சிறப்புக் கட்டுரைகள்

ஒபாமாவின் கியூபா பயணம் வெற்றியா?

ஸ்ரீநிவாசன் ரமணி

கியூபா மீதான வர்த்தகத் தடையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்

கியூபாவுக்கு 88 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் 30-வது அதிபர் கால்வின் கூலிட்ஜ் சென்றார். அவருக்குப் பின்னர், கியூபா சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாதான். இருநாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்தை எளிதாக்குதல், அமெரிக்காவில் வசிக்கும் கியூபர்கள் தங்கள் தாய்நாட்டுக்குப் பணம் அனுப்ப அனுமதிப்பது, அமெரிக்க வங்கிகள் மூலமான கியூபாவின் நிதி பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது போன்றவைதான் பேசப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, கியூபாவின் தலைநகரங்களில் இருநாடுகளும் தங்கள் தூதரகங்களைத் திறப்பது தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சரிசெய்வதில் மிகப் பெரிய தடையாக இருப்பது, கியூபாவின் மீது அமெரிக்கா விதித்த வர்த்தகத் தடைதான். கியூபா மீதான தடையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அதை அவரால் சாதிக்க முடியாது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இதற்கான சாத்தியங்கள் குறைவுதான்.

எனினும், இந்தத் தடையை படிப்படியாக நீக்குவதற்கான முயற்சியை எடுக்க நினைக்கிறார் ஒபாமா. கியூபாவுடன் சிறிய அளவிலான வர்த்தக உறவுகளை அனுமதிப்பதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரப் பலன்களால், ஒரு கட்டத்தில் கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையை எதிர்க்கும் மனப்பான்மை எதிர்க்கட்சிகளிடம் ஏற்படும் என்று ஒபாமா கருதுகிறார். கியூபா மீதான வர்த்தகத் தடையை ஆதரிப்பவர்களில் முக்கியமானவர்கள் ஃப்ளோரிடா மாகாணத்தில் அதிகமாக வசிக்கும் கியூபர்கள்தான். குடியரசுக் கட்சிக்குத் தலைவர்களை உருவாக்கித் தரும் இந்தச் சமூகத்தினர், தங்கள் தாய்நாட்டின் மீதான அதிருப்தியில் இருப்பவர்கள். ஆனால், அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் வசிக்கும் புதிய தலைமுறை கியூபர்கள் தங்கள் தாய்நாட்டின் மீதான கோபத்தைக் கைவிட்டிருக்கிறார்கள். கியூபா மீதான வர்த்தகத் தடையை நீக்குவது தொடர்பான விவாதத்தில், எதிர்க் கருத்து கொண்டவர்களின் வாதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்பதை இது காட்டுகிறது.

மாற்றுக் கருத்துகள்

கியூபச் சந்தையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும், செல்வாக்கு மிக்க விவசாயச் சமூகமும் இந்த விஷயத்தில் கியூபாவுக்கு ஆதரவாக இருக்கிறது. ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க அதிபர்கள் யாரும் இத்தகைய மாற்றத்தைச் செய்யவில்லை.

தனக்கு முன்பு அதிபர் பதவியில் இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் புதிய பழமைவாதத்தை எதிர்த்தவர் என்ற முறையில், ‘மாற்றம்’ என்பதை வாக்குறுதியாகத் தந்திருந்த ஒபாமா, தனது வார்த்தைகளுக்கு உண்மையானவராக இருக்க முயன்றார். பிற நாடுகளிடம், குறிப்பாக லத்தீன் - அமெரிக்க நாடுகளிடம் அமெரிக்கா குறித்த பார்வையை மாற்றுவதில் முக்கியக் காரணியாக இது இருந்தது. குறிப்பாக, கியூபா தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் அவருக்கு உதவியது.

கியூபப் பயணத்தின்போது, அந்த நாட்டின் அரசியல் நடைபெறும் விதம் தொடர்பாகத் தனக்கு இருக்கும் மாற்றுக் கருத்துகளை ஒபாமா தெரிவித்தார். ஆனால், தனது மதிப்பீடுகளை அமெரிக்கா அண்டை நாடுகள் மீது திணிக்காது என்றும் குறிப்பிட்டார். அரசியல் கைதிகள், அரசியல் மாற்றுக் கருத்தின் நிலை, மனித உரிமைகள் போன்ற விஷயங்களில் கியூபாவின் கொள்கைகள் குறித்து ஒபாமா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலடியாக, அமெரிக்கர்கள் அனைவருக்குமான சுகாதாரம், கல்வி, அமெரிக்காவில் வசிக்கும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான உறவு, பொருளாதாரச் சமமின்மை ஆகியன குறித்து ரவுல் கேஸ்ட்ரோ கேள்வியெழுப்பினார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக கியூபாவிடம் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதை வரவேற்பதாக ஒபாமா பதிலளித்தார். கம்யூனிச ஆட்சி நடக்கும் கியூபாவை ஒழுங்கீனமான நாடாகவும், தொல்லையாகவும் முன்பு கருதப்பட்டது. கியூபாவின் வெற்றியை அங்கீகரிக்காமல், அந்த நாட்டின் பலவீனங்களை வைத்து அதை ஒரு தீய சக்தியாகக் கட்டமைத்த அமெரிக்காவின் முந்தைய அதிபர்களை ஒப்பிடும்போது ஒபாமாவின் இந்தச் செயல் குறிப்பிடத் தக்கது.

ஜனநாயக சோஷலிசம்

அமெரிக்காவுடனான கியூப உறவு மேம்பட்டுவரும் இக்காலகட்டத்தில், கியூபாவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. பொருளாதார விஷயத்தில் அரசின் கட்டுப்பாட்டைத் தளர்த்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கும் அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ, பல்வேறு துறைகளில் உள்நாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கியிருக்கிறார். இலவச சுகாதாரத் திட்டம், இலவசக் கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் கியூப அரசு, கூட்டுறவு அமைப்புகள் போன்ற மாற்று வழிகள் மூலம் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர முயன்றுவருகிறது. அத்துடன், நீடித்த பொருளாதார தாராளமயமாக்கலுக்கு இட்டுச் செல்லும் சந்தைப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் கியூபா உணர்ந்திருக்கிறது.

கியூபா மீதான வர்த்தகத் தடையை நீக்குவது என்பது, பெரிய அளவிலான சந்தைப்படுத்துதலுக்கு கியூபாவை இட்டுச்செல்ல வேண்டும். அது கியூபர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், சுற்றுலா போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் நம்பியிருக்கும் கியூபப் பொருளாதாரத்தை வேறு துறைகளின் பக்கம் இட்டுச் செல்லும். மேலும், எப்போதும் அமெரிக்காவின் நெருக்கடியின் கீழ் இருக்கும் நாடு என்று காரணம் காட்டி, ஒரு கட்சியின் ஆட்சியைத் தொடர்ந்துகொண்டிருக்காமல், அரசியல் மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆரோக்கியமான ஜனநாயகப் பங்களிப்புக்கு வாய்ப்பளிக்கும் வகையில், கியூபாவுக்கு எதிரான வர்த்தகத் தடை நீக்கம் அமைய வேண்டும். தன்னை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் பிற லத்தீன் - அமெரிக்க நாடுகளிலேயே ஜனநாயக சோஷலிசம் வளர்ந்திருக்கும் நிலையில், அவற்றிடமிருந்து கியூபா பாடம் கற்றுக்கொள்ள முடியும்.

வரலாறு முடியவில்லை

கியூபா அடைந்திருக்கும் வெற்றி, லத்தீன் - அமெரிக்க நாடுகளிடம் அபரிமிதமான செல்வாக்கை அந்நாட்டுக்குத் தந்திருக்கிறது. சில குறைபாடுகள் இருந்தாலும் மனிதாபிமானம் மிக்க அதன் சோஷலிசக் கொள்கை அந்நாட்டின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களை உலக நாடுகளுக்கு அனுப்பிவைப்பது, ஒடுக்கப்பட்டவர்களுக்கு அளித்துவரும் ஆதரவு போன்றவை உலக நாடுகளின் நட்பை கியூபாவுக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன.

20-ம் நூற்றாண்டில், பனிப்போரின்போது ஒன்றுக் கொன்று முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை, உலக நாடுகளிடமும் பிரிவை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், கியூப அதிபர் ரவுல் கேஸ்ட்ரோவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு, முக்கியத்துவம் பெறுகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, முதலாளித்துவத்தின் வெற்றி என்றும், ‘வரலாற்றின் முடிவு’ என்றும் பலரால் கொண்டாடப்பட்டது. ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகள் கடந்த தசாப்தத்தில் சந்தித்த பொருளாதார நெருக்கடிகள், தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவரும் கியூபா, லத்தீன் - அமெரிக்க நாடுகளில் சோஷலிச அரசுகள் மீண்டும் அமைந்துவருவது போன்ற நிகழ்வுகள் வரலாறு இன்னும் முடிந்துவிடவில்லை என்பதையே காட்டுகின்றன.

நலத்திட்டக் கொள்கை, மாறுபட்ட பார்வைகளுக்கு இடமளிக்கும் தாராளவாத ஜனநாயகக் கொள்கையைப் பின்பற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், 20-ம் நூற்றாண்டின் இறுக்கமான சோஷலிசக் கொள்கையிலிருந்து நகரத் தொடங்கியிருக்கும் கியூபாவை ஆளும் ரவுல் கேஸ்ட்ரோவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு, சமகால வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சந்திப்பின் மூலம் ஏற்படப்போகும் மாற்றங்கள், ஒபாமாவின் கியூபப் பயணத்தை முக்கியத்துவம் மிகுந்ததாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

© ‘தி இந்து’(ஆங்கிலம்),

சுருக்கமாகத் தமிழில்: வெ. சந்திரமோகன்

SCROLL FOR NEXT