சிறப்புக் கட்டுரைகள்

அந்தக் காலம் | தேர்தல் ஞாபகங்கள்: தேர்தல் முடிவைத் தீர்மானித்த ரெட்டைக் காளைகள்!

நாறும்பூநாதன்

கோவில்பட்டி ‘சாத்தூர் டீ ஸ்டால்’ கொஞ்சம் விசேஷமானது. பல வருடங்கள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர். அழகர்சாமியின் ‘சட்ட மன்ற அலுவலகம்’ இந்தத் தேநீர் விடுதிதான்.

எப்போதும் கதர்சட்டை, வேட்டிதான் அணிந் திருப்பார். தோளில் போட்டிருக்கும் சிவப்புத் துண்டுதான் காங்கிரஸ்காரர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக்காட்டும். மக்கள் அவரைச் சந்தித்து மனு கொடுக்க டீக்கடை வருவார்கள். டீக்கடை பெஞ்சில் செய்தித்தாளைப் படித்தபடி அமர்ந்திருப்பார். அவரைச் சந்திக்க வருபவர்களுக்கும் பேசிக்கொண்டே டீ வாங்கித் தருவார். அவரிடம் ஒரு ஓட்டை ஹெர்குலஸ் சைக்கிள் உண்டு. அது டீக்கடை பந்தக்காலில் ஒரு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.. பெஞ்ச்சில் அவர் அருகே இன்னொருவரும் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார். அவர் ரெங்கசாமி. இன்டர்மீடியட் படித்த விவசாயி. கோவில்பட்டி அருகிலுள்ள காளாம்பட்டிப் பக்கம் உள்ள நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர். நல்ல ஆஜானுபாகுவான உடல்வாகு. அவரது கையில் எப்போதும் ‘ஜனசக்தி’ இருக்கும். 60-களின் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கில இதழான ‘நியூ ஏஜ்’ பத்திரிகைக்கு சந்தா கட்டி வாங்கியவர் ரெங்கசாமி.

1966 காலகட்டத்தில், கடுமையான வறட்சி ஏற்பட்ட நேரம். சும்மாவே கரிசல் காடு.. வானம் பார்த்த பூமி. வறட்சி நேரத்தில் விளைச்சல் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. வீட்டு வரி கட்டப் பணம் ஏது? சல்லிக் காசு இல்லாத நேரம். ஆனாலும், அன்றைய சர்க்கார் பஞ்சாயத்து போர்டு மூலம் வரிகட்டாத விவசாயிகளின் சொத்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது.

அப்படிப் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ரெங்கசாமியும் ஒருவர். ரெங்கசாமி வீட்டில் இருந்த இரண்டு காளை மாடுகளையும் அன்றைய சர்க்கார் ஜப்தி மூலம் அவிழ்த்துக்கொண்டு சென்றுவிட்டது. அது மட்டும் அல்ல. போதாக்குறைக்கு அவரது வீட்டின் முகப்பில் இருந்த மரக் கதவையும் பஞ்சாயத்து போர்டு ஆட்கள் வந்து எடுத்து சென்றுவிட்டார்கள். கதவு இல்லாமல் மூளியாய் இருந்த அந்த ஓட்டு வீட்டை மக்கள் சோகத்துடன் பார்த்தபடி செய்வதறியாமல் நின்றார்கள். இந்தச் சம்பவமே கரிசல் பிதாமகன் கி.ராஜநாராயணனின் ‘கதவு’ சிறுகதைக்கான விதை போட்டது என்று ஊர்ப் பக்கம் சொல்பவர்கள் உண்டு. ‘கதவு’ தமிழின் அற்புதமான சிறுகதைகளில் ஒன்று.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கொதித்துப்போனார்கள். உண்ணாவிரதம் இருந் தார்கள். 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் வில்லிசேரி ராமசுப்பு, காளாம்பட்டி சீனிவாசன், அய்யலுசாமி, கடம்பூர் ராமர் என்று அன்றைய இடதுசாரி இயக்கத்தின் இப்பகுதி தளகர்த்தர்கள் பலர் பங்கெடுத்தனர். போராட்டம் தீவிரம் அடைந்தது. ஜப்திசெய்த காளை மாடுகளை கோவில்பட்டி சந்தை, கழுகுமலை மாட்டுத்தாவணி என்று பல இடங்களுக்கும் கொண்டுசென்றவர்கள் அவற்றை விற்க முனைந்தனர். எல்லா இடங்களிலும் ‘இவை ரெங்கசாமியின் வீட்டில் ஜப்தி செய்த மாடுகள்’ என்ற தகவல் போய் ஒருவரும் வாங்க முன்வரவில்லை. இறுதியில், போலீஸ்காரர்கள் எங்கே ஜப்தி செய்தார்களோ அதே நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள ரெங்கசாமி வீட்டு மாட்டுத் தொழுவத்தில் கொண்டுவந்து கட்டிவிட்டார்கள்.

இந்தச் சம்பவம் நடந்த கொஞ்ச காலத்திலேயே 1967 சட்டமன்றத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் கட்சி கோவில்பட்டி பகுதி மக்களிடம் ஓட்டுக்கேட்டு வந்தபோது, “ரெட்டைக் காளைகளை ஜப்தி செய்த காங்கிரஸ் கட்சி, இப்போது ரெட்டைக் காளை சின்னத்தில் ஓட்டுக் கேட்க வருகிறது...” என்று சுவரொட்டிகள் அடித்து ஒட்டினார்கள் விவசாயிகள். விளைவாக, முதல் முறையாக, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தோழர் அழகிர்சாமி வெற்றிபெற்றார். மீதி எல்லாத் தொகுதிகளிலும் திமுக சுதந்திரா கட்சி கூட்டு இருந்தபோதிலும், இந்தத் தொகுதியில் மாத்திரம் அழகர்சாமியை திமுக ஆதரித்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் வ.உ.சி.யின் மகன் ஆறுமுகம் நின்றார். பலமான வேட்பாளர் என்றாலும், அழகர்சாமி வெற்றியை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

மக்கள் ஒன்றுபட்டால், எப்படிப்பட்ட முடிவுகளை அரசியல்வாதிகளுக்குத் தர முடியும் என்பதற்கு இன்றைக்கும் பாடம் சொல்லும் உதாரணம் ரெட்டைக் காளைகள்!

- தொடர்புக்கு: narumpu@gmail.com

வாசகர்கள் தங்கள் ‘அந்தக் கால' அனுபவங்களை அனுப்பிவைக்ககலாம்.

SCROLL FOR NEXT