சிறப்புக் கட்டுரைகள்

அன்பழகன் 100: தமிழ் முழக்கம்

செய்திப்பிரிவு

திருவாரூரில் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஒரு மாணவர் அமைப்பினைத் தொடங்கினேன். இதனுடைய முதலாவது ஆண்டு விழாவை 1943-ம் ஆண்டு திருவாரூரில் நடத்தினேன். முக்கிய சொற்பொழிவாளராக அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வகுப்பு மாணவராயிருந்த ஒருவரை அழைத்திருந்தேன்.

ஒல்லியான, மெலிந்த உருவம் என்றாலும் துல்லியமான செந்தமிழ்ப் பேச்சு; அணை உடைத்த வெள்ளமெனத் தடைபடா அருவி நடை; தன்மானக் கருத்துகள்; தமிழ் முழக்கம்- இவற்றால் எங்களையெல்லாம் ஈர்த்துக்கொண்டார், அந்தச் சொற்பொழிவாளர். அவர்தாம் பேராசிரியர் அன்பழகன். என்னைவிட ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளே மூத்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாலும் பின்னர் அண்ணாவின் பல்கலைக்கழகத்தில் தம்மை இணைத்துக்கொண்டு, கல்லிலும் முள்ளிலும் நடந்து, அல்லும் பகலும் சுற்றிச் சுழன்று, கண்ணீரும் செந்நீரும் சிந்தி இந்தக் கழகத்தை வளர்த்த பெரும் தொண்டர்களின் வரிசையில் அவருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு.

- மு.கருணாநிதி

தொடர்ந்து பயணிக்கிறோம்!

பல்கலைக்கழகத்தில் நாங்கள் படித்துக் கொண்டிருந்தபோது நான் ‘கொள்கைப் பற்றோடு’ இருந்தேன் என்றால், அவர் ‘கொள்கை வெறி’யோடு திகழ்ந்தார். அப்பொழுது பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பெரும்பாலோர் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிப் பற்றுடையவர்களாகத்தான் விளங்கினார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர்தான் திராவிட இயக்கப் பற்றுடையவர்களாக இருந்தோம். 1943-ல் நானும், பேராசிரியர் அவர்களும் கலைஞரின் அழைப்பை ஏற்று, முரசொலி மன்ற ஆண்டு விழாவில் கலந்துகொள்ளத் திருவாரூர் சென்றோம்.

1944-ல் குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில் கலந்துகொள்ள ஒன்றாகவே சென்றோம். பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய உடனேயே ஈரோட்டில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றோம். அந்த மாநாட்டைப் பெரியார் அவர்கள் கூட்டினார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்கள். நான் கொடியேற்று விழாவை ஆற்றினேன். பேராசிரியர் அவர்கள் திறப்பு விழா உரையாற்றினார்கள். இயக்கப் பணிகளில் தொடர்ந்து சேர்ந்து நின்று பணியாற்றிவருகிறோம்.

- இரா.நெடுஞ்செழியன்

SCROLL FOR NEXT