு ஆவணங்கள் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் வழக்காட தமிழ்நாடு அரசு வழிகாட்ட வேண்டும். மக்களின் வாழ்விட உரிமைகள் நீதிமன்றங்களில் விவாதத்துக்கு உள்ளாக்கப்படும்போது அரசின் சமூகநீதி சார்ந்த நிலைப்பாடுகளை, கொள்கை முடிவுகளை எடுத்துரைத்து எளிய மக்களின் வாழ்விட உரிமைகளைப் பெற்றுத்தருவதில் அரசு வழக்கறிஞர்கள் முன்நிற்பதுதானே சரியாக இருக்கும்.

- ஜி.செல்வா, மாவட்டச் செயலாளர், சிபிஐ-எம், மத்திய சென்னை. தொடர்புக்கு: selvacpim@gmail.com

SCROLL FOR NEXT