சிறப்புக் கட்டுரைகள்

காருக்குறிச்சியாருக்கு ‘பரிவாதினி’யின் மரியாதை

புவி

கடந்த 2021-ல் தவில் இசைக்கலைஞர் வலங்கைமான் சண்முகசுந்தரத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, மேசை நாட்காட்டி ஒன்றை வெளியிட்டிருந்தது சென்னையைச் சேர்ந்த ‘பரிவாதினி’ அமைப்பு. சண்முகசுந்தரத்தின் அரிய புகைப்படங்களுடன் அவரைப் பற்றிய தகவல்களும் அதில் இடம்பெற்றிருந்தன. அந்நாட்காட்டிக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, இந்த ஆண்டு நாகஸ்வரக் கலாநிதி காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அதுபோன்ற ஒரு மேசை நாட்காட்டியை ‘பரிவாதினி’ வெளியிட்டுள்ளது.

காருக்குறிச்சியாரைப் பற்றிய தகவல்கள் வெறும் வாழ்க்கைக் குறிப்புகளாக இல்லாமல், ‘அட!’ என்று வியக்கவைக்கும் ஆச்சரியங்களாக அமைந்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சிறு கிராமமான காருக்குறிச்சி, இன்று அருணாச்சலத்தால் பெரும் புகழைப் பெற்றிருக்கிறது. அக்கிராமத்தில் ஒரு திருமண விழாவில் கூறைநாடு நடேசனின் நாகஸ்வரக் கச்சேரியைக் கேட்டு மனதைப் பறிகொடுத்த பலவேசம் அதை முறைப்படி கற்று இசைக் கச்சேரிகளை நடத்தினார் என்றாலும், அவரால் தான் விரும்பியவாறு ஜொலிக்க முடியவில்லை. ஆனாலும், அவரது மகன் அருணாச்சலத்துக்கு இளம் வயதிலேயே இசைப் பயிற்சிகளைத் தொடங்கிவைத்து, அவரைப் பெரும் வித்வானாக மாற்றிய முழுப் பெருமையும் அவருக்கே உண்டு.

இளம் வயதில் ஊர் விழாக்களில் நையாண்டி மேளத்துக்கு நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார் அருணாச்சலம். கல்லிடைக்குறிச்சியில் திருமண விழா கச்சேரிக்கு வந்திருந்த டி.என்.ராஜரத்தினத்தின் பார்வை, திருமணச் சடங்குகளின்போது நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்த அருணாச்சலத்தின் மீது பட்டது. அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார் டி.என்.ஆர். சில ஆண்டுகளிலேயே குருவோடு சேர்ந்து கச்சேரிகளில் நாகஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார் அருணாச்சலம். தனியாகக் கச்சேரி செய்யத் தொடங்கிய அருணாச்சலத்திடம் குருநாதர் டி.என்.ஆரின் தாக்கங்கள் இருந்தாலும், அவரது விரிவான ராக ஆலாபனையில் விளாத்திக்குளம் சுவாமிகளின் தாக்கமும் இருந்தது. காருக்குறிச்சியாருடன் இரண்டாவது நாகஸ்வரம் வாசித்த எம்.அருணாச்சலம், அவர்கள் இருவருடன் தவில் வாசித்த வித்வான்கள் ஆகியோரையும் குறிப்பிட்டிருக்கிறது இந்நாட்காட்டி. கோவில்பட்டியில் இசைப் பள்ளி நிறுவ வேண்டும் என்ற காருக்குறிச்சியாரின் வாழ்நாள் பெருங்கனவையும் நினைவுபடுத்துகிறது.

ஒருமுறை விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு நகைச்சுவையாகக் குறிப்பிட்டாராம்: ‘இவ்வளவு பெரிய கூட்டம் என் பேச்சைக் கேட்பதற்காக வரவில்லை, காருக்குறிச்சி அருணாச்சலத்தின் இசையைக் கேட்பதற்காகத்தான் கூடியிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்’.

தன் மகன் வழியாக நிறைவேறிய தந்தையின் இசைக்கனவு, வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கிய இசை மேதைகளின் சந்திப்பு என நெகிழ்வான சம்பவங்களோடு கார்வை, குழைவு, கமகம், சஞ்சாரம், கற்பனை ஸ்வரங்கள் என்று சங்கீத நுட்பங்களையும் அவற்றில் காருக்குறிச்சியார் நிகழ்த்திய அற்புதங்களையும் பக்கம் பக்கமாய் விவரிக்கிறது இந்த மேஜை நாட்காட்டி. நூற்றாண்டு காணும் நாகஸ்வரச் சக்ரவர்த்தியை நாள்தோறும் நினைவுபடுத்தும் நல்லதொரு மரியாதை.

SCROLL FOR NEXT