சிறப்புக் கட்டுரைகள்

இளைஞர் சக்தி: வரமா, சாபமா?

சோமினி சென்குப்தா

வயதானவர்கள் அதிகமுள்ள நாடுகளுக்கும் இளைஞர்கள் அதிகமுள்ள நாடுகளுக்கும் இடையில் சமநிலை தேவை.

மக்கள்தொகை விஷயத்தில் உலக வரலாற்றில் இதுவரை பதிவாகாத வகையில் சமமற்ற ஒரு சூழல் தற்போது நிலவுகிறது. பணக்கார நாடுகளில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய நாடுகளில் இளம் வயதினர் அதிகமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

வயது முதிர்ந்த சமூகத்தின் சவால்கள் குறித்து நிறையப் பேசப்பட்டுவிட்டன. ஆனால், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உலகப் பொருளாதாரத்தில் அழுத்தம் தருவதுடன், அரசியல் ரீதியான பிரச்சினைகளை அதிகரிப்பதாகவும், பெரிய அளவிலான குடியேற்றங்களுக்கு வழிவகுப்பதாகவும், திருமணம் முதல் இணையப் பயன்பாடு வரையிலான பல்வேறு விஷயங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. நமது காலத்தின் மிக முக்கியமான நீதிக் கதையாக இது அமைந்துவிடலாம்: இளைஞர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்; இல்லையெனில், உங்கள் வயோதிகக் காலத்தின்போது அவர்கள் தொந்தரவு தருவார்கள்.

இந்தியாவும் இளைஞர்களும்

உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினரின் வயது 10 முதல் 24 வரை. அதாவது, வளர்ந்துவரும் நாடுகளில் பெரும்பகுதியினர் இளைஞர்கள் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி அமைப்பு தெரிவித்திருக்கிறது. இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் வேறு எந்த நாட்டையும்விட அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இந்தியாதான். ஒவ்வொரு மாதமும், லட்சக்கணக்கானோர் 18 வயதை எட்டுகிறார்கள். வேலை தேடுவது, வாக்காளராகத் தன்னைப் பதிவுசெய்துகொள்வது என்று முக்கியமான பல விஷயங்கள் நிகழ்வது இந்த வயதில்தான். 15 முதல் 34 வயது வரையிலான இந்தியர்களின் எண்ணிக்கை, 42.2 கோடி. இதே வயதுள்ள அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் கூட்டுத் தொகைக்கு ஏறத்தாழ சமமான எண்ணிக்கை இது.

இன்றைக்கு உலக அளவில், தங்கள் பெற்றோர்களை ஒப்பிட, பள்ளிப் படிப்பில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். இதற்கு முந்தைய எந்தத் தலைமுறையையும்விட உலகத்துடனான தொடர்பில் அதிக ஆர்வத்தையும் இந்தத் தலைமுறையினர் காட்டுகிறார்கள். லட்சக்கணக்கான இளைஞர்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும், நகரங்களி லிருந்து வெளிநாடுகளுக்கும் செல்ல விரும்புகிறார்கள். அங்கு அவர்களின் வரவு விரும்பப்படுவதில்லை என்பது கவனிக்கத் தக்க விஷயம்.

அதிக எண்ணிக்கையும் ஆபத்தும்

சில வாரங்களுக்கு முன்பு வட இந்தியாவின் வளமான மாநிலமான ஹரியாணாவில் குறிப்பிட்ட சாதியினர் நடத்திய போராட்டங்கள் அம்மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்தன. நிலச்சுவான்தார்கள் நிறைந்த அந்த சாதியைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் விவசாயத்தைத் தொடர விரும்பவில்லை; தங்கள் பெற்றோர் சொல்லும் வேலைகளிலும் சேர விரும்பவில்லை. எனவே, அரசுப் பணிகளில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கேட்டு அந்தச் சமூகத்தினர் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

உலக அளவில் இளம் ஊழியர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள். ஐந்து இளைஞர்களில் இருவர் வேலையில் இல்லை அல்லது வறுமையிலிருந்து விடுபட வழிவகுக்காத, மிகக் குறைந்த சம்பளம் கொண்ட வேலைகளில் இருக்கிறார்கள் என்கிறது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை. வளரும் நாடுகளில் பல இளைஞர்கள் நிரந்தரமற்ற வேலைகளில் இருக்கிறார்கள். குறைவான சம்பளத்துடன், சட்ட ரீதியான பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். பெண்களின் நிலை இன்னும் மோசம்.

ஐரோப்பா முழுவதும், வேலைவாய்ப்பின்மை 25%ஆக இருக்கிறது. இதற்கு அந்நாடுகளின் பொருளாதாரத் தேக்க நிலை மட்டும் காரணமல்ல. இருக்கும் வேலைகளில் சேர்வதற்குத் தகுதியில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அங்கு அதிகம். அகதிகளின் வருகைக்கு எதிரான மனப்பான்மை ஐரோப்பா முழுவதும் பரவியிருப்பதற்கான காரணத்தை இது விளக்கும்.

சில நன்மைகள்

உலக மக்கள்தொகை தொடர்பான சில தரவுகளைப் பார்க்கும்போது, நாம் சரியான திசையில் செல்கிறோம் என்ற எண்ணமும் வருகிறது. நமது குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. நமது தாத்தா, பாட்டிகள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள். பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். வளரும் நாடுகளில் தொடக்கப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

எனினும், இவற்றின் பலன் ஒரேமாதிரியானதாக இல்லை. ‘பிரதம்’ எனப்படும் தொண்டு நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் பள்ளிகளில் 5-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் பாதிப் பேரால், 2-ம் வகுப்பு பாடப் புத்தகங்களைக்கூடப் படிக்க முடியவில்லை. பல குழந்தைகளுக்குக் கழித்தல் கணக்கு தெரியவில்லை. அவர்கள் பள்ளிகளில் இருக்கிறார்கள். ஆனால், அதிகம் கற்றுக்கொள்வதில்லை.

சமநிலையின் அவசியம்

உலகளாவிய வயதில் இருக்கும் வேறுபாடு, அகதிகள் குடியேற்றம் காரணமாக மக்கள்தொகை அடிப்படையில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்கிறார் பிரஸ்ஸல்ஸின் எர்ஸ்டெ குழும வங்கியின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறைத் தலைவர் ரெய்னர் முன்ஸ். வயதானவர்கள் அதிகமாகவும் தொழிலாளர் சக்தி குறைவாகவும் இருக்கும் சமூகத்துக்கும், இளைஞர்கள் அதிக அளவில் இருக்கும் சமூகங்களுக்கும் இடையிலான சமநிலை சரியான முறையில் கையாளப்பட்டால் அது பலன்தரும் என்று அவர் கூறியிருக்கிறார்.

எனினும், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் பலர் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அகதிகளுக்குக் கிடைக்கும் நிதியாதாரங்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன என்று ஐரோப்பா கருதுவதால், ஐரோப்பாவுக்கு அகதிகள் வர வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்டு டஸ்க் கூறியிருக்கிறார். உண்மையில், ஏழை நாடுகள் வளம் பெற்று, அந்நாடுகளின் இளைஞர்கள் நல்ல கல்வியறிவு பெற்றால், அவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

ஹரியாணா மாநிலத்தில் 1,000 ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற விகிதத்திலேயே மக்கள்தொகை அமைந்திருக்கிறது. பெண் குழந்தைகள் தொடர்பான தவறான கருத்தே இதற்குக் காரணம். தொழில்நுட்பம் வளர்ந்துவரும் சூழலில், வருமானம் அதிகரித்துவரும் குடும்பங்களில், கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று சட்டவிரோதமாகக் கண்டறிந்து, பெண் சிசுவாக இருக்கும்பட்சத்தில் அதை அழித்துவிடும் சம்பவங்கள் நடக்கின்றன. இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பிற மாநிலங்களிலிருந்து மணப் பெண்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

எனவே, சமகாலத்தின் நீதிக் கதை இப்படி இருக்கலாம்: உங்கள் மகள்கள் விஷயத்தில் அக்கறை காட்டுங்கள். இல்லையென்றால் உங்கள் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்!

- சோமினி சென்குப்தா, ‘தி எண்ட் ஆஃப் கர்மா: ஹோப் அண்ட் ஃபியூரி அமாங் இந்தியா’ஸ் யங்’ என்ற நூலின் ஆசிரியர்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

SCROLL FOR NEXT