156 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டனையியல் சட்டத்தை மீள்பார்வை செய்ய வேண்டும்
இந்தியச் சட்டங்களில் பெரும்பாலானவை பிரிட்டிஷ் காலனியாட்சியின் மிச்சங்கள். சட்டங்களைத் தொகுக்கும் பேரியக்கம் இந்தியாவைத் தன்னுடைய சோதனைக் கூடமாகப் பயன்படுத்திக்கொண்டது. இந்திய தண்டனையியல் சட்டம் (1860), இந்திய சாட்சியச் சட்டம் (1872), இந்திய ஒப்பந்தச் சட்டம் (1872), சொத்துப் பரிமாற்றச் சட்டம் (1882), பொது உட்பிரிவுகள் சட்டம் (1897), சிவில் நடைமுறைச் சட்டத் தொகுப்பு (1908 - 1973-ல் திருத்தியமைக்கப்பட்டது), குற்றவியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு (1898) ஆகியவை அப்படித்தான் தோன்றின.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் இரண்டு பிரிவுகள் குறித்து சமீபகாலத்தில் அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஓரினச் சேர்க்கையைச் சட்ட விரோதம் என்று கூறும் 377-வது பிரிவு தற்போது மீண்டும் பேசப்படுகிறது. இந்தச் சட்டம் அரசியல் சட்டப்படி செல்லுபடியாகக்கூடியதுதான் என்று தான் கூறியதற்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்திருக்கிறது. ‘இயற்கைக்கு மாறான உடலுறவு’ என்ற வார்த்தைதான் இந்திய தண்டனையியல் சட்டத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மேட்டிமை ஊடுருவியிருப்பதை உணர்த்துகிறது.
எது தேச விரோதம்?
மற்றொன்று, தேச விரோதம் என்று குற்றஞ்சாட்டும் பிரிவு124ஏ. வஹாபி இயக்கத்துக்கு எதிராகப் பயன்படுத்த முதலில் உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவுதான் மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர், அன்னிபெசன்ட் மற்றும் ஏராளமான இந்தியத் தலைவர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில் ஜே.என்.யு. மாணவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
விக்டோரியா மகாராணி காலத்து அறமும், ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசு விட்டுச்சென்ற 377, 124ஏ ஆகிய இரு பிரிவுகளும் ஜனநாயக, அரசியல் சட்டப்படியான குடியரசு என்ற இந்திய அரசுக்குச் சிறிதும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. பாலுறவு தொடர்பாக பிரிட்டிஷ் அரச பீடம் எதைத் தவறென்று நினைத்ததோ அதுவே சட்டமாகியிருப்பதை 377-வது பிரிவு உணர்த்துகிறது. இதுதான் இந்திய தண்டனையியலில் 497-வது பிரிவுக்கும் அடிப்படை.
124ஏ பிரிவோ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் இடையிலான ஆண்டான் - அடிமை உறவின் அடிப்படையில் இயற்றப்பட்டது. அரசுக்கு எதிராக அதிருப்தியை வளர்க்கக் கூடாது என்பதி லிருந்து, இந்தியர்கள் எப்போதும் பிரிட்டிஷ் ஆட்சியின் மீது ராஜபக்தியும் விசுவாசமும் அன்பும் கொண்டவர் களாகவே இருக்க வேண்டும் என்ற உள்நோக்கம் புரிகிறது. பேச்சு மூலமாகப் புரியப்படும் குற்றங்கள் என்று வேறு இரண்டை வகைப்படுத்தியிருப்பதும் இதே தர்க்கவாதத்தின் அடிப்படையில்தான்.
பிரித்தாளும் உத்தி
இந்தியாவில் வகுப்புக் கலவரங்கள் மூளத் தொடங்கிய பிறகு, 1920-களில் உருவாக்கப்பட்ட 295ஏ பிரிவு, எந்தப் பிரிவைச் சேர்ந்த மக்களுடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது குற்றம் என்கிறது. பிரிவு 153ஏ, இருவேறு சமூகங்களுக்கு இடையில் பகைமையை வளர்ப்பது குற்றம் என்கிறது. இது இந்தியச் சமூகத்தை எளிதில் அடையாளம் காணக்கூடிய இருவேறு குழுக்களாகப் பிரித்து ஆளுவது என்ற உத்தியை விளக்குகிறது. காலனியாக இந்தியா நீடிக்கும்வரையில் இவ்விரு குழுக்களும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கவே முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது.
காலனியாதிக்கப் பின்னணியில் இயற்றப்பட்ட இந்தச் சட்டங்களும் அதற்கு முன்னர் இயற்றப்பட்ட சட்டங்களும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருவதால், நீதிமன்றங்களும் அவற்றின் அடிப்படையில் உத்தரவிட நேர்கின்றன. இந்திய தண்டனையியல் சட்டத்திலிருந்து இன்னமும் நீக்காதபடியால் இந்தச் சட்டங்கள் அடிப்படையிலும், அதே சமயம், ஜனநாயகக் குடியரசாகிவிட்ட நாட்டின் இப்போதைய நிலைமைக்கு ஏற்பவும் சிலபல சமரசங்களைச் செய்து தீர்ப்பளிக்க வேண்டிய நிலை நீதிமன்றங்களுக்கு ஏற்படுகிறது. தேச விரோதம் என்ற சட்டப் பிரிவு செல்லும் என்று கூறிவிட்டு, சமீபத்தில் பொது அமைதியைக் குலைத்ததாகக் கூறப்படும் சம்பவங்களில், எந்த அளவுக்கு இந்தச் சட்டம் பொருத்தமோ அந்த அளவுக்கேற்ப ஆணையிட நேர்ந்திருக்கிறது உச்ச நீதிமன்றத்துக்கு. 124ஏ என்ற பிரிவைக் காவல் துறையும் கீழமை நீதிமன்றங்களும் முடிந்த அளவுக்குத் துஷ்பிரயோகம் செய்வதை உச்ச நீதிமன்றத்தால் தடுக்க முடிவதில்லை.
மத உணர்வுகளைப் புண்படுத்துவது தொடர்பான 295ஏ செல்லும் என்று ஏற்றுக்கொண்டுவிட்டு, வேண்டுமென்றே அப்படிச் செய்யப்பட்டதா என்று ஆராய்ந்து, அதனால் பொது அமைதி எந்த அளவுக்குக் குலைந்தது என்றும் பார்த்து உத்தரவுகளைப் பிறப்பிக்க நேர்கிறது. தேசப் பிரிவினை என்ற சட்டப் பிரிவைப் போலவே 295ஏ பிரிவும் விரிவான விளக்கங்களுக்கும் மறுப்புகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.
2014 தேர்தலின்போது, வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளைத் தடை செய்ய உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டது. அப்படிச் செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அத்தகைய பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க இப்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்றும் கூறப்பட்டது. வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியது. மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது, விரோதத்தை வளர்ப்பது, வலுவற்றவர்கள் மீது வன்செயல்களைப் பிரயோகிக்கத் துணை செய்வது என்று, சித்தாந்தவாதிகளும் வெளிநாடுகளின் அரசியல்சட்ட நீதிமன்றங்களும் அளித்த விளக்கங்களின் அடிப்படையில், உச்ச நீதிமன்றமும் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளுக்கு விளக்கம் அளித்தது.
இந்த விளக்கம் மெச்சத் தக்க வகையில் இருக்கிறது. ஆனால், 153ஏ பிரிவில் உள்ள சட்ட வாசகங்கள், பூசலில் ஈடுபடும் இரு குழுக்களை மோதிக்கொள்ளாமல் விலக்கி வைக்கும்படி கூறினாலும், சட்டப்படியாக வாதிடக்கூடிய வாய்ப்புகளுக்கு இடமளிக்கிறது. மோதல் போக்கு தணியாமல் கனல் வீசக்கூடிய வகையில் தொடரவும் வழிசெய்கிறது. அதிருப்தி ஏற்படும் வகையில் பேசுவதைத் தடுக்க 153ஏ போதிய அளவில் வழி செய்யவில்லை.
மீள்பார்வையின் அவசியம்
இது தொடர்பான ஆய்வு 2 விஷயங்களை வெளிக்கொணர்கிறது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரச்சினைகளை அங்குமிங்கும் திருத்தி ஒட்டுமொத்தமாகச் சீராக்கிவிட முடியாது. (நிர்பயா பாலியல் வல்லுறவுச் சம்பவத்துக்குப் பிறகு, வர்மா கமிட்டி அதை முயன்று பார்த்தது). நீதித் துறைக்கு நல்லெண்ணம் இருந்தாலும், இந்த மாற்றங்களை அதனால் மட்டும் செய்துவிட முடியாது. இந்திய நாடாளுமன்றம்தான் 156 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டனையியல் சட்டத்தை மீள்பார்வை செய்து, ஒட்டுமொத்தமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப் புக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தனிநபர்களின் சுதந்திரம், பேச்சு - மனசாட்சிப் படி செயல்படும் சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்று அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும். முறைதவறிய ஒழுக்கக் கேடுகள், ஊழல், ஆபாசம், தனிநபர் உரிமையைவிடத் தனது மேலாதிக்கமே பெரிது என்று கூறும் ஆதிக்க சாதியினர், ஆடவர் - மகளிர் தொடர்பாக காலம்காலமாகத் தொடரும் பழமையான கண்ணோட்டம் ஆகிய அனைத்தும் தொடர்பாகப் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
கொலை என்பதற்கான தெளிவான, எளிமையான, அறிவுபூர்வமான விளக்கத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்ள விரும்பினாலும், அதை வடிவமைத்தது காலனியாதிக்கக் காலத்தின்போது என்பதால், இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல பிரிவுகள் காலமாற்றத்துக்குப் பொருந்திய வகையில் இல்லை. தார்மிக அடிப்படையில் பார்த்தாலும் செயலாற்றல் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இந்திய தண்டனையியல் சட்டமானது உழைத்து ஓய்ந்துவிட்டது. அது இப்போதைய மாற்றங்களுக்கு உற்றதாக இல்லை. எனவே, அதை மாற்றுவதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
- கவுதம் பாட்டியா, டெல்லி வழக்கறிஞர்.
© தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி