சிறப்புக் கட்டுரைகள்

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி! - மக்கள் நலக் கூட்டணியின் உதயம்!

ஆர்.முத்துக்குமார்

காங்கிரஸ், பாஜகவுக்கு எதிரான அணியில் இடம்பெற வேண்டும் என்பது இடதுசாரிகளின் முடிவு. அதற்கேற்ப 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் நீடித்தனர். அங்கே மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. யாருக்கு எந்தத் தொகுதி என்று முடிவாகாத நிலையில், திடீரென அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதிர்ச்சியடைந்த இடதுசாரித் தலைவர்கள், கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் சென்றனர்.

பின்னர் அதிமுகவோடு நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக கூட்டணிப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. மின்வெட்டு, 2ஜி அலைக்கற்றை முறைகேடு, ஈழத் தமிழர் விவகாரம் என்பன போன்ற அம்சங்கள் 2011 தேர்தல் களத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன. விளைவு, அதிமுக அணி வெற்றிபெற்றது. மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். அந்த அணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.

அதிமுக - இடதுசாரிகள் இடையிலான உறவும் சீராகவே இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராஜா இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுக ஆதரவு கொடுத்தனர். ஆனால், 2014 மக்களவைத் தேர்தல் சமயத்தில் இருதரப்புக்கும் இடையே கசப்புகள் முளைத்தன. இடதுசாரிகள் இருவருக்கும் தலா ஒரு தொகுதி தரத் தயாரானது அதிமுக. அதை ஏற்க விரும்பாத இடதுசாரிகள் அதிமுக அணியிலிருந்து வெளியேறினர்.

அதே வேகத்தில், இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகின. எல்லா தொகுதிகளிலும் நிற்காமல், ஓரளவுக்குச் செல்வாக்குள்ள தொகுதிகளைத் தேர்வுசெய்து போட்டியிட்டன. அதிமுக, திமுக கூட்டணி, பாஜக அணி, இடதுசாரிகள் அணி என்ற நான்கு முனைப் போட்டி நிலவிய தேர்தலில், அதிமுக 37 தொகுதிகளை வென்றது. பாஜக அணி 2 தொகுதிகளை வென்றது. திமுக அணிக்கும், இடதுசாரிகள் அணிக்கும் பூஜ்ஜியமே கிடைத்தது.

அந்தத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கினர் இடதுசாரிகள். திமுக அணியிலிருந்து வெளியேறிய விடுதலைச் சிறுத்தைகள், பாஜக அணியிலிருந்து வெளியேறிய மதிமுக ஆகிய கட்சிகளைக் கொண்ட மக்கள் நலக் கூட்டியக்கம் உருவானது. குறைந்தபட்சச் செயல்திட்டமும் உருவாக்கப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாகப் பரிணாமம் பெற்றது.

கூட்டணியை விரிவுபடுத்தும் முயற்சியாக தேமுதிக, தமாகா கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது மக்கள் நலக் கூட்டணி. நீண்ட நெடிய முயற்சியின் பலனாகத் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தொடர்பான செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளிவரும் அளவுக்குப் பரபரப்பாகியிருக்கிறது தேர்தல் சூழல். ஆக, அதிமுக, திமுகவுக்கு மாற்றாகத் தமிழகத் தேர்தல் களத்தில் புதிய அணி ஒன்று இடதுசாரிகளின் பங்களிப்போடு உருவாகியுள்ளது. அதன் எதிரொலியைக் கேட்க 19 மே 2016 வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அரசியலைப் பார்த்துவிடலாம்!

(கோஷம் போடுவோம்)

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

SCROLL FOR NEXT