எம் ஜிஆர் தொடங்கி வடிவேலு வரைக்கும் பாட்டெழுதியவர் புலமைப்பித்தன் (1935-2021). ஏறக்குறைய அரை நூற்றாண்டுப் பயணம். 320-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள். 700-க்கும் அதிகமான பாடல்கள். எழுதத் தொடங்கிய காலத்திலேயே தனது முத்திரைகளைப் பதிக்கத் தொடங்கியவர். எம்ஜிஆரின் திரைப்படங்களில் ஆஸ்தானக் கவிஞர்களில் ஒருவராய் பெருமை பெற்றவர். என்றாலும், அவர் பாடல்கள் எழுதிக் குவித்த எண்பதுகள், இசையமைப்பாளர்களின் முகங்கள் சுவரொட்டிகளை நிறைத்ததோடு, அவர்களே அவ்வப்போது பாடலாசிரியர்களாகவும் உருமாறிய காலம். எனவே, புலமைப்பித்தனின் பாடல்கள் பிரபலமானாலும்கூட அவர் முகம் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படவில்லை. யூடியூபில்கூட அவரது மறைவுக்குப் பிறகே அவர் எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
புலமைப்பித்தனும் அவர் காலத்தின் மற்ற பாடலாசிரியர்களைப் போலப் பெரும்பாலும் காதலெனும் பெயரில் விரகத்தைத்தான் எழுத வேண்டியிருந்தது. ஆனால், அவர் கற்றறிந்த தமிழ் இலக்கியங்கள், கருத்தை உறுத்தாத வகையில் அதையெழுத வைத்தன. நடைதளர்ந்து போனதையும் கண்சிவந்து வாய் வெளுக்க நேர்ந்ததையும் சொல்லித் தீராத மோகத்தைக் குறிப்பால் உணர்த்திவிட அவரால் இயன்றது. கடவுள் மறுப்பாளரான அவர், ‘காமதேவன் ஆலயம்’, ‘தேவமல்லிகைப் பூவே’, ‘தேவசுகம்’ என்று தான் எழுதிய பாடல்களில் தேவலோகத்தைத் துணைக்கழைத்துக்கொண்டார். தவிர, ராஜலீலை, ராஜசுகம் என்ற சொற்களும் வாகாக வந்து விழுந்தன.
மெல்லிசைப் பாடல்களில் இசையை முந்தி யிருக்கச் செய்து தனது வரிகளை உள்ளொளித்துக் கொண்டவர் புலமைப்பித்தன். ‘கல்யாணத் தேனிலா’வில் ஆயிரம் நிலவுகளை வரவழைத்தார். தர்பாரி கானடா ராகத்துக்காகவும் சிக்கிக்கொண்ட இசைத்தட்டின் தாளலயத்துக்காகவும் மட்டுமின்றி, ‘தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா’ என்று சங்கத் தமிழையும் பக்தி இலக்கியத்தையும் ஒன்றாக நேர் நிறுத்திய கேள்விக்காகவும் அப்பாடல் நினைவுகூரப்படும். ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?’ பாடலில் காதலர்களின் இடைவெளியில்லாத தொலைபேசி உரையாடலில், நாயகன் மட்டுமல்ல, கேட்கிற நாமும் கண்சொக்கிப் போகிறோம். ‘உயர்தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது’, ‘சாதிமல்லி பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே’ என்று காதலியை வர்ணிக்கையிலும் சங்கத் தமிழை நினைவில் கொண்டவர்களாய் புலமைப்பித்தனின் பாடல் நாயகர்கள் இருந்தார்கள். புலவர் பட்டம் பெற்று தமிழாசிரியராகவும் பணிபுரிந்தவர் புலமைப்பித்தன். அதன் வெளிப்பாடுகள்தான் இந்த வரிகள்.
நாட்டுப்புறப் பாட்டுகளையொத்த திரைப்பாடல்களுக்கும் இலக்கியத் தகுதியைக் கொடுத்தவர் அவர். ‘பொங்கலுக்குச் செங்கரும்பு, பூவான பூங்கரும்பு, செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க’ (‘உச்சி வகுந்தெடுத்து’ பாடல்)’, ‘அள்ளிவெச்ச வேளையிலே முள்ளிருந்து கொட்டுதம்மா’ (‘பட்டுவண்ண ரோசாவாம்’) போன்ற பல வரிகள் அதற்கு உதாரணம். அருண்மொழியின் குரலில் ‘வாசக் கருவேப்பிலையே…’ நவீன நாட்டுப்புறப் பாட்டாகவே வயல்வெளிகளை நிறைத்துநிற்கிறது.
‘நீங்கள்தான் உண்மையிலேயே இசையமைத்தீர்களா என்று ரசிகர்களுக்குச் சந்தேகம் வராதா?’ என்று கேட்டு, அதை நிவர்த்திக்க ‘பச்ச மல சாமி ஒண்ணு’ என்று பாக்யராஜைப் பாடவைத்தவர், அந்தப் பாடலை எழுதிய புலமைப்பித்தன்தான். இரண்டாயிரத்துக்குப் பிறகும் ‘ஆத்தோரத்தில ஆலமரம் ஆலமரம்’, ‘எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்’, ‘ஆடி வா, பாடி வா’ என்று பிரபலமான பாடல்களை அவர் எழுதிக்கொண்டுதானிருந்தார். பாரதியின் இளமைக் காலத்து காசி நகர வாழ்க்கை ‘எதிலும் இங்கு இருப்பான், அவன் யாரோ’ என்று புலமைப்பித்தனின் வார்த்தைகளில்தான் திரைவடிவம் கண்டிருக்கிறது. நூறாண்டுகளுக்கு முந்தைய பாரதியின் காலத்தில் தன் தமிழைக் கொண்டுபோய் நிறுத்திக்காட்டியவர் அவர்.
எம்ஜிஆரின் காலத்தில் சட்டமன்ற மேலவையின் துணைத் தலைவராகவும் அரசவைக் கவிஞராகவும் பதவி வகித்த புலமைப்பித்தன், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். இரா.நெடுஞ்செழியனைப் போன்று திராவிடர் கழகத்திலிருந்து திமுகவுக்கும் அதன் பின்பு அதிமுகவுக்கும் வந்தவர்களை எம்ஜிஆர் போலவே ஜெயலலிதாவும் தனிமதிப்புடன் நடத்தியதற்குப் புலமைப்பித்தனுக்கு அளிக்கப்பட்ட அவைத்தலைவர் பதவி ஓர் உதாரணம்.
பாரதிதாசனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடியவர் புலமைப்பித்தன். பெரியாரைக் குறித்து அவர் எழுதிய ‘அள்ளற் பழுத்த அழகு முகத்தின்’ என்ற கவிதை, பாரதிதாசனின் ‘தொண்டுசெய்து பழுத்த பழம்’ போலவே மேடைகளில் முழங்கப்பட்ட காலம் ஒன்றுண்டு. 1999 மக்களவைத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த பிரச்சார மேடைகளில் கி.வீரமணியுடன் புலமைப்பித்தனும் கலந்துகொண்டு பேசினார். கட்சிப் பதவிகளும் அரசியல் தொடர்புகளும் அவரது திரைவாய்ப்புகளுக்குத் துணையாய் அமைந்ததாகத் தெரியவில்லை. சொந்த வாழ்க்கைக்கும்கூட. வீட்டை அடகுவைத்து பெற்ற கடனைக் கட்ட முடியாமல் திணறிய அவருக்கு ஜெயலலிதா உதவினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பான அதிமுக உட்பகை மறந்து ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதே புலமைப்பித்தனின் விருப்பமாக இருந்தது. தலைமைக்குப் பின்னின்று உதவியவர்களைக் குறித்த மிகைமதிப்பீடுகளும் அவருக்கு இல்லை. இன்று கட்சியை ஒருங்கிணைக்கும் இரட்டைத் தலைமையின் மீதும் அவருக்குச் சாய்வுநிலைகள் இல்லை. அதிமுக தொண்டர்களின் மனநிலையை அவர் தெளிவாகப் பிரதிபலித்துச் சென்றுள்ளார். இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும் அதைத் தலைமையேற்று நடத்தியவர்களின் மீதும் தனிப்பாசம் காட்டியவர் புலமைப்பித்தன்.
‘அக்கினிப் பிரவேசம்’, ‘ராஜராஜேஸ்வரி’, ‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். ‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ அவரது சொந்தத் தயாரிப்பும்கூட. எனினும் ‘ஆட்டோ ராஜா’, ‘அழகன்’, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ போன்று மிகச் சில படங்களிலேயே அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆயிரத்துக்கும் குறைவான பாடல்களையே அவர் எழுதியிருந்தாலும் அவற்றில் கணிசமானவை தினந்தோறும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சென்னை எல்லைக்குள் சிறுதூறல் விழுந்தாலும் பண்பலை வானொலிகளில் புலமைப்பித்தனின் ‘மழை வருது மழை வருது குடை கொண்டு வா’ பாடல்தான் கேட்கிறது.
‘மழைபோல் நீயே பொழிந்தாய் தேனே...’
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarsan.s@hindutamil.co.in
தகவல்கள் உதவி: திரைப்பாடல் ஆய்வாளர் பொன்.செல்லமுத்து