சிறப்புக் கட்டுரைகள்

ஜூன் 13 1998- உலகக் கோப்பையில் சர்வாதிகாரிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்ட நாள்

சரித்திரன்

உலகக் கால்பந்து போட்டிக்கான காலகட்டத்தில் ஏதாவது நாட்டின் தலைவர் இறந்தால் அவருக்கு ஒரு நிமிட நேரம் மெளன அஞ்சலி செலுத்துவார்கள். ஆனால், 1998-ல் பிரான்ஸில் நடந்த உலகக் கால்பந்து போட்டியில் ஒரு நாட்டின் அதிபருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. போட்டி நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக நைஜீரியாவின் அதிபர் சானி அபாஷா இறந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என நைஜீரியக் கால்பந்தாட்ட அணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், உலகக் கால்பந்தாட்டப் போட்டியை நடத்தும் ஃபிஃபா அமைப்பு, அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

நைஜீரியாவின் அதிபராக இருந்த சானி அபாஷா, ஒரு ராணுவ சர்வாதிகாரி. ராணுவச் சதி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து அதிபராக ஆனவர். மேலும், ஜனநாயகத் தேர்தல்களை நடத்த மறுத்துவந்தார். மிக மோசமான ஊழல்களில் சிக்கிய அரசியல் தலைவராகவும் அவர் இருந்தார். இந்தக் காரணங்களால், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது.

உலகக்கோப்பைக் கால்பந்து போட்டிகளில் இத்தகைய அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது இதுவே முதன்முறை.

ஆனாலும், நைஜீரியக் கால்பந்தாட்ட வீரர்கள் தங்களின் விளையாட்டைத் தொடர்ந்தனர். போட்டியை நடத்திய பிரான்ஸ் நாடே அந்த முறை உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT