சிறப்புக் கட்டுரைகள்

மார்க்ஸ்: நிலைத்திருக்கும் பெயர்

எச்.பீர்முஹம்மது

உலகை விளக்குவதல்ல, உலகை மாற்றுவதே இப்போதைய பிரச்சினை என்றார் மார்க்ஸ்.

உலகின் புகழ்பெற்ற ஆளுமைகள் பலர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் லண்டன் ஹைகேட் கல்லறையில்தான் மார்க்ஸும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களால் தினமும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறது.

21 - ம் நூற்றாண்டின் உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. இந்தச் சூழலில் மார்க்ஸ் குறித்த மீள்பார்வை முக்கியமானது. உலகின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை அரசுகளுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் கம்யூனிச கோட்பாட்டின் ஸ்தாபகரான மார்க்ஸ் 1818 மே 5- ம் தேதி ஜெர்மனியின் ட்ரையர் நகரத்தில் ஒரு வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார். எல்லா அப்பாக்களுக்கும் இருப்பதை போன்றே தனது தொழிலில் மகனும் இறங்க வேண்டும் என்ற எண்ணம் அப்பாவுக்கு இருந்தது.

உலகை மாற்றுவதே தேவை

மார்க்ஸின் கனவு வேறாக இருந்தது. இளமைக் காலத்திலிருந்தே ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பெரும் ஆளுமைகளின் எழுத்துகளின் மீது அவருக்கு ஈர்ப்பு இருந்தது. குறிப்பாக ஷேக்ஸ்பியரின் கவிதைகள் மீது ஏற்பட்ட காதலால் கவிதைகளை எழுதிக் குவிப்பவராக மாறினார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது தத்துவமும் அரசியல் பொருளாதாரமும் தேடுகிற அறிவுத் தேடலின் வழியாக அவரது கவிதா ஆர்வமும் விரிவடைந்தது.

19 ஆம் நூற்றாண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரம் அறிவுத் தேடலைக் கொண்டதாக இருந்தது. அப்போது ஜெர்மனியில் புகழ்பெற்றிருந்த தத்துவவாதியான ஹெகல் என்பவரின் தாக்கம் பெர்லின் பல்கலைக்கழக மாணவர்களிடம் நிலைத்திருந்தது. இதற்காக இளம் ஹெகலியர்கள் என்னும் தனி அணியே அந்தப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டது. இவர்கள் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக தங்களுக்குள் விவாதித்துக்கொண்டனர்.

படிப்பு முடிந்ததும் ஒரு பத்திரிகையின் ஆசிரியராக மார்க்ஸ் பொறுப்பேற்றார். ஆட்சியாளர்களை விமர்சித்து துணிச்சலாக எழுதினார். தத்துவத்தையும் அரசியலையும் குறித்து விமர்சித்தார். காட்டில் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்த அப்பாவி மக்களை மன்னரின் அரசு கைது செய்ததைக் கண்டித்து எழுதினார். இதனால் ஆட்சியாளர்களின் கோபத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. அரசின் அடக்குமுறையால் பத்திரிகை மூடப்பட்டது. பிறகு மார்க்ஸ் முழுநேரமும் தீவிர வாசிப்பிலும் ஆய்விலும் ஈடுபட்டார்.

மார்க்ஸின் சமூகச் சிந்தனை வித்தியாசமானது. தொலைநோக்குப் பார்வை கொண்டது. “இதுவரை யிலும் உருவான தத்துவங்கள் எல்லாம் உலகை விளக்குகின்றன. ஆனால், உலகை எவ்வாறு மாற்று வது என்பதே இப்போதைய பிரச்சினை “ என்றார் அவர். தத்துவம் பற்றிய மார்க்சின் இந்த நிலைப்பாடு உலகம் முழுவதும் புரட்சிகள் ஏற்படக் காரணமாக அமைந்தது. வெறுமனே கோட்பாடுகளாக உலகின் இயக்கத் தை விஞ்ஞான பூர்வமாக விளக்குவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை மார்க்ஸ் நன்றாக அறிந்திருந்தார்.

கம்யூனிஸ்ட் அறிக்கை

மார்க்ஸின் வாழ்வில் 1844 ஆகஸ்டு மாதத்தில் மிக முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. நட்புக்கு இலக்கணமான ஏங்கல்ஸ் மார்க்ஸ் சந்திப்பு அப்போதுதான் நிகழ்ந்தது. மார்க்சுக்கு இணையான மேதமை மிக்கவர் ஏங்கல்ஸ். இருவரும் இணைந்து செய்த பணிகள் ஐரோப்பிய அரசியல், தத்துவம், வரலாறு ஆகிய துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஏங்கல்ஸ் பொருளாதாரம் மற்றும் இயற்கை குறித்த ஆய்வுகளில் சிறந்தவராக இருந்தார். பல்வேறு பத்திரிகைகளில் அவர்கள் எழுதினார்கள். போராட்டங்களிலும் பங்கெடுத்தனர். அவர்களின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது.

அன்றைய இங்கிலாந்தில் நியாயவாதிகள் சங்கம் இருந்தது. அவர்கள் மார்க்சையும் ஏங்கல்சையும் தங்கள் சங்கத்தில் இணைய வேண்டினர். அவர்கள்தான் பின்னர் தங்களின் பெயரைப் பொதுவுடைமை சங்கம் என மாற்றிக்கொண்டனர். தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும் அவர்கள் அழைத்துக் கொண்டனர். இந்த அமைப்பின் தாக்கம் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. இந்த அமைப்புக் காக மார்க்ஸும் , ஏங்கல்ஸும் இணைந்து ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ எனும் நூலை வெளியிட்டனர். “இதுவரை நடந்த போராட்டங்களின் வரலாறு அனைத்தும் வர்க்க போராட்டங்களின் வரலாறே” என்ற அறிவிப்போடு இந்த நூல் வெளியானது.

மறையாத மார்க்ஸ்

மூலதனம் எனும் பெயரில் வெளியான புத்தகத் தொகுதியின் முதல்பாகத்தை மார்க்ஸ் வெளியிட்டார். மார்க்ஸ் அதில் வெளிப்படுத்திய உலகை மாற்றும் கனவை 1917- ல் லெனின் தலைமையில் ரஷ்யாவில் நடந்த புரட்சி நிஜமாக்கியது. அதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் புரட்சிகள் நடைபெற்றன. அதன் மூலம் ஏகாதிபத்தியம், சோசலிசம், மூன்றாம் உலகம் என்று மூன்று பிரிவாக உலக நாடுகள் மாறின. ஏகாதிபத்திய அரசுகளின் கொடூர மனம் காரணமாக கடந்த நூற்றாண்டில் பெரும் மனித அழிவுகளும் நடந்தேறின.

எல்லா தத்துவ கோட்பாடுகளும் ஒரு கட்டத்தில் தேக்கநிலையைச் சந்திப்பது போன்று மார்க்ஸின் கோட்பாடுகளும் இந்த நூற்றாண்டின் இறுதியில் நெருக்கடியைச் சந்தித்தன. ரஷ்யா உட்பட பல சோசலிச நாடுகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மார்க்ஸின் தத்துவம் சுரண்டலை எதிர்த்த மனிதகுல விடுதலையை முன்வைத்த பயணமாக இருந்தாலும், அரசுகள் அதனை நடைமுறைப்படுத்துவதில் தோல்வி அடைந்தன அதுதான் இன்றைய முதலாளித்துவம் உலக அளவில் நிலைத்து நிற்கக் காரணம்.

19 -ம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆளுமையான மார்க்ஸின் வாழ்நாளில் இரண்டு சம்பவங்கள் அவரைப் பெரிதும் பாதித்தன. முதலாவது அவரின் மனைவி ஜென்னியின் மரணம். இரண்டாவது அவரின் மூத்தமகளின் மரணம். நிலைகுலைந்திருந்த மார்க்ஸ் 1883 மார்ச் 14-ல் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே தனது சிந்தனையை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார்.

அவரது இரங்கல் கூட்டத்தில் ஏங்கல்ஸ் ஆற்றிய உரையில் “மனிதகுலம் இருக்கும் வரை மார்க்சின் பெயர் நிலைத்து நிற்கும்” என்றார். ஏங்கல்ஸின் வார்த்தைகள் உண்மையானவை என்பதை இன்றைய உலகம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

எச். பீர்முஹம்மது, எழுத்தாளர்

தொடர்புக்கு: mohammed.peer1@gmail.com

SCROLL FOR NEXT