அதிமுக பிளவுபட்டிருந்தபோது ‘ஒருங்கிணைந்த அதிமுகவையே ஆதரிப்போம்’ என்ற நிலைப்பாட்டை ராஜிவ் காந்தி எடுத்தார். அதற்கேற்ப 1989 மக்களவை தேர்தலுக்குமுன் அதிமுகவின் இரு பிரிவுகளும் ஒன்றாகின. காங்கிரஸ் அதிமுக கூட்டணி உருவானது. அதில் 28 இடங்களில் காங்கிரஸ் நின்றது. அந்தத் தேர்தலில் ராஜிவ் காந்தி அரசின் போஃபர்ஸ் ஊழல்தான் பிரதானப் பிரச்சினை. அது தேசிய அளவில் காங்கிரஸை வீழ்த்தியது. ஆனால் இங்கே காங்கிரஸுக்கு 27 இடங்கள் கிடைத்தன. காரணம், வலுவான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவுடனான கூட்டணி.
தொடர்ந்த கூட்டணி
டெல்லியில் வி.பி.சிங் தலைமையிலான அரசு அமைந்தது. விரை வாக நடந்த அரசியல் காட்சி மாற்றங்கள் காரணமாக விரைவில் அது வீழ்த்தப்பட்டது. அதிமுக, காங்கிரஸ் ஆதரவோடு சந்திரசேகர் பிரதமரானார். அப்போது தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகக் காரணம் சொல்லித் திமுக அரசு கலைக்கப்பட்டுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிறகு சந்திரசேகர் ஆட்சியும் கவிழவே, 1991-ல் மக்களவைக்கும் தேர்தல் வந்தது.
ஏற்கெனவே இருந்த அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. காங்கிரஸுக்கு 66 சட்டமன்றத் தொகுதிகளையும் 28 மக்களவைத் தொகுதிகளையும் ஒதுக்கினார் ஜெயலலிதா. திமுக அணியும் ஓரளவுக்குப் பலமாகவே இருந்தது. ஜெயலலிதாவும் ராஜீவ் காந்தியும் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
எண்பதுகளில் தனது ஆட்சிக் கலைப்புக்கு எம்.ஜி.ஆர். நியாயம் கேட்டதுபோல் இந்த முறை கருணாநிதி நியாயம் கேட்டார். ஆனால், பெரும்புதூரில் நடந்த ராஜிவ் படுகொலை எல்லாவற் றையும் புரட்டிப்போட்டது. அனுதாப அலையின் காரணமாக அதிமுக காங்கிரஸ் அணி அபாரமான வெற்றியைப் பெற்றது. காங்கிரஸுக்கு 60 எம்.எல்.ஏக்களும் 28 எம்.பிக்களும் கிடைத்தனர்.
பிறந்தது தமாகா
அந்த வெற்றிக் கூட்டணியை 1996 தேர்தலிலும் தொடர விரும் பினார் பிரதமர் நரசிம்மராவ் அதிமுக அரசின் மீதான மக்களின் அதிருப்தியை அவருக்குத் தமிழகக் காங்கிரஸார் சுட்டிக்காட்டி னார்கள். அவர்களின் எதிர்ப்பை நரசிம்மராவ் பொருட்படுத்த வில்லை. விளைவு, காங்கிரஸிலிருந்து மூப்பனார் விலகினார். தமிழ் மாநிலக் காங்கிரஸைத் தொடங்கினார். அதே வேகத்தில் திமுக அணியில் இணைந்தார். தமாகாவுக்கு 40 சட்டமன்றத் தொகுதிகளையும் 20 மக்களவைத் தொகுதிகளையும் ஒதுக்கினார் கருணாநிதி. தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது.
கட்சி உடைந்த பிறகும் காங்கிரஸுக்கு 64 சட்டமன்றத் தொகுதிகளையும் 30 மக்களவைத் தொகுதிகளையும் ஒதுக்கியது அதிமுக. அந்தத் தேர்தலின் பிரதானப் பிரச்சினையாக ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சி இருந்தது. காங்கிரஸுடனான கூட்டணி யால் அதிமுக புனிதமடைந்துவிட்டது என்று சொல்லி ஆதரவு திரட்டினார் தமிழகக் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன். ஆனால் திமுக தமாகா கூட்டணியே தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஒத்தாசைக்கு, ரஜினிகாந்த் வேறு உதவினார்.
தேர்தலின் முடிவில் திமுக தமாகா கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஒரு எம்.எல்.ஏ தொகுதியைத் தவிரப் போட்டியிட்ட அனைத்து இடங்களையும் கைப்பற்றியது தமாகா. மாறாக, அதிமுக அணியிலிருந்த காங்கிரஸுக்கோ அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி. விளைவு, அடுத்த தேர்தல்வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றால் தமாகா மட்டுமே என்ற நிலை உருவானது!
- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
(கோஷம் போடுவோம்)