மூப்பனாரின் மரணம் தமாகாவை மீண்டும் காங்கிரஸில் இணைய வைத்தது. வாஜ்பாய் அரசில் இடம் பெற்றிருந்த திமுக, 2004 மக்களவைத் தேர்தல் நெருங்கும்போது அதிலிருந்து விலகியது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. பாமக, மதிமுக, இடது சாரிகள் இடம்பெற்ற அந்த அணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் தரப்பட்டன. அதிமுகவோடு பாஜக அணி சேர்ந்தது.
இந்தியா ஒளிர்கிறது என்றது பாஜக. இந்தியா ஊழலில் திளைக்கிறது என்றது காங்கிரஸ். ஆனால் கூட்டணியே தமிழகத்தில் தேர்தல் முடிவைத் தீர்மானித்தது. தேர்தல் முடிந்தது. திமுக கூட்டணி 100% வெற்றியைப் பெற்றது. மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த மத்திய அமைச்சரவையில் தமிழக காங்கிரஸார் பலரும் இடம்பெற்றனர்.
தொங்கியது சட்டமன்றம்
திமுக- காங்கிரஸ் கூட்டணியே 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. காங்கிரஸுக்கு 48 தொகுதிகள் தரப்பட்டன. மதிமுக விலகினாலும், பாமக, இடதுசாரிகள் இருந்ததால் திமுக அணி பலமாகவே இருந்தது. ஆனால் மதிமுகவுடனும் விடுதலைச் சிறுத்தை கட்சியுடனும் மட்டும் அணியமைத்தது அதிமுக., அது தனது சாதனைகளைச் சொல்லிப் பிரச்சாரம் செய்தது. திமுகவோ இலவச டிவி, 2 ரூபாய் அரிசி என்பன போன்ற வாக்குறுதிகளைக் கொடுத்தது.
தேர்தலின் முடிவில் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. 1952-க்குப் பிறகான முதல் நிகழ்வு இது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவோடு ஆட்சியமைத்தது திமுக. இடையிடையே ”அமைச்சரவையில் பங்கு” கோஷத்தை தமிழக காங்கிரஸார் எழுப்பினர். அதற்குள் 2009 மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது.
அப்போது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்த உதவி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. மாநில திமுக அரசுக்கும் பெருத்த சவால்கள் எழுந்தன. மேலும், திமுக அணியிலிருந்து இடதுசாரி களும் வெளியேறினார்கள். திமுகவின் நிலைமை சிக்கலானது. என்றாலும், திமுக அணியில் காங்கிர ஸுக்கு 16 மக்களவைத் தொகுதிகள் தரப்பட்டன.
இந்திய அளவில் ஸ்பெக்ட்ரம் முறைகேடும் தமிழகத்தில் ஈழத் தமிழர் விவகாரமும் பிரதானமாகப் பேசப்பட்டன. ஆனாலும் தேர்தலின் முடிவில் காங்கிரஸ் அணிக்குப் பெரிய சேதாரமில்லை. இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணியே வென்றது. தமிழகத்தில் காங்கிரஸுக்கு 8 தொகுதிகள் கிடைத்தன. பிறகு ஸ்பெக்ட்ரம் விவகாரம் வலுக்கவே, திமுக அணியில் காங்கிரஸின் கை ஓங்கியது. அது 2011 சட்டமன்றத் தேர்தலில் தீவிரம் அடைந்தது. கூட்டணியில் 63 தொகுதிகளை வலுக்கட்டாயமாக வாங்கியது காங்கிரஸ். விளைவு, திமுக அணி படுதோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸுக்கு வெறும் 5 தொகுதிகளே கிடைத்தன.
தோல்வியால் அதிருப்தியடைந்த திமுக, 2014 மக்களவைத் தேர்தலுக்குமுன் காங்கிரஸுடனான உறவைத் துண்டித்தது. விளைவு, தேர்தலில் இரு கட்சிகளுக்கும் படுதோல்வியே மிஞ்சியது. போதாக் குறைக்கு, காங்கிரஸிலிருந்து விலகி, மீண்டும் தமாகாவைத் தொடங்கினார் வாசன். 2016 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுகவுடனான கூட்டணியைப் புதுப்பித்திருக்கிறது காங்கிரஸ். இதுவரை காங்கிரஸின் தேர்தல் அரசியல் வரலாற்றைப் பார்த்தோம். இனி கம்யூனிஸ்ட்டுகளின் தேர்தல் அரசியல், அடுத்தடுத்த அத்தியாயங்களில்!
- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)