கஞ்சி, கோதுமைக் களி, ரசத்தைப் போல் சாம்பார். காலை ஏழு மணிக்குச் சாப்பிட்டால், பள்ளி செல்லும் முன் பசியெடுக்கும் அளவு உணவு. விளைவு, சத்துப் பற்றாக்குறை, சொறி சிரங்கு. இது, பெருவாரியான ஆதிதிராவிடர் நலப் பள்ளி விடுதிகளில் படிக்கும் மாணவர்களின் அன்றைய நிலை. ஆனாலும், அந்த மாணவர் விடுதிகள் நிரம்பிவழிந்தன. அரசு மாணவர் இல்லங்களில் இடம் கிடைக்கத் தவமிருந்தனர். அந்த நிலையில் படித்தவர்கள், இன்று ஐஏஎஸ் அதிகாரிகள் வரை பல்வேறு பதவிகளில் அலங்கரிக்கின்றனர்.
அன்று ஒருவருக்கு மாதம் 80 ரூபாயாக இருந்த உணவுக்கான ஒதுக்கீடு, இன்று மாதம் 1,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. விடுதிகளின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. ஆனால், எல்லா விடுதிகளும் காற்று வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. ஏன்? நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இலவச சைக்கிள், இலவசப் பேருந்து வசதி, பணப் புழக்கம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, வீட்டிலிருந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அரசு விடுதிகளை நம்பிப் படிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
இப்போது அரசு மாணவர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் யார்? அப்பா, அம்மா இல்லாதவர்கள். அல்லது அதில் யாரோ ஒருவர் இல்லாத குழந்தைகள். இருவரும் இருந்தாலும் சண்டைச் சச்சரவு, குடிநோய், சேர்ந்து வாழாத தம்பதியரின் குழந்தைகள். குடிபெயர்ந்து சென்ற பெற்றோரின் குழந்தைகள்.
ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் 1,324 பள்ளி மாணவர் விடுதிகள் செயல்படுகின்றன. இதில், 98,579 மாணவ மாணவிகள் படிக்கின்றனர் என்று பதிவேடுகள் சொல்கின்றன. ஒவ்வொரு விடுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கையில் சற்றேறக்குறைய 50% மாணவர்களே கணக்கில் காட்டப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால், தற்போது விடுதிகளில் தங்கியுள்ளதாகக் கணக்குக் காட்டப்படும் சுமார் ஒரு லட்சத்தில், நான்கில் ஒரு பங்கு அல்லது 25,000 பேர் மட்டுமே தங்கிப் படித்துக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு மாணவருக்கு, மாதம் ரூ.1,000 வீதம், ஒரு லட்சம் மாணவர்களுக்குக் கணக்கிட்டால், ரூ.10 கோடி. இதில் ரூ.2.5 கோடி மட்டுமே உண்மையான பயனாளிகளுக்குச் செல்கிறது. மீதமுள்ள ரூ.7.5 கோடி கபளீகரம் செய்யப்பட்டுவிடுகிறது என்றே சொல்லப்படுகிறது. பால், தயிர் ஆகியவை கணக்கில் ஏறியிருக்கும். ஆனால், மாணவர்களின் கண்ணுக்கு அவை தெரியாது. கோழி இறைச்சி சாப்பிடக் கிடைக்கும்.
ஆட்டிறைச்சி கணக்கில் மாத்திரம். விடுதி வளாகச் சுத்தம் உள்ளிட்ட பராமரிப்புச் செலவினங்களில், பராமரிப்பு குறைவாகவும் செலவு மிகச் சரியாகவும் எழுதப்பட்டிருக்கும். இவை எல்லாவற்றையும் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்கிறார்கள். ஆதிதிராவிடர் நலத் துறை விடுதியில் ஒருவர் காப்பாளராகவும் மற்றொருவர் அதே துறையின் கீழ் பள்ளி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்ததாகக் கொள்வோம். அடுத்து ஒரு பத்து ஆண்டுகளில், இருவரின் வசதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும் என்கின்றனர்.
கழிப்பறைத் தூய்மையின்மை, சுகாதார வசதியின்மை, சுற்றுப்புறத் தூய்மையின்மை, கற்றலுக்கு ஏற்ற இடமாக விடுதி இல்லாத அவலம், காப்பாளர் தன் பணி மறந்து, உணவுப் பொருட்களை எடுத்துக் கொடுக்கும் பண்டகக் காப்பாளராக மாறிவிட்ட கொடுமை, அரசின் நிதி ஒதுக்கீட்டில் நான்கில் மூன்று பங்கு பயனாளிகளுக்குச் சென்று சேராத அநியாயம் என்று நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
கடமை உணர்வு மிக்க காப்பாளர்களும் இருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இயங்கும் பிற்பட்டோர் நல விடுதி ஓர் உதாரணம். இந்த விடுதி மட்டும் எல்லா ஆண்டுகளிலும் நிரம்பிவழிகிறது. காப்பாளர் இரவும் பகலும் மாணவர்கள் நலனே கண்ணாக இருக்கிறார். தனிப்பயிற்சி தருகிறார். படித்தே ஆக வேண்டும் என்று தூண்டும் வகையில் சிறிய நூல் நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளார். சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு முழுமையாக ஊட்டியுள்ளார். நன்கு படிக்கும் மாணவர்களும் கற்றுக்கொடுக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடிப்பவர்களுக்கு மேல் படிப்புக்குச் செல்ல காப்பாளர் வழிகாட்டுகிறார். முன்னாள் மாணவர்கள் பல்வேறு விடுதி முன்னேற்றப் பணிகளை ஒருங்கிணைந்து செய்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளை இதேபோல் மாற்ற முடிந்தால், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்வில் விடுதிகள் ஒளிவிளக்கு ஏற்றும். உண்மையில், ஒரு விடுதியில் எத்தனை மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, நிதி முறைகேட்டைத் தடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் திடீர் தணிக்கையின்போது மாணவர்கள் இல்லை என்று மூடப்படும் விடுதிகளை எப்படி இதுவரை மற்ற அதிகாரிகள் பார்வையிட்டுச் சரியென்று சான்று அளித்தார்கள் என்று ஆராய வேண்டும்.
இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்களுக்கென்று 13,090 இடங்களும், முதுகலை பட்ட மாணவர்களுக்கென்று 1,063 இடங்களும் மட்டுமே உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகக் கட்டணம் ஒருபுறம். அரசு மாணவர் விடுதிகளில் இடம் கிடைக்காத செலவுகளால் அவதி மறுபுறம். கல்லூரி மாணவர் விடுதிகள், இளங்கலை முதுகலை என அனைவரும் தங்கிப் படிக்கத்தக்கவையாக இருந்தன.
அவற்றை இளங்கலை, முதுகலை பட்ட வகுப்பு விடுதிகள் என்று முத்திரை குத்தி, பல விடுதிகளில் முதுகலை பட்ட வகுப்பு மாணவர்கள் படிக்க இயலாமல் செய்துவிட்டார்கள். ஆராய்ச்சிப் படிப்புகளில் தொடரும் மாணவர்கள் அரசு நல விடுதிகளில் சேர்ந்து படிக்க வழியில்லை. குறைந்தபட்சம், 20% பட்டியலின மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர் என்றால், விடுதி வசதி வெறும் 14,000 மாணவர்களுக்கு மட்டுமே.
பள்ளி சார்ந்த பல விடுதிகளின் தேவை குறைந்துள்ளது. கல்லூரி மாணவர் விடுதிகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனை அரசு உணர்ந்துள்ளதா என்று தெரியவில்லை. கல்லூரியில் இடம் கிடைத்தும், விடுதியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டுவரும் மாணவர்களுக்கு, அரசு நினைத்தால் தனது நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமலே உதவிட முடியும். பள்ளி விடுதிகளில் நடக்கும் முறைகேட்டைத் தடுத்து, அந்த நிதியைக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளுக்குச் செலவிட்டால் போதும்.
- நா.மணி, பேராசிரியர் மற்றும் தலைவர். பொருளாதாரத் துறை, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி.
தொடர்புக்கு: tnsfnmani@gmail.com