பொருளாதார ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் நல்ல நிலையில் இருக்கும் சமூகத்தவர்கள்கூட, தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்குமாறு கோரி வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் கவலை தருகிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, படிதார்கள் என்று அழைக்கப்படும் படேல்கள், ஆந்திரத்தின் காபு பிரிவினரைத் தொடர்ந்து இப்போது ஹரியாணாவில் ஜாட் வகுப்பினர் இடஒதுக்கீட்டுக்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திப் போராட்டங்கள் நடத்துவது தொடர்கதையாகிவருகிறது.
ஜாட் சமூகத்தவர்கள் ஹரியாணாவில் நில உடைமையாளர்கள், பொருளாதார வசதி படைத்தவர்கள், சமூக அடுக்கில் முதல் நிலையில் உள்ளவர்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் ஜாட் சமூகத்தவர்கள்தான் முன்னணித் தலைவர்களாகத் திகழ்கின்றனர். இச்சமூகத்தினர் ஏற்கெனவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தியவர்கள்தான். அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாது என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் நிராகரித்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2014 மார்ச் மாத அறிவிக்கை மூலம் தேசிய ஆணையத்தின் கருத்தை நிராகரித்தது. வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் அமலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீட்டுக்கும் மேற்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு செய்வதாக அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டது. இம்முடிவை 2015 மார்ச் மாதம் ஓர் உத்தரவு மூலம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு சமுதாயத்தின் சமூக-பொருளாதாரப் பின்தங்கிய நிலையை அவர்களுடைய சாதி மட்டுமே தீர்மானித்துவிட முடியாது என்று அத்தீர்ப்பில் கூறியிருந்தது.
ஜாட் சமூகத்தவரின் கோரிக்கைகள் சட்டபூர்வமாகவோ, அரசியல் சட்டப்படியோ ஏற்கத் தக்கவை அல்ல என்றாலும், பாஜக உட்பட பெரும் பாலான அரசியல் கட்சிகள் அவர்களுடைய கோரிக்கைகளைக் கருத் தொற்றுமை அடிப்படையில் ஆதரித்ததால், ஜாட் சமூகத்தவருக்கு தாங்கள் கேட்பது சரிதான் என்ற உணர்வும் துணிச்சலும் அதிகரித்தன.
மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகக் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டுத் திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. இதனால், சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கவனிக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண இடஒதுக்கீடு அவசியம் என்பதால், தங்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்துகின்றனர். பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடிகளுக்கும் சுமார் 65 ஆண்டுகளாகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25 ஆண்டுகளாகவும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. சமூகத்தின் மேல் அடுக்கிலும் கடைசி அடுக்கிலும் உள்ளவர்களிடையே காணப்படும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கம்.
குஜராத்தில் படேல் சமூகத்தவர் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டதற்கு உண்மையான காரணம், இடஒதுக்கீடு என்ற ஏற்பாட்டையே ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று விமர்சனம் எழுந்தது. ஆந்திரத்தில் காபு சமூகத்தவரும் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிப் போராட்டம் நடத்தியதுடன் ரயில் எரிப்பிலும் ஈடுபட்டனர். 1960-க்கு முன்னால் வரை அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில்தான் இடம்பெற்றிருந்தனர்.
இதுபோன்ற பிரச்சினைகள் எழுவதைத் தவிர்க்க, இடஒதுக்கீடு பற்றி மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும். உயர் வருவாய்ப் பிரிவினர் (கிரீமி லேயர்) என்பதற்குச் சரியான விளக்கம் அளிப்பதும் அவசியம். அதேபோல், ஒடுக்கப்பட்ட மக்களைக் கைதூக்கிவிடத்தான் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்பதை, முன்னேறிய சமூகங்கள் உணர்ந்து தேவையற்ற போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.