தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் இடதுசாரி தீவிரவாத அமைப்பான ஃபார்க், நேற்று முதல் வரும் 30-ம் தேதி வரை, போர் நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுடன் கெரில்லாப் போர் நடத்திவரும் ஃபார்க் அமைப்பின் இந்த முடிவுக்குக் காரணம், அந்நாட்டில் இம்மாதம் 15-ம் தேதி நடைபெறும் தேர்தல்தான்.
1960- களில் அதிவேகத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில், பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமாக நடந்துகொண்ட கொலம்பிய அரசு, விவசாயிகளின் விளைநிலங்களைப் பிடுங்கிக்கொண்டு அவர்களை நகரங்களுக்கு விரட்டி யடித்தது. கடைநிலைத் தொழிலாளர்களாக அம்மக்கள் பிழைக்க நேர்ந்தது. சுமார் 4 லட்சம் குடும்பங்கள் தங்கள் சொந்த நிலங்களை இழந்து கூலித் தொழிலாளி களாகினர்.
இதையடுத்து, அரசுக்கு எதிராக ஆயுதத்தைத் தூக்கினர் ஃபார்க் புரட்சிப் படையினர். உலகின் பிற போராளிக் குழுக்கள் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகள் இவர்கள்மீதும் உள்ளன. அரசுக்கும் போராளிகளுக்கும் இடையிலான சண்டையில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந் துள்ளனர். இந்த நிலையில், துப்பாக்கிச் சத்தத்துக்கு ஃபார்க் அமைப்பினர் சற்று இடைவெளி விட்டுள்ளனர்.
அதிபர் தேர்தலில் வலதுசாரிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஆஸ்கர் இவான் ஜுலுகுவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த முடிவை ஃபார்க் அறிவித்துள்ளது. ஃபார்க் அமைப்புடன் தற்போதைய அதிபர் ஜுவான் மேனுவல் சாண்டோஸ் நடத்திவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகுறித்துத் தொடர்ந்து விமர்சித்துவருபவர் ஆஸ்கர் இவான். தனது பொறுப்பற்ற பேச்சுகளால் பதற்றத்தை அதிகரிக்கிறார் என்றும் அவரை ஃபார்க் அமைப்பினர் கடிந்துகொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு நில உரிமை வழங்குவது தொடர்பாக அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர், ஃபார்க் தரப்பில் ஏற்பட்டுள்ள சமாதான மனநிலையின் தொடர்ச்சியே இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தம் என்று கருதப்படுகிறது.