”மனநோயும் உடல்நோய் தான். உடல்நலன் குன்றினால் சிகிச்சை எடுப்பதுபோல் மனநல சிகிச்சைகளையும் தயங்காமல் மேற்கொள்ள வேண்டும். அதுபோல், மனநோயாளிகள் பற்றி ஊடகங்கள், சினிமா சித்தரிப்பில் மாற்றம் வந்தால், அது மனநோயாளிகள் மீதான சமூகப் புறக்கணிப்பை சீர்செய்ய பேருதவியாக இருக்கும்” என்கிறார் மனநல மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமி.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய விழாவில், நாட்டின் தலைசிறந்த 29 பெண்களுக்கு பெண் சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அந்த நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த மனநல மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமி 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார். சென்னையில் ஸ்கார்ஃப் (SCARF) எனப்படும் மனச்சிதைவு ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநராகவும் உள்ள இவருக்கு, மனநோய்களை குணப்படுத்துவதைத் தாண்டியும் மனநோய் சார்ந்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 'இந்து தமிழ் திசை' இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி..
மனநோய் என்றால் என்ன?
"மனநோய் என்பதும் உடல்நோய் என்ற புரிதல் வர வேண்டும். மனம் என்ற வார்த்தைக்கு மக்கள் பல்வேறு கற்பிதங்களை வைத்துள்ளனர். உண்மையில் நம் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் நோய்தான் மனநோய். இந்த எளிமையான விஷயத்தைப் புரிந்துகொண்டால் மனநோய்க்கான மருத்துவ சிகிச்சையை மக்கள் தயக்கமில்லாமல் எடுத்துக் கொள்ள முன்வருவர். நம்முடைய உடலில் உள்ள மற்ற உறுப்புகளில் பிரச்சினை என்றால் எப்படி உடனே மருத்துவரை அணுகுகிறோமோ, அவ்வாறே மனநலப் பிரச்சினைக்கும் மருத்துவரை உடனே நாடினால் நோய் முற்றிவிடாமல் ஆரம்பநிலையிலேயே வெகு எளிதாகக் குணப்படுத்திவிடலாம்."
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
"இதுதான் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. மனித வாழ்க்கை இப்போதைய காலத்தில் மிகவும் பரபரப்பாகிவிட்டது. அதில் குடும்பம், தொழில், கல்வி நிலையம், பணியிடம், பயண வழி எனப் பல இடங்களில் நமக்கு இமோஷனல் இம்பேலன்ஸ், அதாவது உணர்ச்சித் தடுமாற்றம் ஏற்படும் நிகழ்வுகள் ஏற்படலாம். அது ஒரே ஒரு நாள் ஏற்படலாம். இல்லை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏற்படலாம். ஆனால், அந்த நிகழ்வு எப்போது உங்களுடைய அன்றாட செயல்பாட்டை பாதித்து உங்களை முடக்குகிறதோ அப்போது நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
நான் படிக்கிறேன், வேலை பார்க்கிறேன், இல்லத்தரசியாக இருக்கிறேன். இந்தப் பிரச்சினையால் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை என்று நீங்களே உணர்வீர்கள் அப்போது மருத்துவரை நாடுங்கள். சில நேரங்களில் ஒரு தனிநபர் தானே உணர்ந்து மருத்துவரை நாடும் நிலையைக் கடந்திருப்பார். அந்த மாதிரியான சூழலில் குடும்பத்தினர் புரிந்து கொண்டு அவரை மனநல மருத்துவத்திற்கு உட்படுத்த வேண்டும். நீங்கள் கோயில், மசூதி, தேவாலயம் என சுற்றி முடித்துவிட்டு நோயை இன்னும் முற்றவைத்து வந்து சேர்ந்தால் தீர்வுக்கு மிக அதிகமான காலம் தேவைப்படலாம். சில நேரங்களில் வாழ்நாள் முழுவதும் மாத்திரை, மருந்துகள் அவசியம் என்ற சூழல் உருவாகலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே கரோனாவால் பல்வேறு இடர்களை சந்தித்தது. அதனால் மக்களுக்கு நோய் அச்சம் முதல் உயிர் பயம் வரை வந்து சேர்ந்தது. ஆனால், ஒவ்வொரு நாளும் கரோனா பற்றி கிடைத்தத் தகவல்களால் மக்களால் இயல்பு நிலையிலேயே இருக்க இயன்றது. ஆக, இதுபோன்ற சாதாரண அச்சம், அழுத்தம், பயம் வேறு மனநோய் என்பது வேறு."
மனநோய் சிகிச்சையை மேற்கொள்ள மக்களுக்கு இருக்கும் மனத்தடைக்கு காரணம் என்ன?
"மனநோய் சிகிச்சைக்குச் செல்வது வெளிப்படையாகத் தெரிந்தால் திருமணத்திற்கு தடை ஏற்படலாம், திருமண உறவில் இருந்தால் குடும்பத்தில் குழப்பம் வரலாம், பணியில் சிக்கல் வரலாம் போன்ற அச்சங்கள் தான் தயக்கத்திற்குக் காரணமாக உள்ளன. இதற்கு ஒட்டுமொத்த சமூகப் பார்வையும் மாற வேண்டும். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. மக்கள் அதிக விழிப்புணர்வோடு சிகிச்சைக்கு ஆரம்ப நிலையிலேயே வருகின்றனர். நான் சைக்கியாட்ரிக் சிகிச்சையில் இருக்கிறேன் என்பதை வெளியில் சொல்ல தயங்கும்போக்கும் குறைந்துள்ளது. ஆனால் இது இன்னும் மேம்பட சமூக விழிப்புணர்வுக்கு அரசும், ஊடகமும் சினிமா எனும் மாஸ் மீடியாவும் உதவ வேண்டும்."
சரி, அரசு, ஊடகம், சினிமாவிடம் என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறீர்கள்?
"அரசாங்கம் ஒரு காலத்தில் தொழுநோய் ஒழிப்பிற்கு மிகப்பெரிய பிரம்மாண்டமான பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இன்று தொழுநோய் பெருமளவில் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதுபோன்றதொரு மெகா விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மனநோய்க்கும் மேற்கொள்ள வேண்டும். காட்சி, அச்சு, ஆன்லைன் எனப் பல்வேறு செய்தி ஊடகங்களும் இப்போது உள்ளன. அவை அனைத்துமே மனநோயாளிகள் பற்றிய நேர்மறையான செய்திகளை வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
உண்மையில் மனநோயாளிகளில் மிகவும் சொற்பமான சதவீத நோயாளிகளே வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்களையும் கூட முறையான சிகிச்சைக்கு உட்படுத்தினால் மறுவாழ்வு தரலாம். அதைத்தான் நாங்கள் ஸ்கார்ஃப் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், நம் ஊடகங்களில் சில இன்னும் சைக்கோ கொலையாளி என்று எழுதுகின்றன. ஏன், இதயநோய் உள்ளவர், சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர் என்றெல்லாம் எழுதுவது இல்லை. எந்த நோயுமே இல்லாதவர் கொலை செய்வதில்லையா? அப்படியென்றால் என்றைக்காவது ஏதாவது ஒரு ஊடகம் இதயநோய் கொலையாளி என்று எழுதுமா? இல்லை... நோயற்ற கொலையாளி என்றுதான் வருணிக்குமா? சைக்கோ கொலையாளி என்ற வார்த்தையைப் பார்க்கும் போதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கும்.
நீங்கள் எந்த ஒரு சிறைச்சாலைக்கும் சென்று அங்கு கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கைப் பின்னணியைப் பாருங்கள் அனைவரும் மனநிலை சரியானவர்களாகத் தான் இருப்பார்கள். மனநோய் முற்றி கொலை வரை செல்வோரின் எண்ணிக்கை உலகளவில் மிகவும் குறைவு. அப்படிச் செய்பவர்கள் சீக்கிரம் சிக்கியும் கொள்வார்கள். ஏனெனில் மனநிலை பாதிக்கப்பட்டோரால் ஆர்கஸ்ட்ரேடட், வெல் ப்ளான்ட் குற்றங்களைச் செய்ய முடியாது. ஆனால், சாதாரண நபர்கள் திட்டம் போட்டு, கூலிக்காக கொலை செய்கின்றனர்.
சினிமாவைப் பொறுத்தவரை சென்ஷேனலிஸத்துக்காக சைக்கோ த்ரில்லர் என்ற ஜானரை வைத்துள்ளனர். அதைத் தவிர்க்கலாம். மனநலம் சார்ந்த பிரச்சினையை, அவரின் வாழ்க்கை சவாலை, அவருக்குக் கிடைக்கும் மறுவாழ்வு வாய்ப்பை படமாக்கலாம் செய்தியாக்கலாம்.
சாமானிய மக்கள், தாங்கள் மனநோயிலிருந்து மீண்டுவிட்டால் துணிச்சலாக அதை வெளியில் பகிர வேண்டும். அது மற்றவர்களை ஊக்குவிக்கும். சமூகத்தின் பார்வையையும் மாற்றும்."
மத்திய பட்ஜெட்டில் டெலி சைக்கியாட்ரிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பற்றி...
"மத்திய பட்ஜெட்டில் டெலி சைக்கியாட்ரிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை நிச்சயமாக வரவேற்கிறோம். அது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், மனநோய் சிகிச்சை சேவைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். நிறைய மனநல ஆலோசகர்கள் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். தமிழகம், கேரளம், கர்நாடகாவில் மனநோய் சிகிச்சையாளர்களின் இருப்பு, மனநல ஆலோசகர்களின் இருப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ஆனால், வடக்கில் நிலைமை அப்படி இல்லை. அங்கே டெலி சைக்கியாட்ரியைவிட களப்பணிகளே தேவை. அதாவது மனநல சிகிச்சை சேவை கிராஸ்ரூட்ஸிலேயே கிடைக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே குறைந்தபட்ச மனநல சிகிச்சைக்கான மாத்திரை, மருந்துகள் இருக்க வேண்டும். எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கும் மனநல அடிப்படை சிகிச்சை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் நீண்ட காலமாக எம்பிபிஎஸ் கல்வியில் மனநல பாடத்தை இணைக்குமாறு கூறுகிறோம். சிகிச்சைக்கான வாய்ப்பும், வசதியும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இருக்குமானால் நோய் முற்றும் வாய்ப்பு குறையும் அல்லவா?"
மனச்சிதைவு நோயாளியைப் பற்றி நாம் தமிழ் சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம். ஒரு படத்தில் அப்படிப்பட்ட நோயாளியாக வரும் நடிகர் சீரியல் கில்லராக இருப்பார். மேலும் அவர் சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம் ஜெயில் போல் இருக்கும். அங்கே அவர் அடித்துத் துன்புறுத்தப்படுவார். உண்மை நிலவரம் என்ன?
"மனச்சிதைவு என்பதுதான் மனநோயின் முற்றிய நிலை. இந்த நோயாளிகளில் சிலர் சிகிச்சைக்கு நோய் முற்றிய பின்னர் அழைத்துவரப்படுவது உண்டு. அப்படி வருபவர்களில் ஒரு சிலர் சற்று வன்முறையாக நடந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் எல்லோரும் எப்போதும் கூலிப்படையினர் போல் கத்தியும், அரிவாளுமாக சுற்றுவதில்லை. திட்டமிட்டும் கொலை செய்பவர்களும் இல்லை. மனச்சிதைவு முற்றியவர்களுக்கு காதில் குரல் கேட்பது, கண்ணில் உருவம் தெரிவது (ஹேலுசினேஷன்) இருக்கலாம். அவர்களை நாங்கள் உள் நோயாளியாக அனுமதிப்போம். அவர்களின் வன்முறைத் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு சிகிச்சையளிக்கிறோம். இதுவும் மருத்துவமனை தான். சிறைச்சாலை இல்லை.
சினிமாவில் வருவது போல் யாரும் அடிக்கப்படுவதில்லை. மனநோயாளியை குறிப்பாக மனச்சிதைவு நோயாளியை எப்படி நடத்த வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அதன்படியே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஸ்கார்ஃப் மைய சிகிச்சை அதன்படியே நடக்கிறது. மேலும், நாங்கள் புதுக்கோட்டை, காஞ்சிபுரம் என இரண்டு மாவட்டங்களை தேர்வு செய்து அங்கு மனநோயாளிகளின் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மனநோயாளிகளுக்கு அரசாங்கத்தின் அடையாள அட்டை பெற்றுத் தருவதிலிருந்து அவர்களால் செய்ய முடிகிற வேலையில் அவர்களை அமர்த்தி பொருளாதார மேம்பாடு பெறும் வகையில் சேவைகளைச் செய்கிறோம். மனநோயாளிகளைக் கையாளும் குடும்பத்தினருக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறோம்."
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in