திருநங்கைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருந்தால் அவர்களது முன்னேற்றமும் தடைபடாது
ஒரு திருநங்கை எதிர்கொள்ளும் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு வாழ்ந்துவருபவர்களில் நானும் ஒருத்தி. வலிமிகுந்த எத்தனையோ கணங்களைக் கடந்துவந்திருக்கிறேன். ஆனால், திருநங்கைகள் கடைவீதிகளிலும், பொது இடங்களிலும், ரயில்களிலும் கையேந்தி நிற்பதைக் காணும்போது மனதில் ஏற்படும் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
அதைவிட வலி ஏற்படுத்துபவை, பாலியல் தொழில் செய்ய சாலையோரங்களில் திருநங்கைகள் காத்திருக்கும் காட்சிகள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல வேலைக்கு செல்லக்கூடிய தகுதி இல்லாதவர்கள். போதுமான வாழ்வாதாரங்களைப் பெற முடியாதவர்கள்.
இதற்கு முக்கியக் காரணம் இவர்கள் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியதுதான். புறக்கணிப்புகளாலும், அவமதிப்புகளாலும் வேறு வழியில்லாமல் கல்வியைக் கைவிட வேண்டிய நிலை. கல்வித் தகுதி இல்லாததால் பின்னர் பிழைப்புக்காகப் பிச்சையெடுப்பதிலும், பாலியல் தொழிலிலும் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பின்னர், அந்தக் கொடூர வட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற, பள்ளிகளிலிருந்தே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குரல்கள் மாற்றுப் பாலினத்தவர்களிடமிருந்து எழுந்திருக்கின்றன.
புரிதலின்மை
டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷும், ஆராய்ச்சி மாணவர் அஸ்லாம் நவேதும் ‘மாற்றுப் பாலினத்தவர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு’ எனும் தலைப்பில் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமூகநீதித் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
“சமூகத்தின் தாக்கத்தாலும், மதிப்பீடுகளாலும் ஆசிரியர்கள் மாற்றுப் பாலினத்தவரைக் குற்றவாளி களாகக் கருதுகின்றனர். மாற்றுப் பாலினத்தவரைப் பற்றிய புரிந்துணர்வு இல்லாததாலும், பாலினப் பன்முகத்தன்மை பற்றிய போதிய அறிவில்லாததாலும், கல்விக்கூடங்களில் பாலினம் உறுதிப்படுத்தப்படாத மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். குடும்பத்தாலும், சமூகத்தாலும் தனிமைப்படுத்தப்படும் இவர்களுக்குக் கல்விக்கூடங்களிலும் ஆதரவு இல்லாததால் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நாங்கள் - மாற்றுப் பாலினத்தவர்கள், குழந்தைகளாக இருந்தபோது பள்ளியில் கேலிக்கும், கிண்டலுக்கும், ஏன் வன்கொடுமைக்கும் ஆளானோம். உச்சபட்சக் கொடுமையாக பெற்றோர்களாலும் நிராகரிக்கப்பட்டோம். எங்களில் பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் தொடரத்தான் விரும்பினோம். ஆனால் கொடூர உலகம் எங்கள் கனவுகளைத் தகர்ந்தெறிந்துவிட்டது.
தங்கள் பாலினத்தை உறுதிசெய்ய இயலாமலும், சக மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று புரியாமலும் இளம் வயதில் திருநங்கைகள் படும் அவஸ்தையை எளிதாக விவரித்துவிட முடியாது. அந்தக் குழந்தைகள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகாமல் இருந்திருந்தால், ஆசிரியர்கள் அக்குழந்தைகளுக்கு ஆதரவும், கவனிப்பும் அளித்திருந்தால், அவர்களின் குடும்பங்கள் அவர்களை உள்ளவாறே ஏற்றுக்கொண்டி ருந்தால் இந்த நிர்கதி அவர்களுக்கு நேரிட்டிருக்காது!
துளிர் மனங்களின் தூய்மை!
கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறேன். ஒவ்வொரு சந்திப்பிலும் கல்வியாளர்களும் மாணவர்களும் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் முன்வைக்கிறார்கள்.
ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு 2011 மற்றும் 2013 ஆண்டுகளில் பாலினப் பாகுபாடு பற்றி உரை நிகழ்த்த அழைக்கப்பட்டேன். மாணவர்களிடையே பாலினப் பாகுபாட்டைப் பற்றிப் பேசுவது ஒரு சவாலான பணி. அவர்களின் மனநிலைக்கு நம்மைத் தயார்படுத்திக்கொண்டும் அவர்களின் மொழியில் மென்மையாகவும் நேர்மையாகவும் பேசவேண்டும்.
பாலினம் என்பது பல்வேறு நிறங்களையுடைய நிறமாலை போன்றது. திறந்த மனதுடன் அதை அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதைப் பள்ளிகளில் உரையாடும்போது புரியவைத்தேன். மனித நேயத்துடனும், திறந்த மனதுடனும் அக்குழந்தைகள் என்னிடம் தங்களது சந்தேகங்களைக் கேட்டறிந்தனர். நான் பார்த்தவரையில் பெரியவர்களை விட பரிசுத்த மானவர்களாகவும் மனிதர்களை அவர்களது நிறை குறையுடன் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும் நிறைந்த கருணையுடையவர்களாகவும் இருக்கிறார்கள் குழந்தைகள்.
அவர்களுக்கு என்னை ஏற்றுக்கொள்வதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை. அவர்கள் என்னை ஒரு தோழியாகத்தான் பார்த்தனர்; மாற்றுப் பாலினத் தவராக அல்ல. எத்தனை அற்புதமான விஷயம் இது!
சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலிருந்து வரும் மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளில் இன்னும் வித்தியாசமான அனுபவத்தை எதிர் கொண்டேன். குறிப்பாக, கோத்தகிரி அரசினர் உயர்நிலைப் பள்ளியில். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சின்னஞ்சிறு கிராமத்தின், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகள் பற்றியும் சமூகத்தில் அவர்களுக்கான இடத்தைப் பற்றியும் அறிவதில் அவர்களுக்குரிய ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்துபோனேன்.
குறிப்பாக, மாற்றுப் பாலினத்தவரின் சமூக அந்தஸ்து பற்றி அறிந்துகொள்வதில் அவர்கள் காட்டிய ஆர்வம் மனநிறைவைத் தந்தது. ஏழ்மையான மாற்றுப் பாலினத்தவர்க்கான பிரச்சினைகளுக்குத் தங்களுக்கே உரிய பரிசுத்தத்துடன் தீர்வுகளையும் கூறினர். குழந்தைகள் எல்லா இடங்களிலும் குழந்தைகள்தான்.
ஆசிரியர்களால் முடியும்
குழந்தைகள் என்னை நானாகவே ஏற்றுக்கொள்ளும் போது, பெரியவர்கள் ஏன் மாற்றுப் பாலினத்தவர் என்று கருதி ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்? பெரியவர்களுக்கு ஏன் இது அவ்வளவு கடினமாக இருக்கின்றது? பெரியவர்களின் மனது வெறுப்பு மற்றும் நஞ்சால் கலக்கப்பட்டுவிட்டதா? இந்தக் கேள்விகள் மனதைக் குடைகின்றன. இந்தக் குழந்தைகள், பெரியவர்களாகும்போது இவர்களின் மனதிலும் நஞ்சு கலக்கப்பட்டு, இவர்களும் குறுகிய மனப்பான்மையுடன் வளர்ந்துவிடுவார்களோ என்ற கவலையும் எழுகிறது.
மாணவர்களும், மாணவியர்களும் ஒருவரை யொருவர் மரியாதையுடன் நடத்துவதிலும் மற்றவர்களுக்கான வெளியை ஏற்றுக்கொள்வதிலும் ஆசிரியரின் பங்கு மகத்தானது. பாலின மாறுபாட்டால் குழப்பத்தில் இருக்கும் குழந்தைகளை ஆசிரியர்கள் அனுசரணையுடன் நடத்தத் தொடங்கினால், மிகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
எனவே, பாலின மாறுபாட்டின் அடிப்படைச் சிக்கல்கள் குறித்து முதலில் நாம் ஆசிரியர்களுக்குக் கற்பிக்கவேண்டும். மாற்றுப் பாலினம் மற்றும் பாலினத்தை உறுதிசெய்ய இயலாத மாணவர்களின் உரிமைக்காகப் பாடுபடுபவர்களும் குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் முன்னெடுக்க வேண்டிய விஷயம் இது. அனைத்துப் பள்ளிகளிலும் முதன்மைப் பிரச்சினையாகவும், ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைக் கூறாகவும் இதை வலியுறுத்திக் கூறவேண்டும். நமது பள்ளிகளில் பாடத்திட்டங்களில் மாற்றுப் பாலினத்தவர் பற்றிய கல்வி கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டும்.
இந்தியா பல்வேறு மத, மொழி, கலாச்சாரப் பாரம் பரியத்தைக் கொண்ட நாடு மட்டுமல்லாமல், பல்வேறு பாலினப் பாகுபாட்டை உடையது என்பதையும், இச்சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவர்க்கான வெளியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் மாணவர்களுக்குத் தெளிவுப்படுத்துவதில் ஆசிரியரின் பங்கு இன்றியமையாதது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குழப்பத்தில் தவிக்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களது பிரச்சினைகளைக் களைய ஆசிரியர்களால் முடியும். பாலின மாறுபாடு அடைந்து கொண்டிருக்கும் குழந்தையைச் சக மாணவர்கள் கேலி செய்யாமல், தங்களில் ஒருவராக அவனை நடத்துவதை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
சட்டம் எங்களைப் பாதுகாக்க முடியும். ஆனால், இழிவுபடுத்தும் நோக்கத்திலிருக்கும் சமூகத்திலிருந்து சட்டமும் மசோதாக்களும் எவ்வளவு காலம் எங்களைப் பாதுகாக்க முடியும்? ஒரு திருநங்கையாக, ஒரு பிள்ளை பெறாதத் தாயாக, ஒரு இந்தியக் குடிமகளாக, பாலினம் உறுதிசெய்ய இயலாத குழந்தைகளை இழிவுபடுத்தி பாகுபாடு காட்டும் இச்சமூகச் சூழலிலிருந்து அவர்களை விடுவித்து, மகிழ்ச்சியும் பாதுகாப்பும் மிக்க எதிர்காலத்தை அவர்களுக்கு அமைக்க உதவ வேண்டும் என நினைக்கிறேன். நடக்குமா?
- கல்கி சுப்ரமணியம், சமூகச் செயற்பாட்டாளர்,
கவிஞர் மற்றும் திரைக் கலைஞர் தொடர்புக்கு: aurokalki@gmail.com