சிறப்புக் கட்டுரைகள்

`இந்து தமிழ்' கட்டுரை எதிரொலி: சிவில் சர்வீஸ் முதனிலைத் தேர்வு தமிழிலும் நடத்தப்பட வேண்டும்! - மக்களவையில் கனிமொழி கோரிக்கை

செய்திப்பிரிவு

நவம்பர் 30 அன்று ‘இந்து தமிழ்’ கருத்துப்பேழையில் ‘தமிழகம் இந்தப் பிரச்சினையை உணர்ந்திருக்கிறதா?’ என்ற தலைப்பில் சா.கவியரசன், மு.செய்யது இப்ராகிம் இணைந்தெழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. யூபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதனிலைத் தேர்வானது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அக்கட்டுரை வலியுறுத்தியது.

ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்ற தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் இடையில் நிலவும் பாகுபாட்டை விளக்கும் அந்தக் கட்டுரை வெளியான அடுத்த நாளே, டிசம்பர் 1 அன்று மக்களவையில் இது குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.

அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீதான விவாதத்தின் கீழ் பேசிய கனிமொழி, சிவில் சர்வீஸ் முதனிலைத் தேர்வு, தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகள் அனைத்திலும் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள்தொகையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 26% என்ற நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அவர்களின் தேர்ச்சி 59% ஆக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்துப் போட்டித் தேர்வுகளும் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்து ‘இந்து தமிழ்’ கட்டுரை வெளியிட்ட அடுத்த நாளே இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.

SCROLL FOR NEXT