திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். திரைத்துறையிலும் அரசியலிலும் எம்ஜிஆரின் நிழலாக இருந்தவர். அரசியல்வாதி, அமைச்சர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். திறமை யான நிர்வாகி என்று பலராலும் பாராட்டப்பட்ட இவர், அரசியலில் உச்சத்தையும் அதல பாதாளத்தையும் பார்த்த பழுத்த அனுப வசாலி. எம்ஜிஆர் கழகத்தின் தலைவராக இருக்கும் ஆர்.எம்.வீரப்பனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். அன்றைய அரசியல், இன்றைய அரசியலின் போக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் என பல விஷயங்களை முன்வைத்தோம். அவரது விரிவான பேட்டியில் இருந்து..
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நீங்கள். திராவிட இயக்கத்தோடு உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?
பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகைக்கு முகவராக இருந்தேன். பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டு அவருடன் பயணம் செய்தபோது பயணச் செலவு, புத்தகங்கள் விற்ற பணம் ஆகியவற்றை கணக்கு எழுதி மீதி இருந்த 1,100 ரூபாயை பெரியாரிடம் கொடுத்தேன். அந்த காலத்தில் அது பெரிய தொகை. என்னை ஏற, இறங்க பார்த்த பெரியார், ஈரோட்டுக்கு அழைத்தார். அதை ஏற்று அங்கு சென்று பணியாற்றினேன்.
நாடகத்தின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக கே.ஆர்.ராமசாமியின் நாடகக் கம்பெனியில் சேர விரும்பினேன். பெரியாரிடம், என் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு தஞ்சாவூர் சென்று நாடகக் கம்பெனியில் போய் சேர்ந்துவிட்டேன். கே.ஆர். ராமசாமியின் நாடகக் கம்பெனிக்காக அண்ணா எழுதிய ‘ஓர் இரவு’ நாடகத்தை நான்தான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவிடம் இருந்து வாங்கி வந்தேன். அண்ணா அடிக்கடி தஞ்சாவூர் வருவார். அப்போது அவரிடம் நெருக்கம் உண்டானது. பின்னர், எம்ஜிஆரோடு தொடர்பு ஏற்பட்டு அவரோடு இணைந்தேன்.
அன்றைய அரசியலுக்கும் இப்போதைய அரசியலுக்கும் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள் நெறிசார்ந்த அரசியல் நடத்தினர். காமராஜர் கடும் உழைப்பாளி. அண்ணா மனிதநேயம் மிக்கவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர். தன் கட்சித் தொண்டர்களை சகோதர பாசத்தோடு ‘தம்பி’ என்று அழைத்த தலைவர் அண்ணா.
எம்ஜிஆர் சிறந்த மனிதாபிமானி. கொடை உள்ளம் கொண்டவர். கருணாநிதி கெட்டிக்காரர், இலக்கியவாதி. தொல்காப்பியத்துக்கு உரை எழுதக்கூடிய அளவுக்கு திறன் கொண்டவர். அப்போதைய அரசியலில் நாணயம், நேர்மை இருந்தது. இதை எல்லாம் பாழ்படுத்துவதுபோல ஜெயலலிதா வந்தார். மக்களைப் பற்றியே கவலைப்படாத முதல்வராக இருக்கிறார். மத்திய அமைச்சர்களாலேயே முதல்வரை பார்க்க முடியவில்லை. கேள்வி கேட்பார் இல்லாமல் நாதியற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. மந்திரிகளே கோடிக்கணக்கில் ஊழல் செய்கின்றனர்.
ஒரு முதல்வர், ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்குப் போனதும், மீண்டும் முதல்வரானதும் தமிழகத்தில்தான். இப்போதும்கூட அவர் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. அந்த அளவுக்கு இன்றைய அரசியல் சீர்கெட்டு போயிருக்கிறது.
திமுக அதிமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என்று மக்கள் நலக் கூட்டணியினர் சொல்கின்றனர். உண்மையிலேயே அந்த அணி மாற்றாக இருக்குமா?
மக்கள் நலக் கூட்டணியில் தனித்தனியே பார்த்தால் சில நல்ல தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சேவை மனப்பான்மை கொண்டவர்கள் உள்ளனர். திமுகவில் பணியாற்றி, அக்கட்சியால் பேர் வாங்கியவர்களும் உள்ளனர். ஆனால், அவர்கள் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இல்லை. அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாது. எதிர்க்கட்சியாகக்கூட அவர்களால் வர முடியாது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை திமுகவுக்கும் அதிமுகவைச் சேர்ந்த தனிப்பட்ட பெண்மணிக்கும்தான் போட்டி.
நீங்கள் எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்தவர். இப்போது, விஜயகாந்தை கறுப்பு எம்ஜிஆர் என்று கூறுகிறார்களே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எம்ஜிஆர் மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர். திமுகவில் சேர்ந்து அக்கட்சிக்காக உழைத்து படங்களில் திமுக கொடியையும் சின்னத்தையும் காட்டி மக்கள் மனதில் பதிய வைத்தார். ஒருமுறை திருநெல்வேலி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எம்ஜிஆரின் 2248 என்ற பதிவு எண் கொண்ட பிளைமவுத் காரில் அண்ணா சென்றார். முன் சீட்டில் அண்ணாவும் பின் சீட்டில் எம்ஜிஆரும் அமர்ந்திருந்தனர். கோவில்பட்டியில் டீ குடிப்பதற்காக ஒரு கடை முன்பு கார் நின்றது. காரையும் காரில் பறந்து கொண்டிருந்த திமுக கொடியையும் பார்த்த மக்கள், உள்ளே அண்ணா இருப்பதை அறியாமல் ‘எம்ஜிஆர் கொடி... எம்ஜிஆர் கொடி..’ என்று கோஷமிட்டு காரை சூழ்ந்துகொண்டனர்.
பின்னர், அண்ணாவிடம் ஒரு நண்பர் இதுபற்றி குறைபட்டபோது, ‘‘புரியாமல் பேசறீங்களே. இவ்வளவு பாப்புலாரிட்டியும் எம்ஜிஆர் மூலம் திமுகவுக்குத்தானே வருது? லாபம் கட்சிக்குத்தானே’’ என்றார்.
1967-ல் அண்ணா தலைமையில் திமுக வெற்றி பெற்றபோது தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று எம்ஜிஆர் கூறியதால் அவரை சிறுசேமிப்புத் துறை தலைவராக நியமித்தார். அந்த அளவுக்கு அண்ணாவிடமும் மக்களிடமும் செல்வாக்கு பெற்றவராக எம்ஜிஆர் விளங்கினார்.
நான் தயாரித்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தின் மூலம் எம்ஜிஆருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்ற ‘பாரத்’ விருது கிடைத்தது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அவரது சேவைகளுக்காக ‘பாரத ரத்னா’ பட்டமும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே நடிகர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆருக்கு யாருமே நிகராக முடியாது. விஜயகாந்த்தை கறுப்பு எம்ஜிஆர் என்று அவர்களாக சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அவர் எம்ஜிஆர் ஆக முடியாது.
‘‘எம்ஜிஆர் புரியாமல் பேசியதை மக்கள் ஏற்கவில் லையா? அதுபோல விஜயகாந்த் பேசுவதையும் மக்கள் ஏற்பார்கள்’ என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரேமலதா பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது பற்றி?
எம்ஜிஆருக்கு தொண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் குரல் பாதிக்கப்பட்டது. என்றாலும் கடுமையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டு பெருமளவில் பேச்சுத் திறனை பெற்றார். அதன் பிறகும் பல படங்களில் நடித்து அவை வெற்றிகரமாக ஓடின. 1971-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்தார். பின்னர், தனியாக கட்சி தொடங்கி கூட்டங்களில் பேசி 3 முறை ஆட்சியை பிடித்தார். அவரது பேச்சை புரிந்துகொண்டுதான் மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்து வெற்றி பெறச் செய்தனர். எம்ஜிஆருக்கு ஏற்பட்ட குரல் பாதிப்பையும் விஜயகாந்த் பேசுவதையும் ஒப்பிடக்கூடாது.
இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் கழகத்தின் நிலைப்பாடு என்ன?
எம்ஜிஆர் கழகத்தின் ஆதரவு நிச்சயம் திமுகவுக்குத்தான். இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் பணியாற்றிக் கொண்டிருக் கின்றனர். இப்போது தமிழகத்தில் உள்ள அவல நிலை மாற வேண்டுமானால் திமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும்.
அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதே?
கருத்துக் கணிப்புகளை ஏற்க முடியாது. அவை தவறாகப் போனதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. திமுக வெற்றி பெறும் என்று கடந்த காலங்களில்கூட கருத்துக் கணிப்புகள் வந்தன. கோடிக்கணக்கான மக்கள் வாக்களிக்கும் தேர்தலில் 3 அல்லது 4 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டு எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் மக்களின் மனநிலையை பிரதிபலிக்காது.
அதிமுக அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர். மழை, வெள்ள பாதிப்புக்குகூட உரிய முறையில் நிவாரணம் மேற்கொள்ளவில்லை. அதிமுக வெற்றி பெறும் என்பது கற்பனை. இந்தத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.
எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்த நீங்கள், அவரது அரசியல் எதிரியான கருணாநிதிக்கு ஆதரவாக இருப்பதாக உங்கள் மீது விமர்சனங்கள் உள்ளதே?
எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் இடையே ஆழ்ந்த நட்புணர்வு உண்டு. அண்ணா மறைந்த பிறகு எம்ஜிஆருக்கு திமுகவில் பொருளாளர் பொறுப்பை கருணாநிதி கொடுத்தார். சில பேர் அவர்களுக்கிடையே உள்ள நட்பை பிரிக்க வேலை செய்தனர். பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கை கேட்கும்படி எம்ஜிஆரை தூண்டினர்.
திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டபோது அவரை விட்டு பிரியக் கூடாது என்று கருணாநிதியிடம் கண்ணீர் சிந்தினேன். சமரச பேச்சுவார்த்தையும் நடந்தது. அதில் முரசொலி மாறனும் கலந்துகொண்டார். பேச்சு நடக்கும் போதே எம்ஜிஆர் ரசிகர்கள் தாக்கப்பட்டதால் பேச்சு முறிந்துபோனது.
எம்ஜிஆர் இல்லையென்றால் அடுத்தது கருணாநிதிதான். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி ஜானகி அம்மாளை தார்மீக கடமையாக ஆதரித்தேன். அதன் பிறகு, கடந்த 3 தேர்தல்களில் திமுகவை ஆதரித்தேன். இப்போதும் திமுகவுக்குத்தான் எங்கள் ஆதரவு. எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கு இடையே உள்ள நட்பை புரிந்து கொள்ளாமல், கருணாநிதிக்கு நான் ஆதரவு தருவதை விமர்சிப்பவர்கள் விவரம் தெரியாதவர்கள்.
- தொடர்புக்கு: sridhar.s@thehindutamil.co.in