ஒரு பதிப்பாளராக கரோனா பெருந்தொற்றின் தாக்கங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?
பெருந்தொற்றானது பதிப்பகங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் பதிப்புலகத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. குறைந்தபட்சம் நூலக ஆணைகளுக்கான பழைய நிலுவைத்தொகையைகூடச் செலுத்தவில்லை.
2019-ல் வாங்கிய நூல்களுக்கான தொகைகூட நிலுவையில் உள்ளது. அதே நேரம், இந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் அதிகமாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் நூல்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. தமிழ் நூல்களின் தரமும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டிருக்கிறது. கேரளம், கர்நாடகம், வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழ்நாட்டிலும் நூல்கள் அதிக அளவில் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பின்புலம் கொண்ட பதிப்பகங்கள் பொது வாசகர்களை ஈர்ப்பதற்கு என்னென முயற்சிகளை மேற்கொள்கின்றன?
2,000 தலைப்புகளில் குழந்தைகளுக்கான நூல்கள், 300 தலைப்புகளில் அறிவியல் நூல்கள், 60-70 தலைப்புகளில் கல்வி, மாற்றுக் கல்வி குறித்த நூல்களை வெளியிட்டுள்ளோம். வரலாறு, பொருளாதார நூல்களையும் வெளியிட்டுள்ளோம். இவற்றை எந்த அரசியல் கட்சி, அமைப்போடும் தொடர்புபடுத்த முடியாது. அரசியல் என்னும் விரிவான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால், அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. ஒரு நாவல், சிறுகதையில்கூட அரசியல் உண்டு.
பாரதி புத்தகாலயத்தின் சிறு வெளியீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன?
வெகுஜன இதழ்களை மட்டும் படித்துக்கொண்டிருந்தவர்களை சிறு வெளியீடுகள் புத்தக வாசிப்பு நோக்கி நகர்த்தியுள்ளன. அப்படி வருகிறவர்கள் தீவிரமான விஷயங்களைப் படிக்கத் தொடங்குகிறார்கள். தீவிரமான விஷயங்களைக் குறித்த சிறிய காத்திரமான நூல்களைப் படிப்பவர்கள், அவை குறித்த மேலும் அதிகமான நூல்களைத் தேடுகிறார்கள். அந்த வகையில் சிறுவெளியீடுகள் ஒட்டுமொத்த வாசகர் பரப்பைப் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இன்று நிறைய பதிப்பகங்கள் சிறு நூல்களை வெளியிடத் தொடங்கிவிட்டன. சிறு வெளியீடுகளைத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் அனைவருக்கும் பரிசாகக் கொடுக்கிறார்கள்.
நல்ல புத்தகங்களைக் கொண்டுவரும் பல பதிப்பகங்கள் சந்தைப்படுத்தலில் தோல்வியடைந்துவிடுகின்றன. இந்த விஷயத்தில் பாரதி புத்தகாலயத்தின் வெற்றி எப்படிச் சாத்தியமானது?
பாரதி புத்தகாலயத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 24 கிளைகள் உள்ளன. கிளைகள் மட்டுமல்ல... வாசகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான முகவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரூ.5,000 செலுத்தினால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை விற்பதற்குக் கொடுத்துவிடுவோம். ஒவ்வொரு புத்தகத்துக்கும் விளம்பரத்துக்கு அதிகத் தொகையைச் செலவிடுகிறோம். புத்தகங்களுக்காகவே ‘புத்தகம் பேசுது’ என்னும் இதழை நடத்துகிறோம். அது 5,000 சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது. இது தவிர, புத்தக விமர்சனங்களுக்கென்று ‘புக் டே’ இணையதளம், ‘பாரதி டிவி’ என்னும் யூடியூப் சேனல் போன்றவற்றை நடத்திவருகிறோம். இவற்றின் மூலமாகத்தான் எங்களுக்கு ரூ.10, ரூ.20-க்குச் சிறு நூல்களை வெளியிடுவதற்கான பொருளாதார பலம் கிடைக்கிறது.
இணையம்வழியாகப் புத்தக விற்பனை, கிண்டில், கைபேசி போன்றவற்றில் படிக்கும் வசதிகள் ஆகியவற்றுக்கிடையே சென்னை புத்தகச் சந்தை போன்ற பிரம்மாண்ட புத்தகத் திருவிழாக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
புதிதாக வரும் வாசகர்களில் சிறு பகுதியினர் மட்டுமே இணையம்வழியாகப் புத்தகம் வாங்கவும், கிண்டில் உள்ளிட்டவற்றை நாடவும் செய்கிறார்கள். 85% புத்தகங்கள் நேரில்தான் வாங்கப்படுகின்றன. அச்சு நூல்களின் எண்ணிக்கையை மின்னூல்களால் குறைத்துவிட முடியாது. எனவே, சென்னை புத்தகக்காட்சியின் பிரம்மாண்டம் அதிகரிக்குமே தவிர குறையாது. அரசும் ஊடகங்களும் போதுமான ஆதரவு அளித்தால் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துப் புத்தகக்காட்சிகளும் பதிப்பாளர்களுக்கு லாபகரமாக அமையும். இந்தப் புத்தகக்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in