வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கு சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள ஊராளி பழங்குடி இனத்தைச் சார்ந்த முதியவர் திருக்கன் கூறிய பதில் “பாங்காடு ஆடு, வீடு இவ்வளவுதான் சாமி வாழ்க்கை”.
மற்றுமொரு பழங்குடிப் பெண் புட்டியின் பதில், “எங்கே இருந்தாலும் கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு நிம்மதியா இருந்தாபோதும் சாமி. பிறகு சாவு வந்தால் போக வேண்டியதுதான் சாமி”. இன்னுமோர் ஊராளி பெரியவர் சித்தன் கூறியது, “ரக்ரியும் ராகிக் களியும் தானுங்க வாழ்க்கை”. ரக்ரி என்றால் இவர்கள் மொழியில் கீரை என்று பொருள். வாழ்வைப் பற்றிய இவர்களின் சிந்தனைகள் மிகவும் எளிமையானவை, எதார்த்தமானவை மற்றும் ஆழமானவை.
“இருக்கிறத வச்சி நல்லா வாழணும். கஷ்டம் வரும் அதே நேரத்துல நல்லதும் வரும். எல்லாத்தையும் தாழ்ந்துதான் வாழ்க்கையை ஓட்டணும்” என்கிறார் சத்தியமங்கலம் வனப் பகுதியைச் சார்ந்த ஜடையன் என்ற ஊராளி பெரியவர். இங்கு ‘எல்லாத்தையும் தாழ்ந்துதான் வாழ்க்கையை ஓட்டணும்’ என்று இவர் சொல்வது “பெரிய மறைபொருளாக நம் கண்முன் வெளிப்படும் வாழ்க்கையின் புரிந்து கொள்ளமுடியாத நிகழ்வுகளைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்வதிலேதான் நிறைவிற்கான நிம்மதிக்கான சூத்திரம் உள்ளது” என்பதை உணர்த்துகிறது.
இத்தகையை ஆழ்ந்த வாழ்வியல் புரிதல்கள் பழங்குடி இனங்களுக்கு வெகு இயல்பாக இருப்பதைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியவில்லை. ஒரு வேளை ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் இந்த ஆழ்ந்த வாழ்வியல் ஞானம் ஆதியில் இருந்திருக்கும். நாகரிகம் வளர்ச்சி என்ற பெயரில் பல செயற்கைத் தனங்களைத் தழுவிக் கொண்டதன் காரணமாக எதிலும் நிறைவின்றி எப்பொழுதும் பரபரப்புடன் இருக்கப் பழக்கப்பட்டிருக்கிறோம்.
“மனிதகுலம் அடைய விரும்பும் மிக உயர்ந்த சமூக விழுமியங்களும் மேலைச் சமூகத்தார் வளர்த்துக் கொண்டதாக எண்ணும் விழுமியங்களும் இந்தியாவில் பழங்குடிகளிடம் பெரிதும் காணப்படுகின்றன. சாதிப் படிநிலையற்ற சமூகம், ஆண்-பெண் பாலின உறவில் சமத்துவம், ஆணாதிக்கம் குறைந்த சமூக வாழ்வு, காதலித்தோ விரும்பியோ திருமணம் செய்துகொள்ளல், தனிமனித சுதந்திரமும் தன்னியல்புப் போக்கும் மிகுதியாகக் கொண்டிருத்தல் போன்ற பல உகந்த கூறுகள் பழங்குடிகளின் பண்பாட்டில் வளர்ந்துள்ளன. இவற்றைத் தமிழகப் பழங்குடிகளிடமும் காண முடியும்.” என்று முனைவர் பக்தவச்சலம் தனது ‘தமிழக பழங்குடிகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
ஊராளி பழங்குடி மக்கள் மத்தியில் பல வருடங்கள் வாழ்ந்த அனுபவத்திலிருந்து இது முற்றிலும் உண்மை என்று எவ்வித ஐயமுமின்றிக் கூற முடியும்.
பழங்குடி மக்களிடம் தொன்மை நீதியும் வாழ்வின் ஞானமும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கு எடுத்துரைப்பது நலம் பயக்கும்.
பெண்களுக்கான மாண்பும் சுதந்திர வெளியும்:
பழங்குடி சமூகத்தில் பெண்களுக்கு நிறைய சுதந்திரம் உள்ளது. பெண்கள் அவர்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்வதற்கான சூழல் உள்ளது. தன் கணவருடன் வாழப் பிடிக்கவில்லை என்று ஒரு பெண் திரும்ப பிறந்த வீட்டிற்கு வருதலையும், அப்படி கணவனை விட்டுவந்த பெண்ணோ அல்லது கணவனை இழந்த பெண்ணோ தனக்குப் பிடித்த வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்தலையும் இந்த பழங்குடி சமூகம் வெகு இயல்பாக ஏற்றுக் கொள்கிறது.
எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பெண்கள் இனத்தை இழிவுபடுத்தும் அவமதிப்புக் குள்ளாக்கும் வரதட்சணை என்ற பழக்கம் இங்கு இல்லை. இங்கு ஆண்கள்தான் பெண் வீட்டாருக்குப் பணம் கொடுக்க வேண்டும். ஒரு பெண்ணை மணம் செய்வதற்குப் பெண் வீட்டாருக்கு ஆண் வீட்டார் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கொடுக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு பெண் வீட்டிற்குப் பணம் கொடுத்தல் என்பது மிகவும் நீதியான முறையாகத்தான் இருக்கிறது.
இழையோடும் சுதந்திரமும், சுயசார்பும்:
இவர்கள் அலைந்து திரியும் காடுகளின் சுதந்திர வெளி இவர்களின் வாழ்வு முறையிலும் நிறைந்திருக்கிறது. இவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரம் குறிப்பிடத்தக்கது. இவர்கள் எதையும் குழந்தைகள் மேல் திணிப்பதில்லை. அவர்களுடைய விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்கள் அடிப்பதை வெகு அரிதாகத்தான் பார்க்க முடியும். பள்ளிக்குப் போகமாட்டேன் என்று குழந்தைகள் சொன்னால் கூட சரி உன் விருப்பப்படி செய் என்று விட்டுவிடுகிறார்கள்.
14 முதல் 16 வயது அடைந்துவிட்டாலே பிள்ளைகள் தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள். ‘அவரவர் வாழ்வை அவரவர் முடிவுசெய்து கொள்ளட்டும்’ என்று இவர்கள் அனைவரிலும் இழையோடும் ஒரு சுயசார்பு மனநிலை இந்த சுதந்திரச் சூழலுக்கு அடிப்படையாக உள்ளது.
எவ்வளவு நல்ல வேலையாக இருந்தாலும் உயர் அதிகாரிகள் திட்டிவிட்டார்கள் என்பதற்காக அந்த வேலையை உதறிவிட்டு வரும் பல ஊராளி இளைஞர்களைக் காண முடியும். இவர்களுக்கு எவ்வளவு வசதி, பணத்தை விடவும் தங்களின் சுதந்திரம், தன்மானம் முக்கியம். ஆனால், பொது சமூகத்தில் இந்தச் சமூகம் எதிர்பார்க்கிற வசதி நிறைந்த வாழ்வை வாழ்வதற்காகப் பல அவமானங்களை, அநியாயங்களைப் பொறுத்துக் கொண்டு அலுவலகத்தில் அல்லல்படுபவர்கள் ஆயிரம் ஆயிரம்.
அவசியங்கள் அவசரங்கள் அற்ற வாழ்வு:
பழங்குடிகளின் வாழ்வை இரு வார்த்தைகளுக்குள் அடக்கமுடியுமென்றால் அது இதுதான், “அவசரங்கள் அவசியங்களற்ற வாழ்வு”. எதுவும் இல்லாமல் இவர்களால் வாழமுடியும். இவர்களுடைய தேவைகள் மிகக் குறைவு. இது இருந்தால்தான் இது நடந்தால்தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்று எதையும் வகுத்துக் கொள்வதில்லை. இவர்களின் தொழில் என்பது பெரும்பாலும் இவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்காக மட்டும்தான் செய்யப்படுகிறது. “எங்க இனத்திற்கு சம்பாதிக்கணும் என்கிற எண்ணமே கிடையாது” என்கிறார் காலன் என்ற ஊராளி பெரியவர். இந்த சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஊராளி பழங்குடியினர் பெரும்பான்மையாக இருந்தாலும் எந்த கிராமத்திலும் இவர்களில் ஒருவர் கூட கடைகள் வைத்து வியாபரம் செய்வதை நாம் பார்க்க முடியாது. எல்லா வியபாரங்களும் இங்கு வந்தேறிய மற்ற இனத்தவர்களால்தான் செய்யப்படுகிறது. சாதனை, வெற்றி போன்ற வார்த்தைகள் இவர்களுடைய வாழ்க்கை முறையில் இல்லை. இந்தப் பொதுச் சமூகம் செய்து வைத்திருக்கும் கிரீடங்களில் தங்கள் தலை, கைளைப் பொருத்திக் கொள்ள இவர்கள் விரும்புவதில்லை. எதையும் இன்றே உடனே முடித்துவிடவேண்டும் என்ற அவரசம் இவர்களிடம் இருப்பதில்லை. இவர்களுடைய காலம் என்பது கடிகாரத்திற்குகுள் அடங்கிப்போகும் ஒன்று கிடையாது.
இயற்கையின் போக்கில் வாழ்தல்:
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்களின் இசைக் கருவிகளின் சப்தம் கூட இவர்கள் வாழும் காட்டுப் பகுதிகளில் உள்ள விலங்குகளை, பறவைகளைத் தொந்தரவு செய்யாத மென்மை, தன்மை உடையது. தன் குடும்பத்தில் நடக்கும் இறப்பைக் கூட இவர்களால் வெகு இயல்பாகக் கடந்துபோக முடிகிறது. இறப்பு நடந்த அடுத்த நாளே இவர்கள் வீடுகளில் இயல்புநிலை திரும்புவதைக் காணமுடிகிறது. பெரிய மருத்துவமனைகளில் சேர்த்து உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று இவர்கள் நினைப்பதில்லை. சாவையும் வாழ்வின் இன்னொரு நிலையாகப் பார்க்கும் மனப்பாங்கு உள்ளது. உயிரை இழுத்துப் பிடித்துக் வைக்க வேண்டிய ஒன்றாக இவர்கள் கருதுவதில்லை.
பொதுவுடமை மனப்பாங்கு:
ஆதிகாலங்களில் யார் வேட்டைக்குப் போய் கறி கிடைத்தாலும் அதை ஊரே பங்கிட்டு உண்டிருக்கிறது. பழங்குடி மக்கள் மத்தியில் பிச்சை எடுப்பவர்கள் யாரும் இல்லை. எல்லாக் குழந்தைகளையும் இந்தச் சமூகம் தன் வீட்டுக் குழந்தையாகப் பாவிக்கிறது. ஒரு குழந்தைக்கு அந்த ஊரில் உள்ள எந்த வீட்டிலாவது சோறு கிடைத்துவிடும். பழங்குடி சமூகங்களில் ஒருவொருக்கொருவர் உதவுவது முக்கிய அம்சமாக உள்ளது. குறிப்பாக இவர்களுள் சில பேருக்கு இருக்கும் சிறிய விவசாய நிலங்களில் ஒருவொருக்கொருவர் மாற்றி மாற்றி வேலை செய்து கொள்கிறார்கள்.
ஊராளி பழங்குடி மொழியில் “நன்றி” என்ற வார்த்தை கிடையாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ பலரின் கூட்டுமுயற்சிகள்தான் ஒருவருடைய அன்றாடத் தேவையை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதை வாழ்வியல் ஞானமாக உணர்ந்து ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து தனிமனித வளர்ச்சியைவிட ஒரு குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழங்குடி சமூகத்தில் இந்த நன்றி என்ற வார்த்தையின் அவசியம்தான் என்ன?
பதவி என்பது பணிக்கானது மட்டுமே:
ஊராளி சமூகத்தில் சில கிராம நிகழ்வுகளை ஒருங்கிணைக்க, பிரச்சினைகளைத் தீர்க்க சில பேருக்கு சிறப்புப் பதவிகள் அல்லது பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புப் பொறுப்புகளை ஏற்று நடத்துபவர் அந்தக் குறிப்பிட்ட சூழலில் மட்டும்தான் சிறப்பு மரியாதை பெறுகிறார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு அவர் கிராமத்தில் மற்ற எவரையும் போலத்தான் நடத்தப்படுகிறார். கிராம பூசாரிகூட அந்த பூசை செய்யும் நேரத்தில் மட்டும்தான் அந்த வேடத்தை தரித்துக் கொள்கிறார். மற்ற நேரங்களில் எல்லாரையும் போல் கூலி வேலை, வயல் வேலைகளில்தான் ஈடுபடுகிறார்.
பொது சமூகம் பழங்குடி மக்களைப் பற்றி நினைக்கும்போது ‘அவர்கள் ஏதோ நாகரிகத்தில் குறைந்தவர்கள், நமது உதவிக்காக காத்திருப்பவர்கள் என்று எண்ணாமல் நமக்குத் தேவையான வாழ்வியல் ஞானத்தைப் பாதுகாத்து வைத்திருப்பவர்கள், நம்மை விடவும் பல மடங்கு மேன்மையான வாழ்வு முறையைக் கொண்டவர்கள் என்று எண்ணுவது பழங்குடி மக்களின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் மற்றும் நமது வாழ்வு முறையை மறுவாசிப்பு செய்யும் செயலாக அமையும்.
கட்டுரையாளர்: பிலிப் குமார். ஜா
மீனவர்களுடன் பயணிக்கும் ஆர்கலி என்ற அமைப்பின் இயக்குநர்,
தொடர்புக்கு: philipkmr@gmail.com.