சிறப்புக் கட்டுரைகள்

செக்காவ்: ஆழ்மனதின் கதை மருத்துவர்

செய்திப்பிரிவு

தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஆன்டன் செக்காவ் (1860-904) அடிப்படையில் ஒரு மருத்துவர். மாஸ்கோவில் மருத்துவம் பயின்ற செக்காவ் அங்கே களப்பணியாற்றச் சென்றபோது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, வறுமையில் தள்ளப்பட்டு, மக்கள் எவ்வாறு நோயாளிகளாக உருமாற்றப்படுகிறார்கள் என்று தெரிந்துகொண்டபோது அதிர்ச்சி அடைந்தார். மருத்துவம் படித்தால் பணம் சம்பாதிக்கலாம், கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலக்கு பெறலாம் என்றெல்லாம் எண்ணியிருந்த செக்காவ், இந்த மனிதர்களையெல்லாம் பார்த்த பிறகு, இவர்களுக்குச் சேவை செய்வதையே தன் முழு நேரத் தொழிலாக்கிக்கொண்டார். நோயாளிகளிடமிருந்து ரொட்டியும் முட்டையும் குளிராடையுமே அவர்களுக்கு மருத்துவம் பார்த்ததற்கு அவருக்குக் கட்டணமாகக் கிடைத்தது. தனக்குக் காசநோய் முற்றிய நிலையிலேயும் தானே வைத்தியம் செய்துகொள்ள வேண்டிய அளவில் உடல் நலிவுற்றிருந்தாலும்கூட மக்கள் சேவையை செக்காவ் நிறுத்தவில்லை. மருத்துவர் என்ற அளவில் ஏழை எளியவர்களின் உடல் பிரச்சினைகளுக்கு மருத்துவம் செய்த செக்காவ், ஒரு எழுத்தாளராக அவர்களின் மனங்களை ஆராயத் தொடங்கினார்.

பற்றிக்கொள்ள எந்தவிதமான நம்பிக்கையும் இன்றி, எதிர்காலம் குறித்த எந்தவிதமான யோசனையும் இன்றி, சலிப்படைந்துபோயிருந்த மக்களே செக்காவின் சிறுகதைப் பாத்திரங்களாக ஆனார்கள். அப்படி இயலாமையில் உழன்றுகொண்டிருந்தவர்களைக் கொண்டே, தன் அமர கதைகளை வடித்தார் செக்காவ். இப்படிப்பட்டவர்களின் ஆழ்மனதுக்குள் நுழையும் வித்தையைக் கற்றிருந்தார் செக்காவ். உறவுகளின் விரிசல்கள், அதனால் விளையும் குழப்பங்கள், அவநம்பிக்கை இவையே செக்காவின் கதைகளின் கருப்பொருட்களாக இருந்தன. பசியை விடவும் புறக்கணிப்பு மிகக் கொடுமையானது என்பதை செக்காவ் புரிந்துகொண்டார்.

சிறுவன் வான்காவின் நம்பிக்கையின் வழியே வாசகருக்குக் கடத்தப்படும் பெரும் துயரம், ஒரு தும்மலால் அவதிப்படும் குமாஸ்தா, இலக்கற்ற வாழ்க்கையின் எல்லாத் திசைகளிலும் தோல்வி ஒன்றையே காணும் நிகோலோய், பச்சோந்தியாய் நிமிடத்துக்கொருதரம் நிறம் மாறும் அரசு ஊழியர் இவர்களெல்லாம் செக்காவ் படைத்த சித்திரங்கள். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசினாலும் ஒரு சிறுகதை என்பது பிரச்சார தொனியில் இருக்கக் கூடாது என்றார் செக்காவ். ஒரு சிற்பி சிற்பத்தைச் செதுக்குவதுபோல் சிறுகதையைச் செதுக்க வேண்டும் என்று சொன்னார். மனித இயல்பை ஆராய்வதே தன் கதைகளின் மையப் புள்ளி என்று சொன்ன செக்காவ், மனித இயல்புகளைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவதற்கு மிகச் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். வழக்கொழிந்துபோன சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஒரு சொல்கூட வீணடிக்கப்பட்டுவிடக் கூடாது என்றார் செக்காவ். ஒரு நபரின் குணாம்சத்தை ஓரிரு வார்த்தைகளில்கூடச் சொல்லிவிட முடியும் என்றார்.

பீட்டர்ஸ்பர்க் ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானிலிருந்து சகலின் தீவு ரஷ்யாவின் கைகளுக்கு வந்திருந்தது. ரஷ்யா அந்தத் தீவை ஒரு தண்டனைத் தீவாக மாற்றியிருந்தது. அங்கே கைதிகள் விலங்குகளைப் போல நடத்தப்பட்டார்கள். சகலின் தீவில் செக்காவ் வசித்த நாட்கள் அவர் மனதை மிக ஆழமாகப் பாதித்தன. அங்கே இருந்த குற்றவாளிகளுடன் நடந்த உரையாடல்கள் அவரைச் சிந்திக்க வைத்தன. ரஷ்யாவின் அரசியல் பற்றி அவருக்கு நிறையக் கேள்விகள் எழுந்தன. அது அவருடைய எழுத்தின் போக்கில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.

வாழ்க்கையின் முரண்களை முன்வைத்தே செக்காவின் கதையுலகம் நகர்கிறது. ‘அரசு குமாஸ்தாவின் மரணம்’ (The Death of a Government Clerk) என்ற சிறுகதையில், தன் உயர் அதிகாரி தன்னிடம் கோபப்பட்டுவிடுவாரோ என்ற கற்பனை பயத்திலேயே உயிரை விடும் குமாஸ்தா, ரஷ்யாவின் அன்றைய அரசு அலுவலகங்களில் புரையோடிப்போயிருந்த போலித்தனங்களை நம் கண் முன் கொண்டுவருகிறார். செக்கோவ் கண்டுணர்ந்து காட்சிப்படுத்திய மனிதர்களின் ஆழ்மனப் போராட்டங்கள்கூட கூர்மையான சமூக விமர்சனத்தை முன்வைத்தன. சமூக அவலங்களையெல்லாம் இந்த ஏழை எளிய மனிதர்களின் கண் கொண்டே காட்சிப்படுத்தும் செக்கோவ், மிகப் பெரிய சமூக மாற்றங்கள் இந்த மக்களின் வாழ்வில் அரங்கேற்றும் அவலங்களைத் தன் கதைகளில் பதிவிடுகிறார். தனது மகனின் மரணத்தால் மிகுந்த துக்கம் அடைந்த குதிரைவண்டியோட்டி ஒருவர், தன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள யாராவது இருக்கிறார்களா என்று தேடுகிறார். அவருடன் நின்று பேசவோ, அவருடைய துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளவோ யாரும் முன்வராத நிலையில், அவர் தன் குதிரையிடம் பேசுகிறார். மகன் இறந்த துக்கம் பெரியதா, அதனைப் பகிர்ந்துகொள்ள யாரும் கிடைக்காத துக்கம் பெரியதா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. செக்காவின் புகழ்பெற்ற சிறுகதைகளுள் ஒன்றான ‘ஆறாவது வார்டு’ கதை, ஒரு மனநோயாளிக்கும் மனநல மருத்துவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தின் மூலம் அன்றைய ரஷ்யாவின் நிலை, அரசியல் எப்படி அதிகாரத்தின் குவிமையமாக இருந்தது.. இப்படிப்பட்ட ஒரு நிலையை ஒரு தனிமனிதர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதையெல்லாம் விவரிக்கிறது. இந்தச் சிறுகதைதான் தன்னை ஒரு போராளியாக மாற்றியது என்று லெனின் பதிவுசெய்திருக்கிறார். 1904 ஜூலை 15 அன்று ஜெர்மனியில் செக்காவ் மரணமடைந்த பிறகு, அவரது உடல் ரயிலில் ரஷ்யாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவரது உடலை வைப்பதற்கு ஒரு குளிர்சாதனப் பெட்டி தேவைப்பட்டது. கடல் சிப்பிகளைக் கொண்டுவரும் குளிர்சாதனப் பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டு, பெட்டியின் மேலே சிப்பி என்று எழுதப்பட்டு அவரது உடல் எடுத்துவரப்பட்டது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட மாக்சிம் கார்க்கி கதறி அழுதார்.

செக்காவ் தன் நண்பருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் “இந்த பிரபஞ்சத்தின் மிகப் பெரிய விந்தை மனிதனே” என்று சொல்லுகிறார். அவனை ஆராய்வதே தன் வேலை என்றும் சொல்கிறார். இப்படி மனிதர்களின் ஆழ்மனதுக்குள் சென்று, அடியாழத்தில் பொதிந்துள்ள விந்தைகளை அலசி ஆராய்ந்த செக்காவ், இவற்றுக்கான தீர்வைப் பொதுவெளியில் தேட ஆரம்பித்த அறியாமையே ரஷ்யாவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று சொல்கிறார். ஒரு மருத்துவராக நோய்க்கான காரணத்தைச் சொன்னவர், அதற்கான தீர்வாகச் சொன்னதுதான் கல்வி. அறியாமை இருளில் இருந்து கல்வியின் துணை கொண்டு வெளியே வர செக்காவ் கண்ட கனவு ரஷ்யாவிற்கு மட்டுமல்ல... உலகம் முழுமைக்குமானது.

- உதவிப் பேராசிரியர், ஆங்கிலத் துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை.

தொடர்புக்கு: mmekalaip@gmail.com

SCROLL FOR NEXT