இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35 நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாகக் கூறி, 2009-ல் சிம்ரன் ஜெயின் மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்குப் பல தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஆணையிட்டது. இதையொட்டி, டிசம்பர் 2010-ல் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கை வெளியிட்டது. இதைத் தமிழ்நாடு, ஆந்திரம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன. மத்திய பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது என்று இந்த மாநிலங்கள் கூறின. இச்சூழலில், அன்றைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாதும், அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால், அது நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. ஏப்ரல் 11, 2016-ல் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, நீட் தேர்வு நடத்துவதற்கான வழிவகை பாஜக ஆட்சியில்தான் ஏற்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2014 வரை நீட் தேர்வு நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை.
நீட் தேர்வுக்கு முன்பாக மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு எப்படி இருந்தது என்பதற்குச் சில புள்ளிவிவரங்கள்:
2013-14-ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,267 மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3,251 பேர். இதில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் வெறும் 4 பேர் மட்டுமே. 2014-15-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் 3,147 பேர். இவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3,140 பேர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 2 பேர். மற்றவர்கள் 5 பேர். 2015-16-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் 3,015 பேர். இவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 2,996 பேர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 2 பேர். மற்றவர்கள் 17 பேர். 2016-17-ல் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் படித்த 3,544 பேர், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 35 பேர், பிறர் 29 பேர் என மொத்தம் 3,608 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
நீட் தேர்வுக்குப் பின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு எப்படி பறிக்கப்பட்டது என்பதற்கான சில புள்ளிவிவரங்கள்:
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் 2017-18-ல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தவர்களில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் எண்ணிக்கை 1,113 ஆக உயர்ந்தது. மாநிலப் பாடத்திட்டத்தில் ஏற்கெனவே வாய்ப்புக் கிடைத்த 3,000-க்கும் அதிகமானோரின் எண்ணிக்கை 2003-ஆகக் குறைந்தது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் 3 பேர் மட்டுமே.
2018-19-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை 3,618. இதில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 2,626. சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 894. மற்றவர்கள் 118 பேர். 2019-20-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை 4,202. இதில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 2,762. இதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 5 பேர்தான். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 1,368 பேர். மற்றவர்கள் 72 பேர். 2019-20-ல் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் 6 பேருக்குத்தான் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள்தான். மேலே கூறப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலமாக எத்தகைய சமூக அநீதி இழைக்கப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
2020-21-ல் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடங்களை ஒதுக்கித் தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் 336 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. மீதமுள்ள 92.5 சதவீதத்தில் மொத்தம் 4,129 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் எண்ணிக்கை 1,604 ஆக உயர்ந்தது. அதேபோல், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,453ஆகக் குறைந்தது.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் உரிய பலனைப் பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் 8.41 லட்சம் பேர். இதில் 3.44 லட்சம் பேர், அதாவது 41 சதவீதத்தினர் அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள். தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்கள் 5,822. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4,319.
2021-22-ல் தமிழக அரசின் 7.5% ஒதுக்கீட்டின்படி 437 இடங்கள் மருத்துவப் படிப்புக்கும், 107 இடங்கள் பல் மருத்துவப் படிப்புக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின்படி முதல் 10 மாணவர்களில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 8 பேரும், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 2 பேரும் தேர்வு பெற்றிருக்கிறார்கள். முதல் 100 பேரில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 81 பேர், மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் 17 பேர் தேர்வு பெற்றுள்ளனர். முதல் 1,000 பேரில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 394 மாணவர்கள் மட்டும் தேர்வுபெற்றுள்ளனர்.
நீட் தேர்வுக்கு முன்பாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து 1% மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. அது 39% ஆகக் கூடிவிட்டது. அதேபோல் நீட் தேர்வுக்கு முன் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 98.2% மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. அது தற்போது 59% ஆகக் குறைந்துள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு முன் கிட்டத்தட்ட 14.8% தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். ஆனால், அது தற்போது 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. எனவே, நீட் தேர்வு என்பது வசதிபடைத்த, மேட்டுக்குடியில் பிறந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக உள்ளது. நீட் தேர்வை ஒட்டுமொத்த தமிழகம் ஏன் எதிர்க்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.
- ஆ.கோபண்ணா, ‘தேசிய முரசு’ இதழின் ஆசிரியர்.