பாகிஸ்தானில் மதநிந்தனையின் பெயரால் மீண்டும் ஒரு படுகொலை நிகழ்ந்துள்ளது. சியால்கோட் என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலையில் மேலாளராகப் பணியாற்றிய, இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமாரா, கும்பல் படுகொலைக்கு ஆளாகியுள்ளார். அவரது உடலும் அந்தக் கும்பலால் எரிக்கப்பட்டுவிட்டது.
அவர் பணியாற்றிய தொழிற்சாலையைப் பார்வையிட ஒரு குழு வருவதாக அவருக்குத் தகவல் வந்ததும் தொழிற்சாலை சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்தச் சுவரொட்டிகளில் மதிக்கத்தக்க சில மதத் தலைவர்களின் படங்கள் இருந்ததாகவும் அதனால் ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் அவரைக் கொன்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்வு பாகிஸ்தானில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘பாகிஸ்தானுக்கு மிகப் பெரும் அவமானம் ‘‘என்றார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ‘‘இது நமக்கு அழிவு நாள். இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றால் பாகிஸ்தான் ஒருபோதும் வளம் பெற முடியாது. நாட்டில் எவரும் காலெடுத்து வைக்க மாட்டார்கள். நல்ல மனிதர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள்’’ என்று எச்சரித்தார் பத்திரிகையாளர் மஹ்வாஸ் ஏஜாஸ். இதுவரை 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 900 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைத் தண்டிக்க அரசு தீவிரமாக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசு திருப்தி தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல மதத் தலைவர்களும் இதனைக் கண்டித்திருப்பது ஆறுதலைத் தருகிறது. மதத் தலைவர்கள் ஒரு குழுவாக இலங்கை தூதரகத்துக்குச் சென்று தூதரைச் சந்தித்துத் தங்களின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளனர். ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் சிராஜுல் ஹக், தேவ்பந்தி அமைப்பின் தலைவர் முப்தி தகி உஸ்மானி, தப்லீக் ஜமாத்தை சேர்ந்த தாரிக் ஜமீல், அஹ்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் சாவித் மீர் என அனைவரும் “குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் மதநிந்தனை என்ற பெயரில் இதற்கு முன்னரும் படுகொலைகள் பலமுறை நிகழ்ந்துள்ளன. 1987- 2017 காலகட்டத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர். இதில் முஸ்லிம்களும் அடங்குவார்கள். மதநிந்தனைச் சட்டம் கூடாது என்று சொன்ன ஒரு மாநிலத்தின் ஆளுநரும் கொல்லப்பட்டார்.
இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்களை கொல்ல வேண்டும் என்ற விதி இஸ்லாத்தில் இல்லை. மதநிந்தனை செய்பவர்களை உரிய விசாரணைக்குப் பிறகு அரசு தண்டிக்கலாம். தனிமனித உயிரைப் பறிக்க மக்களுக்கு உரிமை இல்லை. நபிகளார் காலத்தில் நபிகளாரைக் கேலி செய்தவர்களை நபிகளார் தண்டிக்கவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பு, தேசத்துரோகம் ஆகிய குற்றங்களைச் செய்தால் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட்டது .
‘‘இறைவன் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்” என்று குர்ஆன் கூறுகிறது” (6-151)
‘‘இஸ்லாமிய அரசில் பாதுகாப்பு பெற்றுள்ள முஸ்லிம் அல்லாத குடிமகனை யாராவது கொலை செய்தால் அவர் சுவனத்தின் (சொர்க்கத்தின்) வாசனையைக் கூட நுகர மாட்டார்’’ என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
‘‘இஸ்லாமிய அரசில் உள்ள முஸ்லிம் அல்லாத குடிமக்கள் நம் அடைக்கலத்தில் உள்ளவர்கள். எனவே அவர்களின் உயிர் நம் உயிர் போன்றது. அவர்களின் சொத்து நம் சொத்து போன்றது’’ என்று கலீபா அலி அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாம் மட்டுமல்ல, எந்த மதம் நிந்தனைக்கு உள்ளானாலும் அம்மதத்தவர் ஆத்திரப்பட வேண்டிய அவசியமில்லை. மதத்தின் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலையும் விளக்கத்தையும் வழங்குவதுதான் அறிவுடைய செயல்.
கருத்தைக் கருத்தால் சந்திப்பதே உரிய தீர்வு. நபிகளார் வாழ்ந்த காலத்தில் நபிகளார் மீதும் இஸ்லாத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டபோது நபிகளார் அவற்றுக்கு அறிவுபூர்வமாகப் பதிலளித்தார்கள். நபிகளார்மீது வசைக் கவிதைகள் பாடப்பட்டபோது தமது அணியில் இருந்த கவிஞர்கள் மூலமாகக் கவிதை வடிவில் அதற்குப் பதில் சொன்னார்கள். ஒருவரது மதம் தாக்கப்படும்போது உணர்ச்சிவசப்பட்டு வன்முறையில் இறங்குவது மதப்பற்று அல்ல, அது மதவெறி.
சமயங்கள் கற்பிக்கும் வாய்மை, நேர்மை, மனிதநேயம், அகிம்சை, பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழ்தல், அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்புதல் ஆகியவையே ஆன்மிகம். இதனை அனைத்து மதத்தவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
- கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, மருத்துவர், துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை, சென்னை. தொடர்புக்கு: iftchennai12@gmail.com