சிறப்புக் கட்டுரைகள்

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- நடிகருடன் கூட்டணி

ஆர்.முத்துக்குமார்

என்னைப் பற்றியும், பாமக பற்றியும் தொடர்ந்து பேசிவருகிறார் கட்சி நடத்தும் ஒரு நடிகர். அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் அந்த நடிகர். அரசியலில் எல்.கே.ஜி. மட்டுமல்ல, மழலையர் கல்விகூடப் (பிரிகேஜி) படிக்கவில்லை. இதற்கு மேல் அவரைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை. பாமகவைப் பற்றி விமர்சிக்க அந்த நடிகருக்கு எந்த அருகதையும் இல்லை.

இது 2011-ல் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ‘நடிகர்’ என்று அவர் குறிப்பிடுவது சாட்சாத் தேமுதிக தலைவர் விஜயகாந்தைத்தான். உண்மையில், சந்தனக் கடத்தல் வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று பேசிய ரஜினிகாந்துக்கும் பாமகவுக்கும்தான் முதலில் மோதல் வெடித்தது. பிறகுதான் பாமக - விஜயகாந்த் இடையே மோதல் உருவானது.

வட மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினருக்கும் பாமகவினருக்கும் இடையே நிகழ்ந்த சிறுசிறு பிரச்சினைகள் அரசியல் மோதல்களாக மாறின. பின்னாளில் விஜயகாந்தின் தேமுதிக பாமகவின் பூர்வீக வாக்குவங்கியில் சேதத்தை ஏற்படுத்தியது. அந்தச் சேதமதிப்பு 2006, 2009, 2011 தேர்தல்களில் அதிகரித்துக்கொண்டே வரவே, இரு கட்சிகளும் பரம வைரிகளாகின.

ஆனால், இந்த இரு துருவங்களையும் ஒன்றாக்கியது 2014 மக்களவைத் தேர்தல். அதிமுக, திமுகவுக்கு மாற்று அணி அமைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது, அதற்காக, திராவிட, தேசியக் கட்சிகளுக்கு மாற்று என்ற பெயரில் தனி அணி அமைத்திருந்த பாமகவையும் அணுகியது. நீண்ட நெடிய பேச்சுவார்த்தைகளுக்குத் தேமுதிக ‘சீனியர் பார்ட்ன’ராக இருந்த அணியில் ‘ஜூனியர் பார்ட்ன’ராகச் சேர்ந்துகொண்டது பாமக.

எந்த நடிகரின் பெயரைக்கூட உச்சரிக்கத் தயங்கினாரோ அதே நடிகரின் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாரானார் ராமதாஸ். திராவிடமும் வேண்டாம், தேசியமும் வேண்டாம் என்று சொன்ன ராமதாஸ், அதற்கு நேர்மாறாக மதிமுக மற்றும் பாஜகவோடு கரம்கோத்தார். எட்டுத் தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒற்றைத் தொகுதியில் வென்றது. தருமபுரியில் அன்புமணி வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து தேர்தல் அரசியலில் ஒரு புதிய நிலைப்பாட்டை எடுத்தார் டாக்டர் ராமதாஸ்.

அதிமுக, திமுகவுடன் கடந்த காலங்களில் கூட்டணி வைத்தது மிகப்பெரிய தவறு. அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என்றார். கூடவே, 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி. அவரை ஏற்றுக்கொள்ளும் அதிமுக, திமுக தவிர்த்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்று அறிவித்தார். ஆனால், இன்றைய தேதி வரைக்கும் எந்தவொரு கட்சியும் பாமகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.

மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி என்ற கோஷத்துடன் 2016 சட்டமன்றத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்கிறது பாமக. ஆம், ஆரம்பித்த இடத்துக்கே வந்துசேர்ந்திருக்கிறது பாமக. அடுத்த கட்ட நகர்வுகளைத் தெரிந்துகொள்ள அடுத்த மாதம் வரைக்கும் காத்திருப்போம்!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)

SCROLL FOR NEXT