சிறப்புக் கட்டுரைகள்

மோடியின் பேச்சில் தடங்கல் வரக் கூடாதா?

மு.இராமனாதன்

உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் சமீபத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது ஏற்பட்ட ஒரு தடங்கல் பேசுபொருளாகியிருக்கிறது. டாவோஸ் நகரில் நடந்த மாநாட்டில் தலைவர்கள் தத்தமது நாட்டிலிருந்து கலந்துகொண்டார்கள். பிரதமர் மோடி காணொளி வாயிலாகப் பேசினார். பேச்சின் இடையில் ஒரு தடங்கல் நேர்ந்தது. அது சரியானதும் சில நிமிடங்களுக்குப் பிறகு தனது உரையை மீண்டும் தொடங்கினார். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால், இதைச் சுற்றி வாதங்களும் பிரதிவாதங்களும் நீண்ட வண்ணம் இருக்கின்றன.

மோடி விமர்சகர்கள் #TeleprompterPM என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் வைரலாக்கினார்கள். அவர்கள் சொன்னது இதுதான்: பிரதமருக்கு முன்னால் ஒரு டெலிபிராம்ப்டர் இருந்தது. அதில் அவர் பேச்சின் வரைவு ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துத்தான் பிரதமர் பேசினார். இடையில் இயந்திரத்தில் பழுது நேர்ந்துவிட்டது. பிரதமரின் பேச்சு தடைப்பட்டுவிட்டது. அதாவது, பிரதமருக்கு எழுதிவைத்துக்கொள்ளாமல் சரளமாகப் பேச வராது. எப்போதுமே அவர் டெலிபிராம்ப்டர் உதவியால்தான் தன்னைப் பேச்சுத் திறமை மிகுந்தவராகக் காட்டிக்கொள்கிறார். இதுதான் அவர்கள் சொல்ல வந்தது.

பிரதமர் பேச்சில் வல்லவர் என்று பெயர் வாங்கியிருப்பதை இல்லாமல் ஆக்குவதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம்! சமூக ஊடகங்களில் இதை வைத்தே உச்சபட்ச எதிர்க்கட்சித் தலைவர்கள் கேலி, கிண்டல் ஆரம்பித்தவுடன் மோடி ஆதரவாளர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்தது. மோடி ஆதரவாளர்கள் இதை மறுத்தார்கள். பிரதமர் உரையாற்றியபோது தொழில்நுட்பக் கோளாறு நேர்ந்தது. அரங்கில் இருந்தவர்களால் உரையைக் கேட்க முடியவில்லை. கோளாறு சரிசெய்யப்பட்டதும் பிரதமர் மீண்டும் உரையாற்றினார். செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயும் ஆல்ட் நியூஸ் என்கிற தளம் இரண்டாவது கூற்றைத்தான் ஆதரிக்கிறது.

இந்த இரண்டு கூற்றுகளில் எது வேண்டுமானாலும் சரியாக இருக்கட்டுமே. டெலிபிராம்ப்டர் பழுதானால் என்ன, ஒளிபரப்பில் கோளாறு நேர்ந்தால் என்ன? தடங்கல் ஏற்படுவதும், அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு நிகழ்ச்சியைத் தொடர்வதும் நமக்குப் பழக்கமானவைதாமே? மோடி விமர்சகர்கள் இதைப் போய் ஏன் கொண்டாட வேண்டும்? ஏனெனில், மோடி ஆதரவாளர்கள் அவர் ஒரு தலைசிறந்த பேச்சாளர் என்கிற பிம்பத்தை உருவாக்கியிருந்தார்கள். ஒரு நல்ல பேச்சாளர் குறிப்புகளைப் பார்க்காமல் பேச வேண்டும் என்கிற விதியை யாரோ எழுதி வைத்திருக்கிறார்கள் போலும்! டெலிபிராம்ப்டரில் பழுது நேர்ந்ததும் பிரதமரால் பேச முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு, அந்தப் பிம்பத்தைக் குலைக்கிறது.

மோடி ஆதரவாளர்கள் தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்பதற்கு ஆதாரங்களை அடுக்கினார்கள். ஆனால், அவர்களும் டெலிபிராம்ப்டரைப் பார்த்துப் பேசினால் என்ன பிழை என்று கேட்கவில்லை. ஏனெனில், அவர்கள்தான் குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசிய மு.க.ஸ்டாலினை ஒரு காலத்தில் ‘துண்டுச் சீட்டு’ என்று பகடி செய்தவர்கள். தங்களது பகடி ஸ்டாலினை வீழ்த்தும் ஆயுதங்களுள் ஒன்றாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அதற்குக் காரணம் இருந்தது. திமுக ஒரு கட்சியாக உருப்பெற்றதிலும் வளர்ந்தோங்கியதிலும் மேடைப் பேச்சுக்கு முக்கியப் பங்கு உண்டு. அண்ணாவின் அடுக்கு மொழியும் அலங்கார நடையும் தமிழ் மண்ணில் புதிய மணத்தைப் பரப்பியது.

‘‘எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?’’ என்கிற கலைஞரின் இரங்கல் உரை எல்.பி. ரெக்கார்டுகளாகத் தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்றது. ஈ.வெ.கி.சம்பத் ‘சொல்லின் செல்வர்’ என்றும் நெடுஞ்செழியன் ‘நாவலர்’ என்றும் அழைக்கப்பட்டனர். காசு கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கித் தலைவர்களின் உரையைக் கேட்டது தமிழ்ச் சமூகம். இந்தப் பாரம்பரியத்தில் கிளைத்த ஒரு தலைவர் குறிப்புகளை வைத்துக் கொண்டு பேச்சுத் தமிழில் உரையாற்றுகிறார் என்பதை எதிராளிகள் தங்கள் இலக்காக்கிக்கொண்டனர். ஆனால், அவர்கள் சிலவற்றை கவனத்தில் கொள்ளவில்லை. திராவிட இயக்கத் தலைவர்கள் அலங்காரமாகப் பேசினார்கள் என்பது உண்மை. ஆனால், அந்த உரைகள் மக்களை ஈர்த்தமைக்கு அவற்றின் உள்ளடக்கமும் முக்கியக் காரணம். அந்த உரைகள் மக்களின் அன்றாட வாழ்க்கைப்பாட்டைத் தொட்டன.

ஒருவர் அலங்காரம் இல்லாமலும் அழகாக இருக்க முடியும். இதற்கு பெரியார் ஓர் எடுத்துக்காட்டு. பெரியார் தனது பேச்சையும் எழுத்தையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியவர். அந்த ஆயுதங்கள் மக்கள் புழங்கும் எளிய சொற்களாலானவை. ‘பெரியார் மக்களிடத்தில் உரையாற்ற மாட்டார், மக்களோடு உரையாடுவார்’ என்று சொல்வார்கள். ‘‘ஈ.வெ.ரா.வின் பேச்சு எத்தனை மணி நேரம் கேட்டாலும் சலிக்காது’’ என்று கல்கி சொல்லியிருக்கிறார்.

எளிய உரைக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு எம்.ஜி.ஆர். 1980-ல் எம்.ஜி.ஆரின் அரசை இந்திரா காந்தி கலைத்தார். சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது நாங்கள் கல்லூரி மாணவர்கள். வ.உ.சி. திடலில் எம்.ஜி.ஆரின் கூட்டம். நானும் நண்பனும் போயிருந்தோம். எந்த அலங்காரமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். பேசினார்.

‘‘இந்த ராமச்சந்திரன் என்ன குற்றம் செய்தான்? நீங்கள் என்மீது நம்பிக்கை இழந்துவிட்டீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்தீர்களாம். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இல்லையா? நீங்கள் அவர்களுக்குப் பதில் சொல்ல மாட்டீர்களா? நான் குற்றமற்றவன் என்று சொல்லுங்கள்.’’ கூட்டம் உணர்ச்சிவயப்பட்டு இருந்தது. அப்போது வாக்களிக்கும் வயதான 21ஐ நாங்கள் எட்டியிருக்கவில்லை. அருகிருந்த நண்பன் சொன்னான்: “என்னிடத்தில் ஒரு ஓட்டு இருந்தால் அதை எம்.ஜி.ஆருக்குப் போட்டுவிடுவேன்.” தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது எனக்கு அப்போதே தெரிந்தது.

பேச்சிலே உண்மை இருப்பதாக நம்பினால் மக்கள் காதுகொடுத்துக் கேட்பார்கள். அது அடுக்குமொழியாக இருந்தாலும் சரி, எளிய மொழியாக இருந்தாலும் சரி. குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசினாலும் சரி... தன்னெழுச்சியாகப் பேசினாலும் சரி. ஸ்டாலினைக் கிண்டல் செய்தவர்கள் இதைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் மேடைப் பேச்சு என்பது வெள்ளம்போல் பாய வேண்டும் என்று தட்டையாகப் புரிந்து வைத்திருந்தார்கள். ஆனால், அவர்களது கேலியை ஸ்டாலின் பொருட்படுத்தவில்லை. தனது பாணியில் தொடர்ந்தார். மக்கள் செவிமடுத்தார்கள். அந்தப் பகடிகள் இன்று கரைந்து காணாமல் போய்விட்டன.

டாவோஸ் மாநாட்டில் பிரதமர் டெலிபிராம்ப்டரைப் பார்த்துப் பேசியிருந்தால் அதில் என்ன தவறு? இன்னும் சொல்லப் போனால் அது நல்லது. மோடி இந்தியில் பேசினார். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்படியான சர்வதேச மாநாட்டில் முன்தீர்மானித்த வரைவை ஒட்டிப் பேசுவது மொழிபெயர்ப்பவரின் பணியை எளிதாக்கும். மோடியின் உரையில் நேர்ந்த தடங்கலுக்கு ஒளிபரப்பில் நேரிட்ட தடங்கலே காரணமாக இருந்திருக்கக்கூடும்.

ஆனால், அதை டெலிபிராம்ப்டர் பிரச்சினை என்று ஒரு சாரார் சொன்னபோது அதை மோடி எதிர்ப்பாளர்கள் பலரும் வழிமொழிந்தார்கள். அதற்குக் காரணம் மோடி ஆதரவாளர்கள்தான்; அவர்கள் தங்கள் தலைவரைச் சுற்றிக் கட்டி வைத்திருக்கும் பிம்பம்தான். மக்களிடம் நேராகவும் உண்மையாகவும் பேசுவது போதுமானது. குறிப்பைப் பார்த்தும் பேசலாம். டெலிபிராம்ப்டரைப் பார்த்தும் பேசலாம். மோடியின் ஆதரவாளர்கள் இதை உணர்ந்திருந்தால், இந்தத் தடங்கலை எளிதாகக் கடந்துபோயிருக்கலாம்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

SCROLL FOR NEXT