இயற்கை விவசாயம் மீது விழிப்புணர்வு உச்சத்தில் இருக்கும் காலம் இது. ‘உண்ணும் உணவில் விஷத்தைக் கலப்பானேன்?’ என்கின்றனர் விவசாயிகள். ‘நச்சுக் கலப்பில்லாத உணவுப் பொருளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் விலை கொடுக்கலாம்’ என்கின்றனர் நுகர்வோர்கள். சிக்கிம் மாநிலம் முழுமையாக இயற்கை வேளாண்மைக்கு மாறிவிட்டது, அம்மாநில முதல்வரின் முயற்சியால்! இந்த விஷயத்தில் சிக்கிம் இந்தியாவின் முதன்மை மாநிலம்!
தமிழகத்தில் இயற்கை வேளாண்மை விவசாய முறைக்கு மாற விவசாயிகளே விரும்பினாலும்கூட சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்கு என்ன தேவை?
எஸ்.எஸ்.ராஜராஜன், இளம் இயற்கை விவசாயி, தஞ்சாவூர்.
இயற்கை உரங்களை விவசாயிகளே தயாரிக்க வேண்டியிருக்கிறது. ரசாயன உரங்களுக்குத் தருவதைப் போல, இயற்கை விவசாயத்துக்கும் மானியம் தர வேண்டும். உண்மையிலேயே இது இயற்கை வேளாண்மையின் விளைபொருள்தானா என்று வேளாண் துறையினர் ஆய்வுசெய்து சான்று கொடுத்தால், முழு நம்பிக்கையுடன் மக்கள் வாங்குவார்கள்.
கெங்காசலம்,முந்திரி விவசாயி,
பெரிய காப்பான்குளம்.
மிக அதிகமாகப் பூச்சிமருந்து பயன்படுத்தும் சாகுபடிகளில் முந்திரி சாகுபடியும் ஒன்று. 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மூட்டை முந்திரியும், ஒரு பவுன் தங்கமும் ஒரே விலையில் இருந்தது. இன்று தங்கத்தின் விலை 5 மடங்கு உயர்ந்துவிட்டது. முந்திரிக்கு விலையில்லை. இந்த நிலை மாற முந்திரி சாகுபடியும் இயற்கை வேளாண்மைக்கு மாற அரசு உதவ வேண்டும்.
செ.செல்வி,உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் உயிர் வேதியியல் துறை,
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி.
விவசாயிகளுக்கு நாட்டுவிதைகளையும், இயற்கை உரங்களையும் அரசே வழங்க வேண்டும். அதேபோல முன்னோடி இயற்கை விவசாயிகளைக் கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். நாட்டுமாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்க கிராமப் பஞ்சாயத்துக்கு ஒன்று என அரசே காளைகளை வழங்க வேண்டும்.
ஜி.நல்லதம்பி,இயற்கை வேளாண் பொருள் உற்பத்தி
மற்றும் விற்பனையாளர், பாளையங்கோட்டை.
விவசாயிகளின் முக்கியமான பிரச்சினை விளைபொருட்களை சந்தைப்படுத்துவதுதான். இடைத்தரகர்களிடம் சிக்கினால், விவசாயிகளுக்கும் லாபம் இருக்காது, கலப்பட வாய்ப்பும் ஏற்படும். எனவே, இயற்கை விவசாயம் செய்வோர் தனது பொருட்களைத் தானே விற்பனை செய்யும் நிலை வர வேண்டும்.
எஸ்.எம்.கே.ராமநாதன்,இயற்கை விவசாயி,
காரைக்குடி, சாக்கோட்டை.
பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளைத் தடை செய்யாமல், இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுப்பது சிரமம். எனவே, இயற்கை உரங்களைத் தயாரிக்க பயிற்சியும் மானியமும் வழங்குவதோடு ரசாயன உரங்கள், மருந்துகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.
டாக்டர் ஷர்மிளா பாலகுரு,இயற்கை யோகா மற்றும்
மனநல மருத்துவர், திண்டுக்கல்.
மக்களுக்கு முதல் தேவை ஆரோக்கியம்தான். எனவே, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் பயிரிடும் பரப்பளவுக்கு ஏற்ப மானியம் வழங்கலாம். மக்களுக்குத் தரமான இயற்கை விளைபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஜானகிராமன்,(தமிழகத்திலேயே முதல் முறையாக இயற்கை முறையில்
திராட்சை சாகுபடி செய்தவர்) சிறுமலை, திண்டுக்கல்.
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் விவசாய வேலைகளையும் சேர்க்க வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய கூட்டுறவு இயற்கைக் காய்கறி அங்காடிகளை அரசு அமைத்துத் தர வேண்டும்.
ஜெ.சுகந்தி,காந்திகிராமம், கரூர்.
உடல் நலம், குழந்தைகளின் எதிர்காலம் கருதி இயற்கை உணவுகளையே வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், எல்லா இடங்களிலும் அவை கிடைப்பதில்லை, கிடைத்தாலும் விலை அதிகமாக உள்ளது. இதற்கு ஒரே தீர்வு, பல்வேறு சலுகைகளை வழங்கி, இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிப்பதுதான்.