சிறப்புக் கட்டுரைகள்

பொறியியல் கல்வியை ஏன் மேம்படுத்த வேண்டும்?

மு.இராமனாதன்

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரி அனுமதி ஒரு திருவிழாவைப் போல் நடக்கிறது. இந்த ஆண்டும் அப்படித்தான் நடந்தது. மொத்தம் 440 கல்லூரிகள் களத்தில் இருந்தன. 1,51,871 இடங்கள். முதலில் நான்கு சுற்றுகளும், கால அவகாசம் முடிந்த பின்னர், ஒரு துணைச் சுற்றுமாக, ஐந்து சுற்றுக் கலந்தாய்வு நடந்தது. முடிவில் 95,069 இடங்களுக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். 56,802 இடங்கள் காலியாக இருக்கும். காலியிடங்கள் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைவுதான். இரண்டு காரணங்கள். 1.மொத்த இடங்கள் குறைக்கப்பட்டன; 2.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடும் உதவித்தொகையும் வழங்கப்பட்டதில் 7,876 இடங்கள் நிறைந்தன.

எனினும், இந்த ஆண்டும் காலி இடங்கள் கணிசமானவைதான். கல்லூரிகள் அதிகம், வேலைவாய்ப்புகள் குறைவு என்பது எல்லோரும் சொல்லும் காரணம். மாணவர்கள் பலரின் தரம் திருப்திகரமாக இல்லை என்பது பொறியியல் நிறுவனங்கள் சொல்லும் இன்னொரு காரணம். இவற்றை நாம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாம்.

காளான்களும் கல்லூரிகளும்

இந்தியாவின் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (AICTE) மேற்பார்வையின் கீழ் வருபவை. பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்குமான அதிகாரம் 1986-ல் இந்தத் தொழில்நுட்பக் குழுமத்துக்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில்தான் சுயநிதிக் கல்லூரிகள் முளைக்கலாயின. புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான குறைந்தபட்சத் தேவைகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் குழுமம் அதைக் கறாராகச் செய்யவில்லை.

தொண்ணூறுகளின் தாராளமயத்துக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறையிலும் (IT) அயல் பணி சேவையிலும் (BPO) வேலைவாய்ப்புகள் பெருகின. பொறியியல் கல்லூரிகளில் எந்தத் துறையில் படித்திருந்தாலும் அவர்களை ஐ.டி. இழுத்துக்கொண்டது. பொறியியல் கல்லூரி என்கிற கடையில் நன்றாக வியாபாரம் நடப்பதைப் பல வணிகர்கள் தெரிந்துகொண்டனர்.

சுய திருத்தம்

‘சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைகிறதே?’ என்கிற கேள்விக்கு, ஒரு பழம்பெரும் கல்லூரியின் தாளாளர், ‘ஒரு சுய திருத்தம் (self correction) நடக்கிறது, இது நல்லதுதான்’ என்று பதிலளித்திருக்கிறார். பொறியியல் கல்விக் களம், சுய திருத்தம் செய்துகொள்ளும் என்று காத்திருந்தால், அதற்கிடையில் தரம் குறைந்த கல்லூரிகளில் படித்தவர்கள் தங்கள் எதிர்காலத்தையே இழப்பார்கள். ஆகவே, சுய திருத்தத்துக்குக் காத்திருக்காமல், தொழில்நுட்பக் குழுமம், எல்லாக் கல்லூரிகளும் குறைந்தபட்சத் தரத்தில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பாடத்திட்டம்

இன்னொரு எதிர்வினை ஒரு முன்னாள் துணைவேந்தரிடமிருந்து வந்தது. ‘நமது பொறியியல் பாடத்திட்டங்கள் பழமையானவை, அவற்றைப் புதுப்பிக்க வேண்டும்’ என்று சொல்லியிருந்தார் துணைவேந்தர். இத்துடன் பயிற்றுவிக்கும் முறையையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் குறை சுயநிதிக் கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, எல்லாப் பொறியியல் கல்லூரிகளுக்கும் பொதுவானது. மாறிவரும் பொறியியல் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் நமது பாடங்கள் மேம்படுத்தப்படுவதில்லை. இந்த இடத்தில் என்னுடைய அனுபவம் ஒன்றைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.

ஒரு பொறியியல் கல்லூரியின் பொதுவியல் துறை மாணவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. கான்கிரீட்டில் பதிக்கப்படும் ஊடுகம்பிகளைப் பற்றிய உரையாடல். சாதாரணமாக இரண்டு கம்பிகள் அடுத்தடுத்து வரும்போது, ஒரு கம்பியின் மீது அடுத்த கம்பியைக் குறிப்பிட்ட நீளத்துக்கு அணைத்துக் கட்டுவார்கள். இடப் பற்றாக்குறையுள்ள இடங்களில் ஒன்றன் மீது ஒன்றை அணைத்துக் கட்ட முடியாது. ஆகவே, இரு கம்பிகளிலும் பிரிகளை (thread) உருவாக்கி, கப்ளர் (coupler) எனப்படும் சிறிய உருளையால் இணைத்துவிடுவார்கள். பிளம்பர்கள் குழாய்களை இணைக்கப் பயன்படுத்தும் உருளைக்கும் கப்ளர் என்றுதான் பெயர். நான் சொல்லிக்கொண்டிருந்தேன். மாணவர்களின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. பரவாயில்லை. ஆனால், ஆசிரியர்களில் பலருங்கூட கப்ளரைப் பற்றி அப்போது அறிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் இந்தியாவிலேயே இது 20 ஆண்டு காலத்துக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், அந்த ஆசிரியர்களின் கவனத்துக்கு அது வரவில்லை. நமது நாட்டில் தொழில் துறையும் கல்வித் துறையும் ஒன்றோடொன்று உரையாடிக்கொள்வதில்லை. ஆசிரியர்களுக்கு அதைச் செய்வதற்கான ஊக்குவிப்பு இருப்பதாகவும் தெரியவில்லை.

ஆய்வின் சிறப்பு

அடுத்ததாக, சர்வதேசத் தளத்தில் ஆய்வுப்புலத்தில் நடப்பவை பற்றியும் நமது கல்வியாளர்களில் பலர் அக்கறை கொள்வதில்லை. சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர், 36 ஆண்டுப் பணிக்காலத்தில் எழுதியிருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெறும் 12. இதில் சர்வதேச ஆய்விதழ்களில் வெளியானவை எத்தனை என்று தெரியவில்லை. மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆரம்பகால ஆசிரியர்கள் இதைக் காட்டிலும் அதிகமாக எழுதியிருப்பார்கள். அவர்கள் தங்கள் பணியைத் தக்க வைத்துக்கொள்வதற்குத் தொடர்ந்து ஆய்வில் ஈடுபடுவதும், ஆய்வு முடிவுகளைச் சர்வதேச ஆய்விதழ்களில் பதிப்பிப்பதும் கட்டாயம். நமது ஆசிரியர்களுக்கு அப்படியான நிர்ப்பந்தங்கள் எதுவுமில்லை. ஆசிரியர்கள் தொடர்ச்சியாகத் தொழில் துறையோடும் ஆய்வுப் புலத்தோடும் தொடர்பில் இருந்தால் மட்டுமே அவர்களுக்குத் தற்போதுள்ள பாடத்திட்டத்தின் போதாமை விளங்கும். அதைப் புதுக்கிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்வார்கள். ஆனால், இங்கே பல சுயநிதிக் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு முறையான ஊதியமே வழங்கப்படுவதில்லை. அது ரகசியமும் இல்லை. இதைத் தொழில்நுட்பக் குழுமம் கண்டுகொள்வதும் இல்லை.

இந்த நிலை மாற வேண்டும். கல்லூரிகளின் உள்கட்டமைப்பையும் ஆசிரியர்களின் தகுதியையும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தையும் தொழில்நுட்பக் குழுமம் சமரசமின்றிப் பரிசோதிக்க வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ந்து ஆய்வுப் புலத்தில் பங்காற்றிக்கொண்டிருக்க வேண்டும். கல்லூரிகள் தொழில் துறையோடு உறவாடிக்கொண்டே இருக்க வேண்டும். பாடத்திட்டத்தையும் பயிற்றுவிக்கும் முறையையும் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது, நமது பொறியியல் கல்லூரிகளிலிருந்து வெளியே வரும் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு விளங்குவார்கள். தொழில் துறையும் கல்விப் புலமும் அவர்களை வரவேற்கும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

SCROLL FOR NEXT