சிறப்புக் கட்டுரைகள்

திரைகளால் தாமதமாகும் குழந்தைகளின் திறன் வளர்ச்சி

ச.கோபாலகிருஷ்ணன்

இன்று யூடியூப் சேனல்கள் நடத்துபவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பதின்ம வயதைக்கூடத் தொட்டிராத குழந்தைகள் பலர் யூடியூப் சேனல்களை நடத்துகிறார்கள். அவற்றில் தாமே தயாரித்த காணொளிகளை வெளியிடுகிறார்கள். சிறுவர்களாக இருக்கும்போதே காணொளி உருவாக்குதல், அவற்றை இணையத்தில் பதிவேற்றுவதற்கான தொழில்நுட்ப விஷயங்களைத் தாமாகவே கற்றுக்கொண்டு தேர்ச்சிபெறுதல், ஆகியவை நம் அடுத்த தலைமுறையினரின் அறிவு வளர்ச்சியின் வேகம் குறித்து நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன. அதே நேரம், இப்படி யூடியூப் சேனல்களைத் தொடங்கி நடத்திவரும் சிறுவர்கள் பலரும் குறைந்தபட்சம் ஐந்து வயதுக்குப் பிறகே காணொளிகளைப் பார்க்கவும் உருவாக்கவும் உதவும் திறன்பேசிகளுக்கும் (ஸ்மார்ட்போன்களுக்கும்) இணையதளங்களுக்கும் பழகத் தொடங்கினார்கள்.

2014-15 வாக்கில்தான், இணையத்தை அனைவரின் கைகளுக்கும் எளிதாகக் கொண்டுசென்ற திறன்பேசிகளும், மலிவுவிலை கைபேசி ‘டேட்டா பிளான்’களும் பரவலாகின. இந்த அதிவேக இணையப் பரவலாக்கத்துக்குப் பிறகு, பிறந்த குழந்தைகள் தவழ்தல், உட்கார்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளும் பருவத்திலிருந்தே குறிப்பாக பேசத் தொடங்குவதற்கு முன்பே திறன்பேசி, மடிக்கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் காணொளிகளைப் பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர். சோறு ஊட்டுவதற்காகவும் அழுகையிலிருந்தோ பிடிவாதத்திலிருந்தோ திசைதிருப்புவதற்காகவும் நாம் வேறு வேலைகளில் கவனம் செலுத்துவதற்காகவும் பால் மணம் மாறாக் குழந்தைகளுக்குத் திரைகளை அறிமுகப்படுத்திவிடுகிறோம்.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக நேரம் இப்படித் திரைகளுக்கு முன் அமர்ந்து நேரம் செலவிடுவதால் அவர்களின் பேச்சு, கவனித்தல், தகவல்களை உள்வாங்குதல் ஆகிய பல்வேறு திறன்களின் வளர்ச்சி தாமதமாவதாக உளவியல் நிபுணர்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும் எச்சரித்துவருகிறார்கள். இப்படித் தொலைக்காட்சி, மடிக்கணினி, கைபேசி ஆகிய கருவிகளின் திரைகளில் காணொளிகளைப் பார்த்தபடி குழந்தைகள் செலவழிக்கும் நேரத்துக்குத் திரை நேரம் (Screen Time) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரை நேரம் அதிகரிப்பதற்கும் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் தாமதமாவதற்கும் நேரடித் தொடர்பிருப்பது உலக அளவில் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று, குழந்தைகளின் வளர்ச்சியில் திரை நேரத்தின் தாக்கம் தொடர்பான ஆய்வைத் தமிழகத்தின் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் நடத்தியுள்ளது. இந்த ஆய்வை நடத்தியவர்கள் சென்னையில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் மருத்துவம், மனநலன், பேச்சு, மொழி மற்றும் கேட்புத் திறன் சிகிச்சை ஆகிய துறைகளில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்கள். ‘அதீதத் திரை நேரத்தின் பரவலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாவதில் அதற்குள்ள தொடர்பும்’ (Prevalence of excessive screen time and its association with developmental delay in children aged <5 years) என்னும் தலைப்பிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை ‘Plos One’ இதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவரும் ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியருமான மருத்துவர் சம்யா வரதராஜன், ஆய்வின் பின்னணி குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் பேசினார். “2019-ல் உலக சுகாதார நிறுவனம், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எவ்வளவு நேரம் கைபேசி, தொலைக்காட்சித் திரைகளைக் காண்பதில் செலவிடலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எந்த விதமான திரையையும் காண அனுமதிக்கக் கூடாது என்றும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வரை பெற்றோர் கண்காணிப்புடன் திரைகளைக் காண அனுமதிக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில் வளரும் நாடுகளில் குழந்தைகள் எவ்வளவு திரை நேரம் செலவிடுகிறார்கள் என்பது குறித்த ஆய்வுகளே நடத்தப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனால்தான் நாங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டோம்.

ஆறு மாதத்திலிருந்து ஐந்து வயது வரையிலான குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அவர்களின் பெற்றோர்களிடம் குழந்தைகள் எவ்வளவு நேரம் திரையைப் பார்ப்பதற்குச் செலவழிக்கிறார்கள், தனியாகப் பார்க்கிறார்களா, பெற்றோரின் கண்காணிப்புடன் பார்க்கிறார்களா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டோம். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கணக்கிட்டதில் எங்கள் ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் 70% அதீதத் திரை நேரம் செலவிடுகிறவர்களாகவே இருந்தனர். இந்தக் கணக்கீட்டுக்குப் பிறகு, பேச்சுத் திறன் நிபுணர்களை அழைத்துச் சென்று, எட்டு அளவுகோல்களின் அடிப்படையில் குழந்தைகளின் வளர்ச்சியை மதிப்பிட்டோம்.

இதன் மூலம் திரை நேரம் அதிகமாக ஆக மேற்கூறிய திறன்களின் வளர்ச்சி தாமதமாவதைக் கண்டறிய முடிந்தது. குறிப்பாக, அதிக நேரம் திரைகளைக் காண்பதில் செலவிட்ட குழந்தைகளின் மொழி, பேச்சுத் திறன் வளர்ச்சி தாமதமாவதை அதிக அளவில் காண முடிந்தது. அதேபோல் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொண்டு பதில் சொல்வதிலும் செயலாற்றுவதிலும் சிக்கல்கள் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்தக் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளுடன் பழகுவதிலும் சிக்கல்கள் இருப்பதையும் உணர முடிந்தது. இது 2019-ல் நடத்தப்பட்ட ஆய்வு. அதற்குப் பிறகு, கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆய்வைத் தொடர முடியவில்லை” என்கிறார் சம்யா.

ஊரடங்குக் காலத்தில், குழந்தைகள் முன்பைவிட அதிக நேரம் வீட்டில் முடங்கியிருந்ததால் அவர்களின் திரை நேரமும் அதனால் விளையக்கூடிய பிரச்சினைகளும் பல மடங்கு அதிகரித்திருப்பதற்கான சாத்தியம் அதிகம். ‘இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைபேசி, மடிக்கணினி, கணினித் திரைகளுக்கு முன் நேரம் செலவிடவே கூடாது. 2-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஒரு மணி நேரம் வரை செலவழிக்கலாம். அதுவும் பெற்றோர் கண்காணிப்புடன் நிகழ்வது அவசியமானது.’ இதுவே இந்த ஆய்வறிக்கை முன்வைக்கும் பரிந்துரைகள்.

தனிக் குடும்ப அமைப்பில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில், குழந்தைகளிடம் கைபேசிகளைக் கொடுத்து, காணொளிகளைக் காண வைப்பது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து கவனப்படுத்துகிறார் புதுக்கோட்டை மாவட்டத்தின் மாவட்ட மனநலத் திட்ட அலுவலரும் மருத்துவருமான கார்த்திக் தெய்வநாயகம்.‘‘மனித சமூகம் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுள்ளது.

அதுபோன்றதுதான் இன்றைய டிஜிட்டல் யுகத்தின் மாற்றங்களும். அவை அனைத்தையும் எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்தபோது, குழந்தையுடன் நேரம் செலவழிக்க யாராவது இருப்பார்கள். இன்று தனிக் குடும்ப அமைப்பில் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போவதால், குழந்தையுடன் நேரம் செலவிடுவது கடினமாகியிருக்கிறது. வேலைக்குப் போகிற பெண்கள், வீட்டையும் குழந்தையையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்புகளையும் சுமக்க வேண்டியிருக்கிறது. ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

அதன் மூலம் இருவரும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை உறுதிப்படுத்த முடியும். குழந்தைப் பருவத்தில்தான் மூளை வளர்ச்சி காத்திரமாக நிகழும். அந்த வளர்ச்சியின்போது நாம் தொடர்ந்து உள்ளீடுகளைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த உள்ளீடுகளிலிருந்து போதுமான அளவு தூண்டுதல் கிடைத்தால்தான் மூளை முழுமையாக வளரும். இன்றைய குழந்தைகளுக்கு அந்தத் தூண்டுதல் இல்லாமல் போனதற்கு இணையப் பெருக்கம் மட்டும் காரணமல்ல, பெற்றோர் அவர்களுடன் பேசுவதில்லை என்பதுதான் முதன்மையான காரணம்.

கரோனா சூழலில் வீட்டிலிருந்து அலுவலக வேலை பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால் பெற்றோருக்குமே திரை நேரம் முன்பைவிட அதிகரித்திருக்கிறது. இதனால் குழந்தைகளுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு மேலும் குறைந்திருக்கிறது. குழந்தைக்குச் சிறந்த கற்றல் நேரடியாக சக மனிதனிடம் பேசிக் கற்பதுதான். அது கிடைக்காதபோது, செயலூக்கத்துடன் இருக்கும் அவர்களின் மூளை கைபேசித் திரையை நாடுகிறது. எனவே, குழந்தைகளுடன் பேசும் நேரத்தைப் பெற்றோர் அதிகரிக்க வேண்டும். அல்லது தாத்தா, பாட்டி, உறவினர்கள் யாராவது குழந்தையுடன் அதிக நேரம் செலவழிப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்கிறார்.

- ச.கோபாலகிருஷ்ணன்,
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

SCROLL FOR NEXT