கேரளத்தில் நடைபெறும் அரசியல் அணி சேர்ப்புகளைப் பார்க்கும்போது மும்முனைப் போட்டி நிலவுவதைப் போலத் தோன்றுகிறது; காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருபுறம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மறுபுறம், கேரள சட்டப் பேரவையில் எப்படியாவது கால் பதித்துவிட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருக்கும் பாஜக தலைமையிலான அமைப்புகள் மற்றொருபுறம் என்று மும்முனைப் போட்டி காணப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தல்களைப் போல, வெல்லப்போவது ஐக்கிய ஜனநாயக முன்னணியா, இடதுசாரி ஜனநாயக முன்னணியா என்பதைத் தாண்டி, பாஜக அணியால் கேரளத்தில் இடம்பிடித்துவிட முடியுமா, முடியுமானால் எப்படி என்ற ஆர்வம் சேர்ந்துகொண்டிருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் கேரளத்தில் மட்டும்தான் பாஜகவால் சட்டப்பேரவைக்கோ மக்களவைக்கோ ஓர் உறுப்பினரைக்கூட அனுப்ப முடியாத நிலை காணப்படுகிறது.
2011-ல் இரு முன்னணிகளுக்கு இடையில் மிகக் கடுமையான போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 இடங்களிலும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 68 இடங்களிலும் வெற்றி பெற்றன; இரு அணிகளுக்கு இடையிலான தொகுதி வேறுபாடு வெறும் 4 இடங்கள் எனும் அளவுக்குப் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. அதற்குப் பிறகு நடந்த எல்லா இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் அணி வென்றது. 2014 மக்களவைப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அணி தன்னுடைய செல்வாக்கைத் தக்க வைத்துக்கொண்டது. அதற்குப் பின் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 65% அமைப்புகளை இடதுசாரி ஜனநாயக முன்னணி கைப்பற்றியதால் காங்கிரஸ் அணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டது.
இப்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸையும் அதன் தோழமைக் கட்சிகளையும் தோற்கடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று இடதுசாரி முன்னணி நம்பிக்கையுடன் இருக்கிறது. இதற்காகவே காங்கிரஸ் கூட்டணி அரசின் அடுக்கடுக்கான ஊழல்கள் மீது மக்களுடைய கவனம் குவியும்படியாக பிரச்சாரம் செய்து வருகிறது. கேரள அமைச்சர்கள் மீது மட்டுமல்லாமல் முதல்வர் உம்மன் சாண்டி மீதே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தாங்கள் ஆற்றியுள்ள பணிகளைப் பட்டியலிட்டும், தேவைப்படும் சேவைகளை அளித்ததை நினைவுபடுத்தியும் இரு அணிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்று காங்கிரஸும் அதன் தோழமைக் கட்சிகளும் நம்பிக்கையுடன் இருக்கின்றன. ஆகவே இந்தத் தேர்தலின் பேசுபொருளாக வளர்ச்சி, ஊழல், சமூக பாதுகாப்பு என்ற மூன்று அம்சங்களும் திகழ்கின்றன.
தமிழில்: சாரி, © தி இந்து ஆங்கிலம்