சிறப்புக் கட்டுரைகள்

அலெக்ஸே நவால்னி: புதினுக்கு ஒரு சிம்மசொப்பனம்

செய்திப்பிரிவு

உலகெங்கும் அரசியல் வட்டாரங்களில் அதிகம் அடிபடும் பெயர்களுள் ஒன்று அலெக்ஸே நவால்னி (45). ‘எதிர்கால ரஷ்யா’ என்ற அரசியல் கட்சியின் தலைவர்; வழக்கறிஞர்; ஊழலை - அதிலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்துவருவதாக நம்பப்படும் ஊழலை - தீவிரமாக எதிர்ப்பவர்; எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர்; ரஷ்ய நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டும், ஊழல் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறவர். ரஷ்யாவில் மக்களுக்கிடையே இவருக்கு வளர்ந்துவரும் செல்வாக்கு காரணமாகவும் புதினின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டில் ஊழலுக்கு எதிராகப் பெரும் போராட்டங்களைத் தொடர்வதாலும் உலக அளவில் பேசப்படுகிறார்.

நவால்னிக்கு யூடியூபில் 60 லட்சத்துக்கு மேற்பட்டும் ட்விட்டரில் 20 லட்சத்துக்கு மேற்பட்டும் ஆதரவாளர்கள் இருப்பது அவருடைய செல்வாக்கைக் காட்டுகிறது. இவ்விரு சமூக ஊடகங்களைப் பயன்படுத்திதான் ரஷ்ய அரசின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தினார். இதைப் புதினால் தாங்கிக்கொள்ள முடியாததால் அவரைச் சிறையில் அடைத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். ரஷ்யாவை இப்போது புதினின் ‘ஐக்கிய ரஷ்யா கட்சி’ ஆள்கிறது. “திருடர்களையும் சதிகாரர்களையும் கொண்டதுதான் ஐக்கிய ரஷ்ய கட்சி” என்று 2011-ல் அளித்த வானொலிப் பேட்டியில் அறிவித்தார் நவால்னி. அப்போது முதலே அவருக்கும் புதினுக்கும் பகைமை ஏற்பட்டுவிட்டது. நவால்னி தொடங்கிய ‘ஊழலுக்கு எதிரான அறக்கட்டளை’க்கு (எஃப்.பி.கே) மக்களிடையே ஆதரவு அதிகம்.

ரஷ்யாவின் உயர் அதிகாரிகள், அரசியலர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களை ஆவணபூர்வமாக அம்பலப்படுத்தினார் நவால்னி. அப்போது பிரதமர் பதவியில் இருந்த திமித்ரி மெத்வதேவ் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட பிறகு, நாடு முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நவால்னி மீதே ரஷ்ய அரசு 2013 ஜூலையில், பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி வழக்குத் தொடுத்து, தண்டனையும் பெற்றுத்தந்தது. ஆனால், இந்த ஆணை நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மாஸ்கோ நகர மேயர் பதவிக்கான தேர்தலில் நவால்னி போட்டியிட்டு 27% வாக்குகளுடன் இரண்டாம் இடத்துக்கு வந்தார். புதின் நிறுத்திய செர்கி சோபியானின் வெற்றிபெற்றார். இருப்பினும் நவால்னிக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு இதன் மூலம் வெளிப்பட்டது.

தொடர் ஆட்சி காரணமாக புதினின் செல்வாக்கு மக்களிடையே உண்மையில் கூடவில்லை. ஆனால், எதிர் வரிசையில் செல்வாக்குள்ள அல்லது துணிச்சல் மிக்க தலைவர்கள் யாரும் தோன்றிவிடாதபடிக்கு புதின் தொடர்ந்து அவர்களை வேரறுத்துக்கொண்டே இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நவால்னி மட்டுமே தனது கல்வி, பணி அனுபவம் காரணமாக புதினின் ஊழல்களை ஆதாரபூர்வமாகவே நிரூபித்துவருகிறார்.

இதனால், நவால்னியை எல்லா வகையிலும் தீர்த்துக்கட்டவே புதின் பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டே இருப்பதால், புதினால் நவாலினியை நேரடியாகத் தீர்த்துக்கட்ட முடியவில்லை என்கின்றனர், நவால்னியின் ஆதரவாளர்கள். புதினைக் கட்டுக்குள் வைக்க அரசியல்ரீதியாகத் தங்களுக்கு உள்ள ஒரே துருப்புச் சீட்டு நவால்னிதான் என்பதால், மேற்கத்திய நாடுகள் அவர் மீது அனுதாபம் காட்டுகின்றன. நவால்னி விடுதலை பெறுவாரா, அடுத்த பொதுத் தேர்தலில் புதின் தூக்கி எறியப்படுவாரா என்பதற்கெல்லாம் இப்போது விடை இல்லை. ஆனால், நவால்னிக்கு உள்ள உறுதி பலருக்கும் தெம்பை அளித்துவருவதால் புதினின் ஆட்சி விரைவிலேயே முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

நிதி கையாடல் வழக்கு

2014-ல் நவால்னி மீது மேலும் ஒரு நிதி கையாடல் வழக்கு போடப்பட்டது. இவ்விரண்டும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. மேற்கொண்டு தேர்தல்களில் அவர் போட்டியிடக் கூடாது என்பதற்காகப் போடப்பட்டவை. 2018-ல் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலில் போட்டியிட நவால்னி தயாரானார். 2016 டிசம்பரிலேயே பிரச்சாரத்தைத் தொடங்கினார். புதினின் ஆணைக்குக் கட்டுப்பட்ட ரஷ்ய தேர்தல் ஆணையமோ, நவால்னி தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் நவால்னி. உச்ச நீதிமன்றமும் அவரது மனுவை ஏற்காமல் நிராகரித்தது. இதையடுத்து, புதினின் ‘ஐக்கிய ரஷ்யா கட்சி’க்குக் கிடைக்கக்கூடிய இடங்களைக் குறைக்க, வியூக அடிப்படையில் வாக்களிக்கும் முறையை வாக்காளர்களிடம் நவால்னி பரப்பினார். அதன்படி ‘ஐக்கிய ரஷ்யா கட்சி’யைத் தவிர, வேறு எந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களிக்கலாம். நாளுக்கு நாள் நவால்னிக்கு மக்களிடையேயும் ஊடகங்களிலும் ஆதரவு பெருகிக்கொண்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளிலும் அவர் புகழ் பரவியது.

இது புதினுக்குக் கோபத்தை அதிகப்படுத்தியது. 2020 ஆகஸ்டில் கடுமையான விஷ பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் நவால்னி. நரம்புகளைப் பாதித்து செயலிழக்க வைக்கும் நோவிசோக் என்ற விஷம் அவர் மீது பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜெர்மனியின் பெர்லின் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். தன்னைக் கொல்ல நடந்த முயற்சிக்கு புதின்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (எஃப்.எஸ்.பி) என்ற ரஷ்ய அரசின் உளவு அமைப்புதான் இதைச் செய்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரஷ்ய உயர் அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தடைவிதித்தன.

நாடு திரும்பினார் நவால்னி

2021 ஜனவரி 17-ல் நவால்னி மீண்டும் ரஷ்யாவுக்குத் திரும்பினார். பரோல் விதிமுறைகளை மீறிவிட்டார் என்று குற்றம்சாட்டி, அவரை மீண்டும் சிறையில் அடைந்தது ரஷ்ய அரசு. புதினின் அரண்மனை என்ற பெயரில் அவரைப் பற்றிய ஊழல்களை அம்பலப்படுத்துவதாகக் கூறி மேலும் ஒரு ஆவணம் வெளியானது. இதையடுத்து, மக்கள் மீண்டும் நாடு முழுக்கப் புதினுக்கு எதிராகப் பெருந்திரளாக அணிவகுத்துப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அதே ஆண்டு பிப்ரவரி 2-ல், ஏற்கெனவே ஒரு வழக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டனைத் தீர்ப்புக்கு உயிர் கொடுத்து, அவரை மீண்டும் சிறையில் அடைத்தது அரசு. விளாடிமிர் ஒப்ளாஸ்ட் என்ற இடத்தில் இரண்டரை ஆண்டு கட்டாய உடலுழைப்புச் சிறைவாசம் அவருக்கு விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் கொடுமைப்படுத்தப்பட்டார் நவால்னி. மனசாட்சியின் கைதி என்று அவரை வர்ணித்த ஆம்னஸ்டி இன்டெர்நேஷனல் அமைப்பு, அவருக்கு அங்கீகாரம் அளித்தது. மனித உரிமைகளைக் காப்பதற்காகத் தொடர்ந்து போராடும் அவருக்கு 2021-ல் சகரோவ் விருது வழங்கப்பட்டது.

ஜெர்மனியில் நவால்னி இருந்தபோது, ரஷ்ய அரசு அவருடைய ஆதரவாளர்களைக் கைதுசெய்வது, மிரட்டுவது என்று பல வழிகளிலும் அச்சுறுத்தியது. இதனாலேயே 2021 ஜனவரி 17-ல் ரஷ்யா திரும்பினார் நவால்னி. ரஷ்ய அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றதற்காகவும் ஏற்கெனவே குற்ற வழக்கில் கைதாகியிருந்தபோது விதித்த நிபந்தனைகளை மீறி வெளிநாட்டுக்கு அரசுக்கு அறிவிக்காமலேயே சென்றதற்காகவும் அவர் கைதுசெய்யப்படுவதாகத் தெரிவித்தும் அவரை விமான நிலையத்திலேயே கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மக்கள் எதிர்ப்பு

நவால்னியைக் கைதுசெய்ததைக் கண்டித்து ரஷ்யாவில் மாபெரும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. ஜனநாயகத்தை மீட்கவும் ஊழலை ஒழிக்கவும் தொடர்ந்து பாடுபடும் அவரை ஜனநாயகவாதிகள் ஆதரிக்கின்றனர். புதினுக்கு அவர் பெரிய தலைவலியாக இருக்கிறார். புதின் செய்ததாகக் கூறப்படும் ஊழலை மட்டுமல்ல... சர்வாதிகாரப் போக்கையும் அவர் எதிர்க்கிறார். அரசியல் சித்தாந்தங்களில் அவர் மிதவாதியாகவும் நடுநிலையாளராகவும் இருக்கிறார்.

வலதுசாரியோ, தீவிர இடதுசாரியோ அல்ல. அவர் புதிதாகத் தொடங்கிய கட்சியைக்கூட சட்டப்படி பதிவுசெய்ய விடாமல் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்திவருகிறது ரஷ்ய அரசு. அரசை எதிர்க்க நினைக்கும் மக்களுக்கு நவால்னி குவிமையமாகிவிட்டார். இதனால் அவரை எப்படியாவது அரசியல் களத்திலிருந்து அகற்றிவிட அரசு முயல்கிறது. தேர்தல் நடைமுறைகளில் தில்லுமுல்லு செய்வது, எதிர்க்கக் கூடியவர்களை ஏதோ ஒரு விதத்தில் அடக்குவது, கைதுசெய்வது, காணாமல் ஆக்குவது என்றும் புதின் அரசு செயல்படுவதாகக் கூறப்படுகிறது. நவால்னி மட்டுமே இப்போது பிரதான எதிர்ப்படையாளமாகத் திகழ்கிறார். இதுதான் அவருடைய தனித்துவம்.

- ஆர்.என்.சர்மா, தொடர்புக்கு: vrangachari57@gmail.com

SCROLL FOR NEXT